சமீபகாலமாகவே சமூக ஊடகத்தில் சினிமா நட்சத்திரங்கள், திரைப்படங்களைப் பற்றி ஏடாக்கூடமாக பதிவிட்டு வருகிறார் ஒருவர். இவர் அரபு அமீரகத்தில் இருப்பதாகவும், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் என்றும் தன்னை கூறிக்கொள்வது வழக்கம்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு இவர் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே பற்றி ஒரு ட்வீட் செய்தார். அதில் பூஜா ஹெக்டே மன அழுத்தத்தில் இருக்கிறார். எந்த ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோவும் பூஜாவை நடிக்க அழைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாததால் பூஜா தற்கொலைக்கு முயன்றார். ஆனால் நல்லவேளையாக பூஜா ஹெக்டேவை அவரது குடும்பத்தினர் காப்பாற்றிவிட்டார்கள் என்று ட்வீட் செய்தார்.
ஆரம்பத்தில் இந்த நபரை யாரும் கண்டுகொள்ளாததால், அதையே வாய்ப்பாக எடுத்து கொண்டு ஒருத்தரை விடாமல், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ட்வீட் செய்ய ஆரம்பித்தார். ஆனால் பூஜா ஹெக்டே அவருக்கு சட்டரீதியான பதிலடி கொடுக்க தயாரானார். இதனால் கொஞ்சம் அமைதியாகிவிட்டார்.
ஆனால் இப்போது மீண்டும் அவர் ஸ்பாய்லர் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
ரஜினி நடித்திருக்கும் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10-ம் தேதியும், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்திருக்கும் ‘போலா ஷங்கர்’ ஆகஸ்ட் 11-ம் தேதியும் வெளியாக இருக்கின்றன.
இந்த இரு படங்களைப் பற்றி பதிவிட்டு இருக்கும் அந்த நபர், ஜெயிலருக்கு 2 ஸ்டாரும், போலா ஷங்கருக்கு 1 ஒரு ஸ்டாரும் கொடுத்திருக்கிறார்.
அதோடு விட்டுவிடாமல், ஜெயிலர் வழக்கமான ஒரு ஆக்ஷன். தாத்தா ரஜினிகாந்த் சண்டைக்காட்சிகள் முட்டாள்தனமாக இருக்கின்றன. படத்தில் ரஜினியைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ப்ளாக் காமெடியிலான கதை திரைக்கதை சலிப்பூட்டுகிறது. ஆக்ஷன் காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் டைரக்ஷன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. தமன்னா வயதான கவர்ச்சிநாயகி போல் இருக்கிறார்’ என்று ஸ்பாய்லரை வெளியிட்டு இருக்கிறார்.
அடுத்து சிரஞ்சீவியையும் இவர் விட்டு வைக்கவில்லை. ‘போலா ஷங்கர்’ ஒரு மாஸ் மசாலா ப்ளாப் படம். தாத்தா சிரஞ்சீவி மூடு வந்தவர் போல இருக்கிறார். படங்களில் இவர் இளம் நடிகைகளின் உடல் பாகங்களை தொடுகிறார். வேதாளம் படத்தின் மிக மோசமான ரீமேக் இது. முட்டாள்தனமாக சண்டைக்காட்சிகள். தெலுங்கு ரசிகர்கள் இன்னும் வளரவேண்டும். இந்தமாதிரி முட்டாள்தனமான படங்களை பார்க்காமல் தவிர்க்கவேண்டும்’ என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.