மீண்டும் ஒரு போர் உருவாகிவிட்டது, கொடூரமாக தீவிரமாக.
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேல் தாக்கப்பட்டது உலகம் எதிர்பார்க்காத அதிர்ச்சி. மிக முக்கியமாய் உலகின் உச்ச உளவுத் துறையான மோசாத் (Mossad)அமைப்பை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு பேரதிர்ச்சி.
கொஞ்சமல்ல ஐயாயிரம் ஏவுககணைகள் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவப்பட்டன. எல்லை வேலிகளை உடைத்தெறிந்து பல முனைகளிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்தார்கள். விடுமுறை தினத்தில் கொண்டாட்ட மனநிலையில் பாலஸ்தீன எல்லை ஓரமாக கூடியிருந்த இஸ்ரேலிய பொதுமக்கள், அந்தப் பகுதியில் பாதுகாப்பில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தின் அதிசக்தி டாங்குகளை ஹமாஸ் அமைப்பினர் கைப்பற்றினர். பணயக் கைதிகளாக இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்துக்கு கடத்திச் செல்லப்பட்டனர். சட்டென்று தொடங்கி சில மணி நேரம் நடந்த தாக்குதலில் இத்தனை சம்பவங்கள் நடந்துவிட்டன. இஸ்ரேலுக்கு இது மிகப் பெரிய சர்வதேச பாதிப்பு.
அசைக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட அமெரிக்காவை அசைத்துப் பார்த்த 2001 செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற ஒரு தாக்குதல் இது. பாதுகாப்பு, அறிவியல், உளவு என உலகின் பல துறைகளில் அதி புத்திசாலிகளை கொண்டுள்ள நாடு என புகழப்படும் இஸ்ரேலுக்கு இது பலமான மறக்க இயலாத அடி. உள்நாட்டு பரிதாப இழப்புகள் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அதன் உளவு மற்று பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக் குறியாகிவிட்டன. நான் உலகின் அதி புத்திசாலி என்று பிம்பப்படுத்திக் கொள்ள முடியாது.
இந்த சம்பவம் ஏன் நடந்தது? எதற்கு நடந்தது?
அதற்கு வரலாற்றில் சுமார் 80 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும். யூதர்களைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும். யூதர்கள் என்றாலே புத்திசாலிகள், அறிவுக் கூர்மை மிக்கவர்கள் என்ற பிம்பம் உண்டு. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் யூதர்கள் பரவி இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு நாடு கிடையாது. இவர்கள் அமைதியானவர்கள். யார் வம்புக்கும் போகாதவர்கள். சமூகத்தில், அதிகாரித்தில் எப்போதும் மேலிடத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஒரு கொடூர வில்லன் ஒருவன் வந்தான். அவன் ஹிட்லர். யூதர்களை ஓட ஓட விரட்டினான். ஜெர்மனியில் அதிகமான அளவில் இருந்த லட்சக்கணக்கான யூதர்களை சித்திரவதை செய்து கொன்று குவித்தான். ஹிட்லருக்கு பயந்து யூதர்கள் பல நாடுகளில் குடியேறினார்கள். அப்படி குடியேறியதில் ஒரு நாடுதான் பாலஸ்தீனம்.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஹிட்லர் தற்கொலை செய்துக் கொள்ள யூதர்கள் பெருமூச்சு விட்டார்கள். தங்களுக்கு சொந்தமாய் ஒரு இடம் இருந்தால் அங்கு சுதந்திரமாக பெருமூச்சு விடலாமே என்று சிந்திக்கும்போது கிடைத்த இடம்தான் பாலஸ்தீனம்.
ஹிட்லருக்கு பயந்து பல யூதர்கள் பாலஸ்தீனம் பகுதியில் குடியேறியிருந்தார்கள். 1930களில் தொடங்கியது யூதர்களின் குடியேற்றம். யூதர்கள் அங்கே நிலங்கள் வாங்கத் தொடங்கினர். தொழில்கள் நடத்த ஆரம்பித்தார்கள். யூதர்களுக்கு நிலத்தை விற்பதை குறித்து அரேபியர்கள் அதிகம் யோசிக்கவில்லை. பணம் வருகிறது என்ற ஒரு காரணம் மட்டுமல்ல, பாவம் துரத்தப்படும் இனமாக இருக்கிறது அவர்களுக்கு வாழ்வு கொடுக்கலாம் என்ற நல்லெண்ணமும் காரணம்.
அரேபியர்களின் பிரதேசமாய் இருந்த பாலஸ்தீனம் மெல்ல, மெல்ல யூதர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக மாறியது. யூதர்கள் பாலஸ்தீனப் பகுதியை விரும்பியதற்கு மதரீதியாகவும் காரணம் இருக்கிறது. அங்குதான் கிறிஸ்தவர்களின் புனித தலமான ஜெருசலேம் இருக்கிறது. யூதர்கள் அடிப்படைவாத கிறிஸ்துவர்கள். கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்ல பாலஸ்தீனப் பகுதியில் இஸ்லாமியர்களுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதத்தலங்கள் இருக்கின்றன.
இப்படி போய்க் கொண்டிருந்தபோது உலகப் போரில் பாலஸ்தீனப் பகுதிகளை ஆண்டுக் கொண்டிருந்த ஓட்டோமேன் பேரரசு வீழ்ந்தது. அந்தப் பகுதிகள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. எங்களுக்குதான் பாலஸ்தீனம் என்று யூதர்கள் சொல்ல, நாங்கள்தான் அந்த மண்ணின் பூர்வகுடிகள் எங்களுக்குதான் என்று அரேபியர்கள் சொல்ல உலகப் போர் முடிந்ததும் இந்த மோதல் உருவாகியது. நிலம் சார்ந்தும் மதம் சார்ந்தும் மோதல்கள் தீவிரமடைந்தன.
1947ல் பிரிட்டிஷ் அரசாங்கம் வழக்கம்போல் பாலஸ்தீனத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்தது. பிரச்சினை ஐநா சபைக்கு கொண்டு போகப்பட்டது. அங்கே பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டது. ஒரு பகுதியை யூதர்களுக்கும் மற்றொரு பகுதியை அரேபியர்களுக்கும் பிரித்து கொடுத்து ஜெருசலேம் நகரை தலைநகராக்கி அந்த நகரம் சர்வதே பிரதிநிதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அறிவித்தது. ஆனால் அதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
1948ல் பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷ் படைகள் வெளியேறின. யூதர்கள் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் நாடாக அறிவித்தனர். அதற்கு உலக நாடுகளின் ஆதரவும் கிடைத்தது. பாவம் யூதர்கள் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளானவர்கள், நாடில்லாமல் சிரமப்படுகிறார்கள் என்ற பரிதாபப் பார்வை கிடைத்தது. ஆனால் மற்றவர் நாட்டை ஆட்டையை போடுகிறார்கள் என்று கவலைப்படவில்லை.
பாலஸ்தீனியர்களுக்கு அரபு நாடுகள் ஆதரவு அளித்தன. அந்த ஆதரவு மூலம் இஸ்ரேலிடமிருந்து சில இடங்களை மீட்டு பாலஸ்தீனமாக அறிவித்தார்கள். மேற்கு கரை, காசா போன்ற பகுதிகள் பாலஸ்தீனம் இப்போது அழைக்கப்படுகிறது. 1988ல் தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 2012ல் உறுப்பினர் இல்லாத பார்வையாளர் நாடாக பாலஸ்தீனம் ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
இஸ்ரேல் என்ற நாடு உருவானதிலிருந்து இதோ 2023 அக்டோபர் வரை மோதல்கள்தாம்.
இபோது நடந்த தாக்குதலை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. பாலஸ்தீன விடுதலைக்காக பல அமைப்புகள் போராடியிருக்கின்றன. அதில் முக்கியமான அமைப்பு PLO – Palestine Liberation Organization என்ற அமைப்பு. இதன் தலைவராக இருந்த யாசர் அரஃபாத் பல நாடுகளுடன் நல்ல நட்பில் இருந்தார். குறிப்பாக இந்தியாவுடன் மிகுந்த நட்பு உண்டு.
நேரு காலத்தில் இஸ்ரேல் நாட்டை ஏற்றுக் கொள்ள இந்தியா தயங்கியது பிறகு பட்டும் படாமல் இஸ்ரேலுடன் பழகியது. 1953ல் பம்பாயில் இஸ்ரேலிய தூதரகம் செயல்படத் தொடங்கியது. 1992 நரசிம்மராவ் பிரதமராக இருந்த போதுதான் முதல் முறையாக இஸ்ரேலில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய – இஸ்ரேல் நட்பு வளர்ந்து மோடி பிரதமராக இருக்கும் இன்று மிகவும் பலப்பட்டு இருக்கிறது.
பிஎல்ஓ-வின் யாசர் அராஃபாத் போராளிதான், ஆனால் அதி தீவிர தலைவர் அல்ல. இரு பக்க நியாயங்களையும் பார்ப்பவராக இருந்தார். 1994லிருந்து அவர் மறைந்த 2004 வரை பாலஸ்தீனத்துக்கு தலைவராக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு பாலஸ்தீனத்தின் மிக முக்கிய அமைப்பாக ஹமாஸ் உருவாகியது. இந்த அமைப்பு தீவிரத் தன்மை உடையது. 1987லேயே ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் யாசர் அராஃபாத் மறைவுக்குப் பிறகுதான் முன்னனிக்கு வந்தது. 2007லிருந்து பாலஸ்தீனத்தை ஆள்வது ஹமாஸ்தான். இப்போது இஸ்ரேலை கொடூரமாக தாக்கியதும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பை அரசாக பாலஸ்தீன மக்கள் பாக்கிறார்கள். தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் பார்க்கிறது.
பாலஸ்தீனமாக அறியப்படும் காசா பகுதி (Gaza Strip) 41 கிலோமீட்டர் நீளம் 10 கிலோமீட்டர் அகலம் உள்ள பகுதி. இங்குதான் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இந்தப் பகுதி தவிர மேற்கு கரை (West Bank) என்ற அழைக்கப்படும் மேற்கு கரை பகுதியும் பாலஸ்தீனத்துடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மொத்த மக்கள் தொகை 49 லட்சம். இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகை 93 லட்சம். இவர்களுக்குள் இத்தனை ஏவுகணை தாக்குதல்கள், ஓலங்கள், சாவுகள். முடிவில்லா துயரங்கள்.
இத்தனை வருட இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் வரலாற்றில் பல மோதல்கள், போர்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சமீப வருடங்களில் மிகக் கடுமையான தாக்குதல் நடைபெற்றிருப்பது இப்போதுதான். 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
இதற்கு நிச்சயம் இஸ்ரேல் பலமான அடியைத் திருப்பிக் கொடுக்கும். தன் மக்களை இழந்திருக்கிறது. உலக அரங்கில் தனது ‘பலமிக்க’ என்ற பிம்பத்தை இழந்திருக்கிறது. இந்த இழப்புகளை ஈடு செய்ய பதிலடி பலமாகவும் பயங்கரமாகவும் இருக்கும்.