தமிழ்நாட்டில் இருந்து ப்ளைட்டை பிடித்து பாலிவுட்டில் டேக் ஆஃப் ஆன நாயகிகளில் மிக முக்கியமானவர் ஸ்ரீதேவி.
மதராஸி, தென்னிந்திய நடிகை என்பது போன்ற ஓரவஞ்சனைகளையெல்லாம் தாண்டி பாலிவுட்டில் பலரது தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஸ்ரீதேவியின் வாரிசுகள் இன்று வரை கோலிவுட் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
இன்றைய நிலவரப்படி கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரங்களின் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீதேவியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான போனி கபூர்.
அஜீத்தை வைத்து தொடர்ந்து படம் தயாரிப்பவரால் தன் மகளை ஒரு படத்தில் கூடவா நடிக்க வைக்க முடியாது.
அப்படியானால் என்ன காரணம்? அல்லது யார் காரணம்?
காரணம் அப்பாதான்.
ஸ்ரீதேவியின் வாரிசுகளான ஜான்வி மற்றும் குஷி இருவரையும் தமிழில் நடிக்க வைப்பதில் போனி கபூருக்கு பெரிய ஆர்வமில்லை என்கிறார்கள். அடுத்து அவர்களது திறமையால் சினிமா வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் தடுக்க மாட்டேன் என்றும் போனி கபூர் சொல்வதாகவும் பேச்சு அடிப்படுகிறது.
மறுபக்கம் பாலிவுட்டில் கடும் போட்டி இருப்பதால் இப்போது நம்மூர் ஹீரோக்களை அக்கட தேசத்து ஹீரோக்களை, வல்லிய ஹீரோக்களையெல்லாம் பாராட்டி அவ்வப்போது ஸ்டேட்டஸ்களை தட்டிவிட்டபடி இருக்கிறார் ஜான்வி.
இதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது.
கூடிய சீக்கிரமே தெலுங்குப் படத்தில் ஜான்வியைப் பார்க்கலாம். அநேகமாக ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக களமிறங்க இருக்கிறார். சம்பளம் 3 கோடி என்று என்கிறது கோலிவுட் பட்சி.
பெரிய ஹிட் இல்லை. தென்னிந்தியாவில் ஒரு படம் கூட இல்லை. அப்புறம் எப்படி பூஜா ஹெக்டே, சமந்தா மாதிரி பெரிய சம்பளம் என்று சூட்டைக் கிளப்பியிருக்கிறது ஜான்வியின் எண்ட்ரீ.
சம்பள விஷயத்தில் முரண்டு பிடிக்கும் வைகைப்புயல்.
ஒரு மாதத்திற்கு அதிகப்பட்சமாக 31 நாட்கள்தானா… 15 நாட்கள் இன்னும் அதிகம் இருக்கக்கூடாதா என்று கேட்கிற அளவுக்கு பிஸியாக இருந்தவர் வடிவேலு. நாளொன்றுக்கு இவர் வாங்கிய சம்பளம் பத்து முதல் பதினைந்து லட்சம் சம்பளம் என்பது வரலாறு.
ஆர்வக்கோளாறினால் இவர் அரசியலில் கால் வைக்க இவரது சினிமா கேரியரே கட்டாய ஓய்வில் அதிகம் முடங்கிப் போனது.
மீண்டு வர வாய்ப்புகள் கதவு தட்டியும் இன்னும் தனது ஆபிஸிலேயே பொழுதைக் கழித்து வருகிறார் வைகைப்புயல்.
காரணம் சம்பள விஷயத்தில் முரண்டு பிடிப்பதுதான்
’நான் நடிக்காவிட்டாலும் கூட இத்தனை வருஷமா போன்ல பார்க்கிறீங்களே ஏதோ போட்டோ போட்டோவா வைச்சு போஸ்ட்கார்ட் மாதிரி போடுறாங்களே..மீமு. அதுல எல்லாமே நம்ம காமெடிதான். படத்துல நடிக்கல்லையே தவிர ஒவ்வொரு நாளும் நான் இல்லாம கழியல.’ என்று கமெண்ட் அடிக்கிறாராம்.
ரஜினியின் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத Rajini170 -ல் நடிக்க வைக்க வைகைப் புயலை அணுகியிருக்கிறார்களாம். அதற்கும் இதே பதிலைதான் சொல்லியிருக்கிறாராம்.
வேறு வழியில்லாமல் கமிட் செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
இந்து மதத்தை அவமதித்தாரா தேவி ஸ்ரீபிரசாத்
போடுற ட்யூன்கள் எல்லாம் ஹிட், கை நிறைய கமிட்டான பெரிய ஹீரோக்களின் பட லிஸ்ட் என பரபரப்பான இசையமைப்பாளராக இருக்கிறார் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீபிரசாத்.
அவ்வப்போது ஏதாவது கிசுகிசுக்களில் சிக்குவதை வாடிக்கையாக கொண்ட இந்த டிஎஸ்பி, தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
ஒரு மாதத்திற்கு முன்பு தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். அந்த மியூசிக் ஆல்பத்தின் பெயர் ‘ஒ பரி’
இந்த ஆல்பத்திற்கு கலவையான விமர்சனங்கள்தான் இதுவரையில் கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் ஹிந்தியில் இந்த ஆல்பத்தை 20 மில்லியனுக்கும் அதிமானோர் கண்டு ரசித்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகை கராத்தே கல்யாணி என்பவர் ஹைதராபாத் சைபர் க்ரைமில் ஒரு புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அந்த புகாரில் ‘தேவி ஸ்ரீபிரசாத் தனது ‘ஒ பரி’ ஆல்பத்தில் இந்து மக்களையும், இந்து மதத்தையும் அவமதிப்பது போல பாடலை வைத்திருக்கிறார். இந்துக்கள் புனிதமாக உச்சரிக்கும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். இப்பொழுது இந்துக்களை அவமதிப்பது தொடர்ந்து கொண்டே போகிறது. கிருஷ்ண பகவானின் சிறப்பை சொல்லும் வகையில் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’வை உச்சரிக்கிறோம். அதை அவமதிப்பது போல இருக்கிறது தேவி ஸ்ரீபிரசாத்தின் செய்கை. எனக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது’
மேலும் அவர் ஊடகங்களில் கூறுகையில், ‘அவர் ஒரு இந்துவாக இருந்துபோதும் கூட இந்து மதத்தை மதிக்கவில்லை. பிகினி உடையில் இருக்கும் பெண்களை ;ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’வை சொல்ல வைத்திருக்கிறார். ஒரு இசையமைப்பாளர் என்பதற்காக அவர் இப்படி இந்துக்களை அவமதிக்க கூடாது. தேவி ஸ்ரீபிரசாத் இந்துக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கொந்தளித்து இருக்கிறார்.
ஆனால் இதுவரையில் தேவி ஸ்ரீபிரசாத் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
O Pari (Video) Rockstar DSP | Raqueeb Alam, Vaino Kees | Bhushan Kumar | First Pan India Pop Song