No menu items!

கார்கே – காங்கிரசை காப்பாரா?

கார்கே – காங்கிரசை காப்பாரா?

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மல்லிகார்ஜூன கார்கே. நேரு – இந்திரா குடும்பத்தைச் சேராதவர்கள் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்பது புதிதல்ல. நேரு காலத்தில் தேபார் என்பவர் நான்காண்டுகள் தலைவராக இருந்திருக்கிறார். இந்திரா காலத்தில் காமராஜர், சஞ்சீவரெட்டி, நிஜலிங்கப்பா, ஜெகஜீவன்ராம்.. என பல பெரிய தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ராஜீவ் மறைவுக்குப் பிறகு நரசிம்ம ராவும் சீதாராம் கேசரியும் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். அதனால் நேரு குடும்பத்தை சேராதவர்கள் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பது புதிதல்ல.

ஆனால் இவர்களுக்கெல்லாம் இல்லாத சவால் மல்லிகார்ஜூன கார்கேக்கு இருக்கிறது. அவர்கள் காலத்தில் காங்கிரஸ் பலமாகவும் பல சமயங்களில் ஆட்சியிலிருக்கும் கட்சியாகவும் இருந்திருக்கிறது. ஆனால் இன்று தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் தோற்று சரிவைத் தடுத்து நிறுத்த முடியாத திணறலில் காங்கிரஸ் இருக்கிறது.

கார்கேக்கு 80 வயதாகிறது. கன்னடத்துக்காரர். 50 வருடங்களாக காங்கிரசில் தொடர்கிறார். தீவிர இந்திரா குடும்ப விசுவாசி. கட்சியில் அவருக்கு கிடைக்க வேண்டிய உயர்வுகள் கிடைக்காதபோதும் கட்சியின் மீது எந்த அதிருப்தியும் கொள்ளாமல் இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என்று தலைமுறைகளைத் தாண்டி பணி செய்துக் கொண்டிருக்கிறார்.

1972 முதல் 2008 வரை தொடர்ந்து ஒன்பது முறை கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனை கார்கேக்கு உண்டு. 2009ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டு அதிலும் வெற்றி. தேசிய அரசியலுக்கு மாறி மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி. தேர்தல் அரசியலில் கார்கே ஒரே ஒரு முறைதான் தோற்றிருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோற்றதுதான் அவர் வாழ்க்கையில் சந்தித்த ஒரே தேர்தல் தோல்வி. இப்போது காங்கிரஸ் தலைமைக்கான தேர்தலிலும் வென்றுவிட்டார். 2021 முதல் ராஜ்ய சபா எம்.பி.யாக இருக்கிறார்.

9,915 வாக்குள் கொண்ட காங்கிரஸ் தலைமைக்கான தேர்தலில் சுமார் 9,500 வாக்குகள் பதிவாகின என்று கூறப்பட்டது. கார்கே 7,897 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். சசிதரூருக்கு 1,072 வாக்குகள் கிடைத்ததாக செய்திகள் சொல்கின்றன. செல்லாத வாக்குகள் 416. பெரிய வெற்றிதான். இத்தனைப் பெரிய வெற்றிக்கு காரணம் அவருக்கு சோனியா குடும்பத்தின் ‘ஆசிர்வாதம்’ இருந்ததுதான் என்று காங்கிரஸ்காரர்களே குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தை அழகாகவும் யாருக்கும் புரியாத வகையிலும் பேசும் எழுதும் மெத்தப் படித்த சசி தரூர் தோற்பார் என்பது எதிர்ப்பார்த்ததுதான்.

காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சி தொடங்கிவிட்டது என்று தோற்றுப் போன சசி தரூர் கூறியிருக்கிறார்.

தலித் சமூகத்தை சார்ந்த மல்லிகார்ஜூன கார்கே தலைவராகியிருப்பது காங்கிரசை சரிவுகளிலிருந்து தூக்கி நிறுத்துமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

இன்னும் 18 மாதங்களில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இப்போது நாடாளுமன்றத்தில் 53 இடங்கள்தாம் இருக்கின்றன. அந்த எண்ணிக்கையை உயர்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதற்கான வழியில் காங்கிரசை கார்கே நடத்திச் செல்ல வேண்டும்.

கார்கே தனித்துவமான தலைவரா அல்லது சோனியா, ராகுல், பிரியங்கா சொல்லும் வழியில் நடப்பாரா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இந்தக் கேள்வியைக் கேட்டால் இன்று பாஜகவுக்கு தலைவராக ஜே.பி.நட்டா இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள்தாம் பாஜகவில் செயல்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வியையும் கேட்க வேண்டியுள்ளது.

எந்தக் கட்சியின் தலைவரும் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க இயலாது என்பதே யதார்த்தம். அவருடன் இருப்பவர்களின் ஆலோசனைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுப்பார். இது இன்றைய அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

சரி, கார்கே தலைமைக்கு வந்திருப்பதால் காங்கிரசுக்கு பலமா?

பலங்களும் உண்டு பலவீனங்களும் உண்டு.

குடும்பக் கட்சி, இந்திரா குடும்பத்தை சேர்ந்தவதான் தலைவராக முடியும் என்ற குற்றச்சாட்டு உடையும். கார்கே தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பது வாக்குகள் பெற உதவும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் பாலமாக இருந்த அனுபவங்கள் கார்கேக்கு உண்டு. இது காங்கிரசுக்கு கை கொடுக்கும். 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் பல மாநிலத் தலைவர்களும் கார்கேக்கு பழக்கம். இது ஒரு பலம்.

பலவீனங்களும் அதிகம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள்தாம் இருக்கின்றன. அதற்குள் வெற்றி வழியைக் கண்டுபிடிக்க இயலுமா என்பது சந்தேகமே. இந்தத் தேர்தல் மூலம் காங்கிரசில் உள்ள கோஷ்டி பூசல்கள் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகமே. மோடி – அமித்ஷாவின் இரட்டை ஆளுமையை கார்கே – ராகுல் காந்தி ஆளுமை முந்துமா என்பதும் கேள்விக் குறியே.

பார்ப்போம், காங்கிரசை கார்கே காக்கிறாரா என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...