ஷ்ருதி ஹாஸன் அவரது அப்பாவைப் போல் இல்லை.
எதையும் குழப்பாமல் தெளிவாக பேசுவார்.
அதேபோல் சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்வார். எல்லோருடனும் நட்போடு இருப்பார்.
சமூக ஊடகங்களில், ‘ஷ்ருதி ஹாஸன் தம் அடிப்பார்’ என்று யூகத்தோடு கொளுத்திப் போட, அது புகைய ஆரம்பித்திருக்கிறது.
இதைப் பார்த்த ஷ்ருதி ஹாஸன், ‘நான் தம் அடிக்க மாட்டேன். சிகரெட் மட்டுமில்லை. எனக்கு மது குடிக்கும் பழக்கமும் இல்லை ஆடம்பரமாகவும் வாழ்வது இல்லை. இப்போது இருக்கிற இந்த நார்மலான வாழ்க்கையே போதுமானது.’ என்று வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார்.
’இந்த இரண்டிலும் இல்லாத ஆர்வம் எனக்கு இசையில் இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சில சமயங்களில் இசை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று மனதிற்குள் தோன்றும்’ என்கிறார் ஷ்ருதி ஹாஸன்.
மக்கள் சம்பாதிக்கிறது வீணாகக்கூடாது – யஷ்!
இரண்டு ஹிட் படங்கள் கொடுத்த ஒருவர், அடுத்தப்படம் குறித்த அறிவிப்போ அல்லது ஏதாவது ஒரு பிட் நியூஸ் கூட வரவிடாமல் செய்தால் எப்படி இருக்கும்?
அப்படியொரு சூழலில்தான் கேஜிஎஃப்’ பட வரிசை நாயகன் யஷ்ஷூக்கு நேர்ந்திருக்கிறது.
யாரும் திரும்பி கூட பார்க்காமல் இருந்த கன்னட சினிமாவை, ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ’கேஜிஎஃப்’ என இரண்டு ஹிட்களை கொடுத்து அசரவைத்தார்கள். இதில் ஹீரோவாக நடித்த யஷ்ஷூக்கு இப்போது எக்கச்சக்க ரசிகர்கள்.
இப்படியொரு பிஸினெஸ் உருவான நிலையில், தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த ரசிகர்கள், சமயம் பார்த்து தனது மனைவி ராதிகா பண்டிட்டுடன் மைசூருக்கு வந்த யஷ்ஷை மடக்கிவிட்டார்கள்.
ரசிகர்களின் இந்த ஆர்வத்தைப் பார்த்து கலங்கிப் போன யஷ், ‘என்னோட அடுத்தப்படம் ’யஷ்19’ வேலைகள் நடக்குது. நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்க மக்கள் வர்றாங்க. அப்படி அவங்க சம்பாதிக்கிற பணத்துல பார்க்க வர்ற படம் அவங்கள ஏமாத்திட கூடாதுல. அவங்க கொடுக்குற பணத்துக்கு ஒரு அசத்தலான சினிமா அனுபவத்தைக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். அதனால் அடுத்தப்பட குழு தீவிரமா வேலைப் பார்த்துட்டு இருக்காங்க. என் படத்தை பார்க்குறவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குறதுதான் என்னோட நோக்கம்’ என்கிறார்.