No menu items!

சமந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சமந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சில சமயங்களில் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானதாக இருப்பதில்லை. சிலருக்கு எல்லாமும் இருக்கும்; ஆனால், எதுவுமே இல்லாதது போல் இருக்கும். இன்னும் சிலருக்கு எதுவும் இருக்காது; அதேநேரம் யாரும் அவர்களோடு இருப்பதும் இல்லை.

இப்படியொரு சூழலில்தான் சமந்தா இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.

சமந்தா தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே சொகுசான, ஆடம்பர வாழ்க்கையை அனுபவதித்தது இல்லை. காரணம் அவரது குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம். பெரிய ஆசைகள், ஆடம்பர விருப்பங்கள் இருந்தும் அவரால் எதையும் கொண்டாட முடியவில்லை. இதனாலேயே சிறுவயதிலிருந்தே அவருக்கு வாழ்க்கையில் வெல்வது என்பது ஒரு இலக்காகவே இருந்து வந்திருக்கிறது.

இல்லாதவற்றைப் பெற, வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற உந்துதலே அவரை மாடலிங் துறையில் களமிறங்க செய்தது. பின்னாளில் சினிமாவில் நட்சத்திரமாகவும் உயர்த்தியது.

சினிமாவில் ஒரு நட்சத்திரமாக அறிமுகமாகவது கூட சாத்தியம்தான். ஆனால், ஒரு முன்னணி நட்சத்திரமாக நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. நேரம் காலம் தெரியாமல் கண் முழித்து நடிக்க வேண்டும். ஆனாலும் உடல் எடை அதிகரித்துவிட கூடாது. உடலில் வசீகரம் குறைந்து விடக்கூடாது. மாதவிலக்கு நாட்களில் கூட டூயட் பாடி ஆடி நடிக்க வேண்டியிருக்கும். இப்படி நடிகைகளுக்கும் பல பிரச்சினைகள்.

இதே பிரச்சினை சமந்தாவுக்கும் இருந்தது. உச்ச நடிகையாக வேண்டுமென ஆசைப்பட்ட சமந்தா தொடர்ந்து கால்ஷீட்கள் கொடுத்து நடித்துக்கொண்டே இருந்தார். ‘’இதற்கு மேல் முடியவில்லை. ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்குமென நாம் நினைத்தால், நாம் சோர்வாகி விட்டோம் என்பதற்கான அறிகுறி அது. ஒரு நாளைக்கு 6 மணி நேரம்தான் தூங்குகிறேன். நாள் முழுக்க ஷூட்டிங்கில் பிசியாகவே இருந்து வந்திருக்கிறேன்’’ என்கிறார் சமந்தா.

22-23 வயதில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய சமந்தாவுக்கு, தொடர்ந்து மீடியாவின் வெளிச்சத்திலும், மக்களின் பேச்சுகளிலும் இருக்கவும், கடின உழைப்போடு மன அழுத்தமும் கூடவே இருந்தது. ’’சினிமா என்றால் கிசுகிசுக்கள், சர்ச்சைகள், எதிர்ப்புகள் என எல்லாமும் இருக்கும் என்பதை புரிந்துகொண்டுதான் இத்துறைக்குள் வரவேண்டும். மற்றவர்கள் நாம் இப்படிதான் இருக்கவேண்டும், இப்படி செய்ய வேண்டுமென நம்மை முடிவு செய்வார்கள். இதனால் சில சமயங்களில் நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள் எல்லாமும் முக்கியமில்லாமல் போய்விடும். வெற்றி வரும் போது கூடவே பயமும் வரும்.’’

‘’நான் வெற்றியை எட்டிய போது, அதை இழந்துவிடுவோமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. இதனால் இந்த வெற்றியை விட அடுத்து என்ன பெரியது என்று தேட ஆரம்பித்துவிட்டேன். இதனால் என் சினிமா கேரியரில் நான் எப்போதுமே ஒரு போராட்ட நிலையில்தான் இருந்திருக்கிறேன்.’’

“இதுவே எனக்கு ஆட்டோ இம்ப்யூன் பிரச்சினை உருவாக காரணமாக இருந்திருக்கிறது. சோர்வாக நான் உணர்ந்தாலும் 13 ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்திருக்கிறேன்’’ என்று மனம் திறந்திருக்கிறார் சமந்தா.

சினிமா வாழ்க்கையில் உச்சத்தை நெருங்கினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து, சினிமாவுக்கு ஒரு இடைக்கால கட்டாய ஓய்வு என சறுக்கியது அவரை ரொம்பவே பாதித்து இருக்கிறது.

’’நான் என்னுடைய உடல்நிலை குறித்து பொதுவெளியில் பேச விரும்பியதே இல்லை. ஆனால், என்னுடைய விவாகரத்து என்னை மற்றொரு பக்கம் கீழே தள்ளி வீழ்த்தியது. இதனால் பலர் என்னை அனுதாபத்தை எதிர்பார்க்கும் ’அனுதாப ராணி’ என முத்திரை குத்தினார்கள். என்னைப் பற்றியும், என் உடல்நிலையையும் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டன. இவைதான் என் வாழ்நாளில் என்னை மிகவும் பாதித்தவை.


உண்மையில் இந்த எதிர்மறை பேச்சுகளும் கட்டுரைகளும்தான் என்னை முன்பைவிட மன உறுதிமிக்கவளாக மாற்றியது. என்னை வாழ்க்கை போராளியாகவும் உருவாக்கியது’’ என்கிறார்.

வெற்றி தோல்வி, விவாகரத்து, மையோசிடிஸ் என்னும் ஆட்டோஇம்யூன் பிரச்சினையால் ஒரு வருட ஓய்வு என பல தடைகளை தாண்டி இப்பொது மீண்டும் கேமராவுக்கு முன் தனது திறமையைக்காட்ட வந்திருக்கிறார் சமந்தா.

இப்போது சமந்தாவுக்கு வயது 37. இந்த வயதில் தனது இரண்டாவது சுற்றை தொடங்கியிருக்கிறார்.

சமந்தா சொத்து மதிப்பு இப்போது சுமார் 115 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. படமொன்றில் நடிக்க 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. நயன் தாராவுக்கு அடுத்தப்படியாக தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல், விளம்பரங்களில் நடிப்பது, வர்த்தக முதலீடுகள், தயாரிப்புகளின் வர்த்தக நிகழ்வுகளில் கலந்து கொள்வது மூலம் இவரது வருமானம் கோடிகளில் இருக்கிறது.

இவரது கடுமையான போராட்டத்திற்கு பலனாக, இன்று இவர் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அதிக வசிக்கும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில்தான் வசிக்கிறார். இவரது வீடு அழகியலின் இருப்பிடமாகவு இருக்கும் என்று சிலாகித்து கூறுகிறார்கள்.

பாலிவுட் பக்கமும் தனது சினிமா பயணத்தை விரிவுப்படுத்த சமந்தா விரும்புவதால், மும்பையிலும் ஒரு ஃப்ளாட்டை வாங்கியிருக்கிறார். கடலின் அழகிய அலைகளைப் பார்த்து ரசிக்கும் வகையில் 3 பெட்ரூம் ஹால் கிச்சன் என பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ஃப்ளாட்டின் விலை 15 கோடி என்கிறார்கள்.

இவரது ஃப்ளாட்டின் பார்க்கிங்கில் 2.26 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் நிற்கிறது. இதற்கு துணையாக 3.30 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரும் கம்பீரமாக நிற்கிறது. மேலும் 1.46 கோடி மதிப்புள்ள போர்ஷே கேமேன் ஜிடிஎஸ் காரும் இவரோடு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பயணிக்க தயாராக இருக்கிறது. 87 லட்சம் மதிப்புள்ள ஒளடி க்யூ 7, 1.70 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சிரீஸ் காரும் இவர் பயன்படுத்தும் ஆடம்பர கார்களின் பட்டியலில் இருக்கின்றன.

சமந்தாவின் வீடு மற்றும் ஆடம்பர வாகன சொத்துகளைத் தவிர்த்து ஆடம்பரத்தின் உச்ச ப்ராண்ட்களான லூயி விட்டன், சேனல், குசி போன்றவற்றின் ஆபரணங்கள், ஃபேஷன் அணிகலன்கள் என பட்டியல் நீள்கிறது.

கொஞ்சம் பொறாமைப்பட வைக்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறையில் சமந்தா இருந்தாலும், இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனிலும், அவர்களுக்கு அவசியமான மருத்துவ உதவிகளை வழங்குவதிலும் தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்துவிடுகிறார்.

இதற்காகவே ’பிரதியுஷா சப்போர்ட் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை அவர் தொடங்கி இருக்கிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

சினிமாவில் எவ்வளவு நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது வருடங்கள் மார்க்கெட் இருக்குமென யாருக்கும் தெரியாது. இதனால் வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், வாழ்க்கையைத் தொடர வேறு ஏதாவது வகையில் வருமானம் அவசியம். இதை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கும் சமந்தா, பல வர்த்தகங்களிலும் முதலீடு செய்துள்ளார்.

2020-ல் சாகி என்ற ஃபேஷன் லேபிளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். 2016- மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் முதல் ரன்னர் – அப் பட்டத்தை வென்ற சுஷ்ருதி க்ருஷ்ணாவுடன் இணைந்து இந்த ஃபேஷன் கம்பெனியை சமந்தா ஆரம்பித்திருக்கிறார்.

சஸ்டெய்ன் கார்ட் மார்கெட்ப்ளேஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு இ-காமர்ஸ் தளத்திலும் சமந்தா முதலீடு செய்திருக்கிறார்.

சமந்தாவின் இந்த வாழ்க்கை போராட்டமும், வளர்ச்சியும் இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்கும் வெற்றிக்கதையாக இருக்கிறது. அவரது சினிமா பயணம் இந்தளவிற்கு சொத்துகளையும், பிரபலத்தையும் கொடுத்திருக்கிறது.

ஆனால், இந்த சினிமா குறித்து சமந்தா சொன்னதுதான் ஹைலைட். ‘சினிமாவில் நடிப்பதை வெறும் கவர்ச்சியாகதான் பார்க்கிறார்கள். ஆனால், அது முழுவதும் நிஜம் அல்ல’

ஒரு முன்னணி நடிகையாக இருந்தால்தான், அந்த கஷ்டம் புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...