No menu items!

சுதந்திரம் – 75 ஆண்டுகள்

சுதந்திரம் – 75 ஆண்டுகள்

இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பதில் குழப்பம் என்ற கருத்து நிலவுகிறது. இது 75வது சுதந்திர தினமா அல்லது 76வது சுதந்திர தினமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

முதல் சுதந்திர தினம் 15 ஆகஸ்ட் 1947 என்பதால் இந்த ஆண்டு அதாவது 2022 ஆகஸ்ட் 15 அன்று நாம் கொண்டாடுவது 76வது சுதந்திர தினம். அப்படியென்றால் ஏன் சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் என்று கொண்டாடுகிறோம் என்ற கேள்வி எழுகிறது.

1948ஆம் வருடம் சுதந்திரத்தை முதலாண்டைக் கொண்டாடினோம். 1957ல் பத்தாம் ஆண்டை கொண்டாடினோம். 1967ல் 20ஆம் ஆண்டு. 2017ல் 70ஆம் ஆண்டு. அந்தக் கணக்கின்படி பார்த்தால் 75 ஆண்டுகள் கடப்பது இந்த ஆண்டுதான். அதனால் சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு என்று சொல்கிறோம். இந்த நாளில் இந்திய சுதந்திர தினத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்:

இந்தியாவின் முதலாவது தேசிய கொடியை வடிவமைத்தவர் விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா. 1904-ம் ஆண்டில் அவர் இந்த கொடியை வடிவமைத்தார்.

இந்த மூவர்ணக் கொடி முதல் முறையாக 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பார்ஸி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

தற்போது நாம் பயன்படுத்தும் தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்காளி வெங்கய்யா. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த கல்வியாளரும், விடுதலை போராட்ட வீரருமான இவர் 1921-ம் ஆண்டில் இந்த தேசிய கொடியை வடிவமைத்தார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பே 1930-ம் ஆண்டுமுதல் 1946-ம் ஆண்டுவரை ஜனவரி 26-ம் தேதியை சுதந்திர தினமாக காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வந்தனர்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான சட்டம், 1947-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி நிறைவேற்றப்பட்டாலும், இந்தியாவின் சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15-ம் தேதியை தேர்ந்தெடுத்தவர் லார்ட் மவுண்ட்பேட்டன்.

1947ல் சுதந்திரம் பெறும்போது இந்தியாவுக்கென்று தேசிய கீதம் ஏதும் இல்லை. 1950-ம் ஆண்டில் தேசிய கீதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கன மன பாடல் அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பாடல் முதலில் 1911-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இசைக்கப்பட்டது.

அதற்கு முன்பு தேசபக்தியை ஊட்டும் ‘வந்தே மாதரம்’ பாடல் சுதந்திரப் போராட்ட காலத்தில் பாடப்பட்டு வந்தது. இந்தப் பாடலை எழுதியவர் பக்கிம் சந்திர சாட்டர்ஜி. ‘ஆனந்த்மத்’ என்ற வங்காள மொழி நாடகத்துக்காக அவர் இந்த பாடலை எழுதினார்.

1973-ம் ஆண்டுவரை சுதந்திர தினத்தன்று மாநிலங்களில் ஆளுநர்கள்தான் கொடியேற்றி வந்தனர். இந்நிலையை மாற்றி மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தருவதில் முன்னாள் தமிழக முதல்வரான கருணாநிதி முக்கிய பங்கு வகித்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான் சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் முறை அமலுக்கு வந்தது.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி காலை டெல்லியில் முதலாவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது அப்பகுதியில் லேசாக மழை பெய்து, வானவில் தோன்றியுள்ளது.

இந்திய சட்டத்தின்படி தேசியக் கொடியானது கதர் துணியால்தான் நெய்யப்பட வேண்டும்.

டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பறக்க விடப்படும் தேசியக் கொடி, கர்நாடகாவில் உள்ள தார்வாட் எனும் இடத்தில் அமைந்துள்ள கர்நாடக காதி கிராமோத்யக சம்யுக்தா சங்கத்தில் தயாரிக்கப்படுகிறது.

இந்திய சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட தேசத்தின் தந்தையான மகாத்மா காந்தி, முதலாவது சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லை. அந்த நாளில் அவர் கொல்கத்தாவில் நடந்த கலவரங்களை தணிப்பதற்காக அங்கு சென்றிருந்தார்.

கடைசியாக ஒரு முக்கியமான செய்தி. சுதந்திரம் பெற்ற நாளில் இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒன்றாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...