திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.
கலைஞர், முரசொலி மாறன் இருவரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர் நீங்கள். இன்று இருவரும் இல்லை. இவர்கள் இழப்பு உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் முன்னர் என்னை கலைஞரிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தியது, இன்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கிற அண்ணன் கே.என். நேரு அவர்களும் என்னுடைய மாவட்டச் செயலாளர் அண்ணன் மறைந்த சிவசுப்பிரமணியன் அவர்களும்தான். இவர்களால்தான் கலைஞர் பரிச்சயம் கிடைத்தது. அது அண்ணன் வைகோ பிரிந்த காலம்.
நாடாளுமன்ற உறுப்பினராக ஆன பின்னர் அண்ணன் முரசொலி மாறன் அவர்கள் பரிச்சயம் கிடைத்தது. திராவிட இயக்க சிந்தனையோடு பொருந்திய, கூட்டாட்சி தத்துவத்தை உணர்ந்த, சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் இருந்தால்தான், நாடாளுமன்றத்தில் திராவிட இயக்கத்தை அடையாளப்படுத்த முடியும் என்பது அவருடைய எண்ணம். அப்படிப்பட்ட ஆட்களைத்தான் அவர் தூக்கிவிட முயற்சிப்பார், தேடிக்கொண்டு இருந்தார். அப்படி நான் அவருடைய கைகளில் கிடைத்தேன். அவரோடு பேசுகிற போது, நாடாளுமன்றத்தில் நான் பேசுவதை கேட்டபோது, என்னை ஊன்றி கவனித்த அண்ணன் முரசொலி மாறன், திராவிட சிந்தனையும் சரளமான ஆங்கிலமும் இருந்த காரணத்தால், தலைவர் கலைஞரிடம் பரிந்துரை செய்து, மத்திய இணை அமைச்சராகிற வாய்ப்பை எனக்கு வாங்கிக் கொடுத்தார்.
இணை அமைச்சராக, துணை அமைச்சராக, கேபினட் அமைச்சராக இருந்தபோது கலைஞருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னிடம் இருந்த திராவிட இயக்க சிந்தனையைப் பார்த்து, நான் திராவிடர் கழகத்தில் இருந்த காலத்தை ஆசிரியர் வீரமணியுடன் கலந்து பேசி தெரிந்துகொண்டார். எனது ஆங்கிலப் புலமை, திராவிட சித்தாந்தம், எதையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவற்றால் என்னை அருகிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கலைஞருக்கு இருந்தது.
கலைஞர் என்கிற மிகப்பெரிய ஆளுமைக்கு பக்கத்தில் போனபின்னர், அவருடைய நம்பிக்கையை ஒரு அங்குலம் கூட குறைத்துக்கொள்ளக் கூடாது என்று மிகக் கவனமாக அவருடன் பயணிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் 2ஜி வழக்கு வந்தது. அதில் நான் எப்படி வாதாடினேன் என்பது அவருக்கு தெரியும். தன்னந்தனியாக நான் எப்படி போராடிக்கொண்டு இருக்கிறேன் என்பதைப் பார்த்து என்னை அவர் உச்சி முகர்ந்த காலங்கள் உண்டு. கெடுவாய்ப்பாக தீர்ப்பை பார்க்க அவர் இல்லை.
எனவே, ஒரு தாய் – தந்தையரை இழந்த குழந்தை எப்படி இருக்குமோ அப்படித்தான் அண்ணன் முரசொலி மாறன் அவர்களையும் தலைவர் கலைஞர் அவர்களையும் இழந்த மனநிலை எனக்கு.
ஆனால், தாய் – தந்தையை இழந்த குழந்தை மேல் எப்படி பாசத்தை, பரிவை காட்டுவார்களோ அப்படிப்பட்ட பரிவை பாசத்தை என் மீது இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காட்டுகிறார் என்பதுதான் எனக்கு இருக்கும் ஆறுதல்.
கலைஞர் காலகட்ட அரசியலையும் பார்த்துள்ளீர்கள், இன்று கலைஞருக்கு பிறகான அரசியலையும் பார்க்கிறீர்கள். இந்த இரண்டு காலகட்டத்துக்கும் இடையே என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
இன்றைய முதலமைச்சர் ஒரு பாப்புலர் சீஃப் மினிஸ்டராக இருப்பார்; நலத்திட்டங்கள் கொடுக்கும் அரசை நடத்தும் சீஃப் மினிஸ்டராக இருப்பார். ஆனால், அண்ணாவைப் போல், கலைஞரைப் போல் திராவிட தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிற ஒரு முதலமைச்சராக இருப்பாரா என்கிற ஐயப்பாடு எனக்கு இருந்தது. கலைஞரின் தத்துவ அடர்த்தி இவரிடம் இருக்காதோ என்று நினைத்தேன்.
உதாரணமாக எம்.ஜி.ஆர். ஒரு பாப்புலர் அரசாங்கத்தை நடத்தினார். ஆனால், அவரை தத்துவத்தின் அடையாளம் என்று சொல்லமாட்டேன். அதுபோல் ஜெயலலிதா மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முதலமைச்சர். அதற்காக ஒரு தத்துவத்தின் தலைவர் என்று ஜெயலலிதாவை ஒரு காலமும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால், தத்துவத்தின் அடையாளமாக இருப்பதுதான் முக்கியம் என்ற எதிர்பார்ப்பு எனக்கு.
இந்நிலையில், என் ஐயப்பாடு எல்லாவற்றையும் உடைத்துவிட்டார் இன்றைய முதலமைச்சர். முதலமைச்சருக்கு சமூகநீதி கொள்கையில் இருக்கிற பிடிப்பு, திராவிட மாடலை முன்னெடுப்பதை எல்லாம் பார்த்து, அவரை ஐயப்பட்டதற்காக எனக்கு என் மேலேயே ஒரு வெறுப்பு வந்தது. அதை அவருக்கே ஒரு நாள் மெசேஜ்ஜாக அனுப்பிவிட்டேன். அப்படி நினைத்ததுக்காக எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றுகூட சொன்னேன்.
அண்ணா காலத்தில் ஜனசங்கம் இல்லை; கலைஞர் காலத்தில் பாஜக இருந்தது, ஆனால், தன் கட்டுப்பாட்டில் கக்கத்தில் வைத்திருந்தார் கலைஞர். இன்று அண்ணா இல்லை, கலைஞர் இல்லை, பெரியார் இல்லை; ஆர்.எஸ்.எஸ். ஓங்கி நிற்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கிறது பாஜக. இந்நிலையில், அண்ணா – கலைஞரின் கூட்டுக் கலவையாக, திராவிட மாடல் என்று சொல்லி, ஆரியத்தை ஆர்.எஸ்.எஸ்ஸை வேரறுக்கிற ஒரு வீரியம் மிக்க தலைவராக முதலமைச்சர் உயர்ந்து நிற்கிறார். இதைப் பார்த்து உள்ளபடியே நான் புளகாங்கிதம் அடைகிறேன். அவரை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் என்பதற்கு வெட்கப்படுகிறேன்.