கோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசு, ‘நண்பன்’ படத்திற்குப் பிறகு ஷங்கரும் விஜயும் மீண்டும் இணைகிறார்கள். இந்தப் படத்தை பான் – இந்தியா படமாக எடுக்கலாம் என யோசித்த போது, ஷாரூக்கானையும் நடிக்க வைக்கலாம் என்று ஷங்கர் யோசித்ததாகவும், இந்த திட்டத்திற்கு விஜயும் ஓகே சொல்லி விட்டார் என்றும் ஒரு பேச்சு. இந்தப் படத்தின் பட்ஜெட் 900 கோடி என்றும் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார்கள்.
இது உண்மையா என்று கோலிவுட்டில் விசாரித்தால், விஜய் இருக்கிறார். ஷாரூக் இருக்கிறார். அப்படியே லோகேஷ் கனகராஜின் ‘எல்சியூ’ வையும் ஷங்கர் இந்த ப்ராஜெக்ட்டில் சேர்த்துவிட்டார் என்றால் 900 கோடி என்ன 1000 கோடிக்கே படமெடுக்கலாம் என்று சிரிக்கிறார்கள்.
உண்மையில் ஷங்கர் இன்னும் இந்த வருடம் இறுதி வரை வேறு எந்தப் படத்திலும் கமிட்டாக முடியாது. காரணம், கமல் நடிக்கும் ‘இந்தியன் – 2’ மற்றும் ராம்சரண் நடிக்கும் ‘ஆர்சி15’ என் இரண்டுப் படங்களுக்கும் மாற்றி மாற்றி ஷூட்டிங் வைத்து கொண்டிருக்கிறார்.
இந்த இரண்டுப் படங்களுக்கு அடுத்து ஷங்கர் இப்போது திட்டமிட்டு இருப்பது ‘வேள்பாரி’ கதையைதான்.
மு.வெங்கடேசன் எழுதியிருக்கும் இந்த நாவலைதான் ஷங்கர் அடுத்த படமாக எடுக்க இருக்கிறார். மு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் அரசியல் வேலைகளைத் தவிர்த்துவிட்டு அவரால் வேள்பாரியின் திரைக்கதையை எழுத முழுநேரமும் உட்கார முடியாது. இதனால் உதவிக்கு எழுத்தாளர்களை வைத்து கொண்டு வேள்பாரியின் திரைக்கதை வேலைகளை மும்முரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்.
வேள்பாரி மேக்கிங்கிற்கு மட்டுமே குறைந்தப்பட்சம் ஒரு வருடம் ஆகலாம் எனத் தெரிகிறது.
அடுத்து பட்ஜெட் விஷயம். இந்தியப் படங்களுக்கான வியாபாரம், வசூல் இவையெல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தால் அதிகப்பட்சம் 850 கோடி வரைதான் இருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் 900 கோடி
க்குப் படமெடுத்தால் லாபத்திற்கு பெரிய வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
ஷாரூக்கானின் ‘பதான்’ படத்தின் வசூலை வைத்து இப்படியொரு பேச்சு கிளம்பியிருக்கலாம். அப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் ஏறக்குறைய 800 கோடிதான் . இதிலிருந்தே இந்திய சினிமாவில் அதிகப்பட்ச வியாபாரத்தையும் வசூலையும் தெரிந்து கொள்ளலாம்.
இதனால் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத வரையில் இந்த ப்ராஜெக்ட் ஒரு கிசுகிசு மட்டுமே என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
விஜய் படத்தில் கமல்?
விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் கமல் நடிக்கிறாரா இல்லையா என்று ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
இந்த காம்பினேஷன் திரையில் தோன்ற வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்த்தால் அதற்குப் பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறது.
’விக்ரம்’ படம் வெளியானதும், ராஜ் கமல் இண்டர்நேஷனல் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கும் என்று கமல் மிக உற்சாகமாக சொன்னார்.
அப்படியொரு முயற்சியில் விஜயை வைத்து படமெடுக்கவும் கமல் தரப்பிலிருந்து முயற்சி செய்யப்பட்டதாம். கமலுடன் இருக்கும் மகேந்திரன், விஜயுடன் இருக்கும் நட்பின் அடிப்படையில் இது குறித்து பேசினாராம்.
இப்படியொரு சூழலில்தான் கமல் விஜய் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஒரு பேச்சு கிளம்பியது.
ஆனால் கமல் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்கு விஜய் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று சொல்கிறார்கள். படத்தயாரிப்பில் சுதந்திரம் இருக்காது. சீனியர் நடிகர் என்பதால் வேறெதுவும் பேசமுடியாது. பிரச்சினை வந்தால் உறவு கெட்டு விடும் என விஜய் தயங்குகிறாராம்.
விஜய் கமிட்டாகவில்லை என்றதுமே, கமல் தனது கேமியோ ரோல் பற்றி ஆர்வம் காட்டவில்லையாம்.
மறுப்பக்கம், தனது படமும் எல்சியூ கான்செப்ட்டில் வந்தால் அதில் தனக்கு என்ன மரியாதை இருக்குமென விஜயும் யோசிக்கிறாராம். அதனால் இது வழக்கமான விஜய் படமாகவே இருக்கவேண்டும் என்று விரும்புகிறாராம்.