வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. இந்த கேன்சர் வரும் வரை… என்று திரையரங்குகளில் கைனி குட்கா சிகரெட்டுக்கு எதிராக ஒரு அரசு விளம்பரம் வருமே அதே மாதிரி… ‘வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. இந்த 2022 வரும் வரை… என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டே.
அடுத்தடுத்து ஹிட்கள். கமர்ஷியல் ஹீரோக்களுடன் ஜோடி. மளமளவென எகிறிய சம்பளம் என 2021 வரை உச்சம் தொட்டவர் பூஜா ஹெக்டே.
ஆனால் 2022 வந்ததும் இவருக்கு ஆரம்பித்தது பிரச்சினை.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு பெரும் கனவுகளோடு தமிழ் சினிமாவில் விஜயின் ஜோடியா ‘பீஸ்ட்’ படம் மூலம் ரீ எண்ட்ரி ஆனார் பூஜா ஹெக்டே.
2022-ல் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்கள் வரிசையில் ‘பீஸ்ட்’ இடம் பிடித்தாலும், படம் எக்கச்சக்கமான விமர்சனங்களைப் பெற்று சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டது.
விஜய்க்கு ஜோடியாக நடித்தும் படம் ஓடாததால், பூஜா ஹெக்டேவை இங்கு யாரும் கமிட் செய்ய முன்வரவில்லை.
அடுத்து தெலுங்கு சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருந்து வந்த பூஜாவுக்கு, அங்கேயும் செம அடி.
’பாகுபலி’ புகழ் பிரபாஸூக்கு ஜோடியாக ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பிரபாஸின் லேட்டஸ்ட் மவுசை நம்பி பான் இந்தியா படமாக இது வெளியிடப்பட்டது. ஆனால் படம் ஃப்ளாப்.
’ஆர்.ஆர்.ஆர்’ பட புகழ் ராம் சரணுக்கு ஜோடியாக ‘ஆச்சார்யாவில்’ தலைக்காட்டினார் பூஜா ஹெக்டே. இப்படத்தில் சிரஞ்சீவியும் இருந்தார். ஆனால் இதுவும் ஃப்ளாப்.. இந்தப் படமும் கைக்கொடுக்கவில்லை
தமிழ் தெலுங்குப் படங்களை விடுங்கள். ஹிந்தியிலாவது ஒரு ஹிட்டை கொடுத்து அங்கேயே செட்டிலாகிவிடலாம் என நினைத்த பூஜா ஹெக்டேவுக்கு அங்கேயும் இவரது ராசி எடுப்படவில்லை.
ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் நடித்த ’சர்க்கஸ்’ மிகப்பெரும் தோல்விப் படமாக போய்விட்டது.
இதனால் 2022-ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரு ஹிட் படம் கூட பூஜா ஹெக்டேவால் கொடுக்கமுடியாமல் போய்விட்டது.
இதனால் அவர் இதுவரை நடித்த அனைத்து ஹிட் படங்களின் பட்டியலை மறந்துவிட்டு, பூஜா ஹெக்டே ஒரு ராசி இல்லாத நடிகை என்ற முத்திரையை வழக்கம் போல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
பூஜா ஹெக்டேயை ராசி இல்லாத நடிகை என்று விமர்சிப்பவர்கள் அப்படங்களின் ஹீரோக்களை ஏன் அப்படி முத்திரை குத்துவதில்லை என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் நீங்களும் ஒரு தோழரே.
வித்தியாசமான கதைகளை குறிவைக்கும் கார்த்தி!
சிவகுமாரின் மகனாகவும், சூர்யாவின் தம்பியுமாக, மணி ரத்னத்தின் உதவியாளராகவும் ஆரம்பத்தி அடையாளம் காணப்பட்ட கார்த்தி, இன்றைய நிலவரப்படி கோலிவுட்டின் ஹாட் ஹீரோ.
அடுத்தடுத்து ஹிட்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் மார்க்கெட் வேல்யூ என இவரது சினிமா க்ராஃப் அழகாய் மாறி வருகிறது.
கிராமம், போலீஸ், ஃபேமிலி சென்டிமெண்ட் என படத்துக்கு படம் கதையின் களத்தை மாற்றி மாற்றி தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தும் இன்றைய ஹீரோக்களிடையே கார்த்தி முன்னணியில் இருக்கிறார்.
’பொன்னியின் செல்வன்’, ’சர்தார்’ என இரு வேறு களங்களில் நடித்தவர், அடுத்து ’குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜப்பான்’ படத்தின் நாயகனாகி இருக்கிறார்.
’ஜப்பான்’ பட ஷூட்டிங் மும்முரமாக போய் கொண்டிருக்கும் பொழுதே இப்பொழுது ‘சூது கவ்வும்’ பட இயக்குநர் நளன் குமாரசாமியின் கதையில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளி வருகின்றன.
அநேகமாக இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 20-ம் தேதிக்கு மேல் சென்னையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிறிய ’வாரிசு’ பட்ஜெட். தாங்குவாரா தில் ராஜூ
நம்மூரில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் படமென்றால் எழுதப்படாத கண்டிஷன்கள் இரண்டு இருக்கும்.
ஒன்று, படம் எப்பொழுது முடியுமென கேட்கவே கூடாது.
அடுத்து, பட்ஜெட் இவ்வளவுதான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
இதே பாணியில்தான் ‘வாரிசு’ பட இயக்குநர் வம்சி படிப்பள்ளியும் படமெடுப்பது வழக்கம் என்கிறார்கள்.
தெலுங்கில் ‘முன்னா’, ‘பிருந்தாவனம்’, ‘எவடு’, ‘உப்பிரி’, ‘மகர்ஷி’ படங்களை இயக்கியவர் வம்சி படிப்பள்ளி.
இந்தப் படங்களில் காட்சிகள் எல்லாமே ஸ்டைலாக, எக்கச்சக்கமான பட்ஜெட்டில் எடுத்த உணர்வை அளிக்கும். அதேபோல் வம்சி சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்தது இல்லை என்றும் ஒரு காஸ்ட்லியான ரிக்கார்டை வைத்திருக்கிறார்.
இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், வம்சி இயக்கிய படங்களில் அதிக படங்களை தயாரித்தவர் ’வாரிசு’ தயாரிப்பாளரான இதே தில் ராஜூதான்.
அந்த தைரியத்தில் மீண்டும் ‘வாரிசு’ படத்தின் பட்ஜெட்டிலும் தனது வேலையைக் காட்டியிருப்பதாக கிசுகிசு கிளம்பி இருக்கிறது.
’வாரிசு’ ஷூட்டிங் 100 நாட்களில் முடிக்கப்படும் என்று முதலில் முடிவாகி இருந்ததாம். ஆனால் ஷுட்டிங் முடிய திட்டமிட்ட நாட்களை விட ஏறக்குறைய 40 நாட்கள் அதிகம் ஆகிவிட்டதாம்.
ஷூட்டிங் நாட்கள் கூடினால் பட்ஜெட்டிலும் அதன் அதிர்வு இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாக எகிறிவிட்டதாம்.
சுமார் 30 கோடி வரை பட்ஜெட் அதிகமாகி இருக்கலாம் என வாரிசு குழுவில் பேச்சு அடிப்படுகிறது.