கல்லூரி மாணவியும் கால்பந்து வீரருமான பிரியா திடீர் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரியா இறந்தது எப்படி? அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நிகழ்ந்த தவறு என்ன? மருத்துவர்களுடன் பேசினோம்.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (வயது 17). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் பிரியா. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் எலும்புகளை இணைக்கும் தசைநார் கிழிந்துள்ளது எனச் சொல்லி, அதனை சரிசெய்ய வேண்டும் என சிறிய துளைமூலம் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதன்பின்னர்தான் பிரச்சினை தொடங்கியது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் திடீரென பிரியா கால் வீங்க ஆரம்பித்தது. தொடர்ந்து காலில் உணர்விழப்பு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சையளிப்பதற்கான வசதி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் இல்லாததால், உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 10-11-2022 அன்று பிரியா அனுப்பப்பட்டார். அங்கு பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருடைய காலின் ஒரு பகுதி அழுக ஆரம்பித்திருந்தது.
இது உயிருக்கு ஆபத்தான நிலை என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது கால் அகற்றப்பட்டது. ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நேற்று (15-11-2022) காலை பிரியா உயிரிழந்தார்.
பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பாதிப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி, அரசிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர். பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையின்போது என்ன நடந்தது? இது தொடர்பாக மருத்துவர்களுடன் பேசினோம்.
“இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் குறிப்பிட்ட இடத்தில் சுத்தமாக ரத்தம் இல்லாத நிலையில் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் எலும்புகளை தெளிவாக பார்க்க முடியும். இதற்காக குறிப்பிட்ட பகுதிக்கு வரும் ரத்தத்தை தடுப்பதற்காக பிரதானமான தமனியைச் சுற்றி ‘டூர்னிக்கெட்’ (Tourniquet) எனப்படும் கயிறு போன்ற பட்டைகள் அழுத்திக் கட்டப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இந்த ‘ டூர்னிக்கெட்’ அகற்றப்படும். பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கவனக்குறைவு காரணமாக ‘டூர்னிக்கெட்’ அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் ‘டூர்னிக்கெட்’ கட்டப்பட்டிருந்ததால், காலில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ‘டூர்னிக்கெட்’ கட்டப்பட்டிருந்த பகுதிக்குக் கீழே இருந்த செல்கள் அழுக ஆரம்பித்துள்ளன.
பிரியாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை மயக்கவியல் மருத்துவரால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது தொடங்கி, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ‘டூர்னிக்கெட்’ கட்டை நீக்கி ஐசியுக்கு அழைத்துவந்து தொடர்ந்து கண்காணிப்பது வரை பல மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட வேண்டிய செயல்பாடு. சிறிய மருத்துவமனையான பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் இத்தனை மருத்துவர்களும் தொழில்நுட்ப வசதிகளும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சையை அதற்கான வசதியுள்ள பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றி செய்திருக்க வேண்டும். அதில் அங்குள்ள மருத்துவர்கள் காட்டிய அலட்சியமே சிறிய பிரச்சினையை பெரியதாக மாற்றிவிட்டது.
கால் அழுகிய நிலையில்தான் பிரியா ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போதே, காலில் அழுகிய பகுதிவரை நீக்கினால்தான் அவரது உயிரையே காப்பாற்ற முடியும் என்னும் நிலை. எனவே, அவரது உயிரையாவது காப்பாற்றலாம் என்று அழுகிய செல்களை அகற்றும் சிதைவு சிகிச்சை பிரியாக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் சேதமடைந்த தசைப் பகுதியிலிருந்து ‘மயோகுளோபின்’ எனப்படும் நச்சுப் புரதம் உருவாகி ரத்தத்தில் கலக்க ஆரம்பித்தது. அதன்பின்னர் வேகமாக ஓவ்வொரு உறுப்பாக செயலிழக்க ஆரம்பித்துள்ளன. ரத்தத்தில் கலந்த ‘மயோகுளோபின்’ சென்றதால் முதலில் சிறுநீரகம் செயலிழந்தது. இதையடுத்து கல்லீரலும், அதற்குப் பிறகு இருதயமும் செயலிழந்து பிரியா உயிரிழந்துள்ளார்.
உரிய காலத்தில் ‘டூர்னிக்கெட்’ அகற்றப்பட்டிருந்தால் மிக சுலபமாக முடிந்திருக்கக்கூடிய ஒரு விஷயம். தினம் இதுபோன்ற பல அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செய்யப்படுகிறது. பிரியா விஷயத்தில் ஒன்றிரண்டு பேர் அலட்சியம் அவரது உயிரை பறித்துவிட்டது” என்றார்கள்.
இந்த விவகாரத்தை விசாரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள நிபுணர், மயக்க மருந்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரியா மரணம் அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக உட்பட எதிர்கட்சிகள் அரசை குறை கூறி கண்டனம் தெரிவித்துள்ளன. புகாருக்கு உள்ளாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மருத்துவர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கர் இருவரையும் கைது செய்யவேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், இது தொடர்பாக நம்முடன் பேசிய மருத்துவர்கள், “அறுவை சிகிச்சைகளின் போது அரிதினும் அரிதாகவே தவறு நடக்கிறது என்றாலும் இத்தகைய தவறு நமது ஊரில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே நடக்கிறது. உலகம் முழுவதும் 5 சதவிகிதம் அறுவை சிகிச்சைகளில் தவறு நடக்கிறது என்று புள்ளி விவரங்கள் சொல்கிறது. எந்த ஒரு மருத்துவரும் தெரிந்தே ஓர் உயிரைக் கொல்லமாட்டார். இந்நிலையில், கவனக்குறைவால் நடந்த ஒரு சில விஷயங்களை பெரிதுபடுத்தி, மருத்துவர்களை கைது செய்வது வரை செல்வது, மருத்துவர்களின் கவுரவத்தை, தன்னம்பிக்கையை குலைக்கும். எனவே, இதுபோன்ற சம்பவங்களை, தங்கள் பரபரப்பு அரசியலுக்கு பயன்படுத்துவதை தலைவர்கள் தவிர்க்க வேண்டும். அதேநேரம், மருத்துவர் குழு விசாரணை மூலம் எங்கே தவறு நடந்துள்ளது என கண்டறிந்து, அதிலிருந்து கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்கள்.