2006 – 2011 ஆண்டுகளில் திமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக அதிமுக ஆட்சியின்போது பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு என்ன?
இன்று காலை 10.45 மணியளவில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை வாசித்தார். அந்த தீர்ப்பில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் மனைவி ஆகியோர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாள்கள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் பொன்முடி இழந்துள்ளார். திருக்கோவிலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்துள்ளார்.
பொன்முடி பதவி இழந்ததால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கின் பின்னணி:
2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். அந்த காலக் கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 லட்சம் சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் கடந்த 2016-ஆம் ஆண்டு விடுவித்து தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஊழல் தடுப்புப் பிரிவு 2017-ஆம் ஆண்டு மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்தது. அந்த வழக்குக்கான தீர்ப்புதான் இப்போது வந்துள்ளது.
திமுக சொல்வது என்ன?
“குறித்த நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யாததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி உயர் நீதிமன்றம் பொன்முடி மீதான விடுதலையை ரத்து செய்துள்ளது” என திமுக எம்.பி.,யும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்திருக்கிறார்.
” பொன்முடியின் மனைவி சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் விடுதலையை ரத்து செய்துள்ளது. 1996 – 2001ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது வேறொரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில்ல், பொன்முடியின் மனைவிக்கு குடும்ப சொத்தாக 100 ஏக்கர் சித்தூரில் இருந்ததும், அவரின் சகோதரருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடுகள் செய்திருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த சாட்சியங்களை இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கில் எடுத்துவரவில்லை. எனினும்கூட, பொன்முடியின் மனைவி விசாலாட்சி மிகவும் லாபகரமாக தன்னுடைய தொழில்களை நடத்திவந்தார் என்பதை இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் 5 கோடி ரூபாய்க்கு மேலாக ஒருவருடத்துக்கு வியாபாரம் நடத்தப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்த நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யாததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி உயர் நீதிமன்றம் விடுதலையை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் நிச்சயமாக திமுக சட்டத்துறை சார்பில் மேல்முறையீடு செய்து மிக விரைவில் பொன்முடிக்கு விடுதலையை பெற்றுத்தருவோம்”
நீதிபதி மீது சந்தேகம்:
” நீதிபதி என்பவர் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால் சட்டத்தின் அடிப்படையில் , அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றினார். அப்போது இந்த வழக்கில் இந்த சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார். இந்த வழக்கு நடக்கும் போது அது தெரியவில்லை , நேற்றைக்கு தான் பொன்முடி அவர்களுக்கு தெரிய வந்தது. அதை நீதிபதி அவர்களிடம் எடுத்து சொன்னோம். அப்போது நீதிபதி சொல்லும் போது, முன்னரே இதை தெரியப்படுத்தியிருந்தால்கூட இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன் என கூறினார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒரு பிரச்சனை. அந்த பிரச்சனையை நாங்கள் நிச்சயம் உச்சநீதிமன்றத்திலும் எடுத்து வைப்போம்” என்கிறார் என்.ஆர். இளங்கோ.
எடப்பாடி பழனிசாமி:
“ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் என்றால், அது இந்தியாவிலேயே திமுக அரசுதான். அனைத்து இடங்களிலும் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன். இதுதான் அவர்களின் தாரக மந்திரம். திமுகவில் தற்போது இருவர் சென்றிருக்கிறார்கள். இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு இரண்டரை ஆண்டு காலம் ஊழல் செய்ததுதான் அவர்கள் சாதனை” என்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:
“மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு @mkstalin அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாமக தலைவர் ராமதாஸ்:
எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி-க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம். அரசியலும், பொது வாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாமக-வின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது” என ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்பு:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதேபோல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(3)-வது பிரிவின் கீழ், ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், சிறை தண்டனை காலத்திலும், அதற்கு பிறகு 6 ஆண்டு காலத்துக்கும் தேர்தலில் போட்டியிட தகுதியில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பதவி இழந்துள்ளனர். 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தொடர்ந்து கலவர வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதா, பாலகிருஷ்ண ரெட்டி வரிசையில் அமைச்சராக இருந்தேபோதே பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.