11 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு ஐசிசி கோப்பை இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. டி20 உலகக் கோப்பையுடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸ் நகரில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்று இந்தியா டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு பிறகு, இந்திய அணி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தாயகம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் பார்படாஸில் வீசிய சூறாவளி புயலால் அவர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனி விமானத்தில் அவர்கள் நேற்று மதியம் பார்படாஸில் இருந்து புறப்பட்டனர்.
பாங்ரா நடனம்
அவர்கள் பயணித்த விமானம் இன்று காலையில் சென்னை விமான நிலையத்தை அடைந்தது. வெற்றிக் கோப்பையுடன் இந்தியா திரும்பிய வீர்ர்களுக்கு வாத்தியங்களை இசைத்தும், பாங்ரா நடனம் ஆடியும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்களுக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்த இந்திய கிரிக்கெட் வீர்ர்களும் ரசிகர்களுடன் சேர்ந்து பாங்ரா நடனம் ஆடினர். விமான நிலையத்தில் இருந்து வீர்ர்கள் அனைவரும் ஓட்டல் மௌரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரம்மாண்ட கேக்
ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, இந்திய கிரிக்கெட் வீர்ர்கள், உலகக் கோப்பையை வென்றதற்கான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். உலகக் கோப்பையை வென்றதைக் குறிக்கும் வகையில் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கேக்கை கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் வெட்டினர். இதைத்தொடர்ந்து சில நிமிடங்களுக்கு கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. கொண்டாட்டங்களுக்கு பிறகு பகல் 11 மணிக்கு அவர்கள் அனைவரும் சிறப்பு பேருந்தில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் சாம்பியன்ஸ் என்று பொறிக்கப்பட்டிருந்த சிறப்பு ஜெர்ஸியை அணிந்திருந்தனர்.
பிரதமருடன் விருந்து
வெற்றிக் கோப்பையுடன் தனது வீட்டுக்கு வந்த இந்திய கிரிக்கெட் வீர்ர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பிரதமரைச் சந்தித்த வீர்ர்கள், அவரிடம் உலகக் கோப்பையை வழங்கினர். மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கோப்பையை வென்றதற்காக இந்திய வீர்ர்களைப் பாராட்டினார். டி20 உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்தில் அடுத்தடுத்து நடக்கவுள்ள போட்டித் தொடர்களிலும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறி உற்சாகப்படுத்தினார்.
பிரதமரின் இல்லத்தில் கிரிக்கெட் வீர்ர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீர்ர்களுடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். பிரதமர் வீட்டில் இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் சுமார் 1 மணிநேரம் இருந்தனர்.
மும்பை பயணம்
பிரதமர் வீட்டில் இருந்து டெல்லி விமான நிலையத்துக்கு வந்த இந்திய கிரிக்கெட் வீர்ர்கள், அங்கிருந்து மும்பைக்கு பயணமானார்கள். மும்பை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீர்ர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.. இன்று மாலையில் இந்திய வீர்ர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் மும்பையில் மிகப்பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.