No menu items!

உத்தமவில்லன் கமலிடம் லிங்குசாமி சிக்கியது எப்படி?

உத்தமவில்லன் கமலிடம் லிங்குசாமி சிக்கியது எப்படி?

கடந்த சில மாதங்களாகவே புகைந்து கொண்டிருந்த ‘உத்தமவில்லன்’ பஞ்சாயத்து, இப்பொழுது கொழுந்துவிட்டு பற்றியெறிய ஆரம்பித்திருக்கிறது.

இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது தம்பி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பங்குதாரர்களாக கொண்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘திருப்பதி ப்ரதர்ஸ்’, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் ஒன்றை 2.4.2024 அன்று கொடுத்திருக்கிறது.

அதில் 2013-ம் ஆண்டு ஒரு தமிழ் திரைப்படம் தயாரிப்பதற்காக கமல் ஹாசனை நாங்கள் அணுகினோம். அவரும் எங்களுடன் இணைந்து படம் பண்ணுவதற்கு ஒரு கதையைச் சொன்னார். அந்த கதை எங்களுக்கும் பிடித்திருந்ததால், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷன்ல் நிறுவனம் மூலம் 50 கோடி பட்ஜெட்டில், முதல் பிரதி அடிப்படையில் படமெடுத்து திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டுமென ஒப்பந்தம் ஆனது.

சம்பள விஷயம் பற்றிய பேச்சு எழுகையில், கமல் தனக்கு வட இந்திய திரையீட்டு உரிமையை 5 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையை 10 கோடிக்கும் எனக்கே கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதற்கும் திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதனால் பேச்சுவார்த்தை முடிந்த அன்றே 50 கோடி பட்ஜெட்டில் இந்த 15 கோடியை கழித்துவிட்டு, மீதமுள்ள 35 கோடியை கொடுத்திருக்கிறது திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம். முதல் தவணையாக 15 கோடியையும் கமலிடம் கொடுத்திருக்கிறார்கள்.

முன்பணமாக 15 கோடி கொடுக்கப்பட்ட நிலையில், அடுத்த வாரமே கமல் தயாரிப்பாளர்களை அழைத்து, நான் முதலில் சொன்ன கதையைப் பண்ண விருப்பமில்லை. வேறொரு கதையில் படமெடுத்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார். வேறொரு இயக்குநரை வைத்து படத்தை இயக்கலாம் என்றும் கமல் கூறியிருக்கிறார்.

கமல் இரண்டாவதாக சொன்ன கதை தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அப்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ‘த்ரிஷ்யம்’ படத்தை ரீமேக் செய்யலாம் என தயாரிப்பாளர்கள் கமலிடம் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் கமல் எனக்கு அதில் விருப்பம் இல்லை என கூறிவிட்டார். அடுத்த ஒரிரு வாரங்களில், அதே ‘த்ரிஷ்யம்’ கதையை படமாக எடுக்க இருப்பதாக கமல் அறிவித்தார்.

முன்பணம் கொடுத்த பிறகு, கமல் திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்திற்கு படம் பண்ணாமல் வேறொரு நிறுவனத்திற்கு படம் பண்ண போகிறார் என்று தகவல் கசிந்தது. இதனால் தயாரிப்பாளர்கள்  மீண்டும் கமலை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். அப்போது கமல் மற்றொரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதுவும் தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை. எங்களுக்கு நீங்கள் முதலில் சொன்ன கதையையே படமாக்கி தாருங்கள் என்று தயாரிப்பாளர்கள் கமலிடம் கூறியிருக்கிறார்கள்.

அப்போதும் கூட கமல் முதலில் சொன்ன கதையை இப்போது படமாக்க முடியாது. எனது மனதிற்கு நெருக்கமான கதையை ‘உத்தமவில்லன்’ என்று படமெடுக்கலாம். எனது நண்பர் ரமேஷ் அரவிந்த் அதை இயக்குவார் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அப்பட விஷயத்தில் ஏதேனும் தவறு நடக்கும் பட்சத்தில் முழு நஷ்டத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இதன் பிறகே ‘உத்தமவில்லன்’ படம் தொடங்கப்பட்டது.

’உத்தமவில்லன்’ படம் முடிந்ததும் அதன் முதல் பிரதியை தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் கமல். அதில் பல காட்சிகள் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் சில காட்சிகளை மாற்றியும், கொஞ்சம் எடிட் செய்து வெளியிடலாம் என இயக்குநர் லிங்குசாமி கூறியிருக்கிறார். கமல் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. இதனால், 2015 மே 1-ம் தேதி உத்தமவில்லன் ரிலீஸ் என்று அறிவித்த நாளில் இப்படத்தை தயாரிப்பாளர்களால் வெளியிட முடியவில்லை.

இந்தியாவில் உத்தமவில்லன் வெளியாக நிலையில், தன்னிடம் இருந்த வெளிநாட்டு உரிமையை வைத்து வெளிநாடுகளில் மட்டும் கமல் உத்தமவில்லனை வெளியிட்டார். அங்கு விமர்சனங்கள், கொஞ்சம் கலவையாக வரவே, இங்கு உத்தமவில்லன் படத்தின் விநியோக உரிமையை வாங்க யாரும் முன்வரவில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் மீண்டும் கமலை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அப்போது கமல் முன்பு சொன்னது போலவே, அனைத்து வரிகளையும் சேர்த்து 30 கோடி மதிப்பில் ஒரு படம் செய்ய ஒப்புக் கொள்வதாக கமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் எழுத்து பூர்வமாக உத்திரவாத கடிதம் கொடுத்திருக்கிறார். இதன் பிறகே மே மாதம் 2-ம் தேதி 2015 அன்று உத்தமவில்லனை இந்தியாவில் வெளியிட்டார்கள். ஆனால் இங்கும் அப்படம் வசூலை அள்ளாமல் நஷ்டத்தைக் கொடுத்தது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக கமல் கொடுத்த உத்திரவாத கடிதம் அடிப்படையில் இன்று வரையில் திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்திற்கு படம் எடுத்து கொடுக்கவில்லை என்பதே புகாரின் சாராம்சம்.

இந்த உத்தமவில்லனால் திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம் தனியாக சிக்கிக் கொள்ள என்ன காரணம்?

திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம், அப்போது மிகவும் பரபரப்பான தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. விருதுகளை அள்ளிக் குவித்த தயாரிப்பு நிறுவனமாகவும் பெயர் பெற்றிருந்தது.

ஒரு கட்டத்தில் திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம், வட இந்திய கார்பொரேட் நிறுவனமான யுடிவி- உடன் இணைந்து தமிழ்ப் படங்களை தயாரிக்க ஆரம்பித்தது. திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம் கதை கேட்டு, அதில் நன்றாக இருக்கும் கதைகளை படமெடுக்க முன்வந்தால், யுடிவி-யும் அதில் தனது பங்கை பட்ஜெட்டுக்கு அளிக்கும்.

இப்படியொரு சூழலில்தான், யுடிவி கமலுடன் இணைந்து ஒரு படம் விரும்பியது. அப்போது கமல் சொன்ன கதை ‘உத்தமவில்லன்’ கதை. இந்த கதை யுடிவி நிர்வாகிகளுக்கும் பிடித்துப் போகவே படம் பண்ணலாம் என்று முடிவாகி இருந்தது. ஆனால் கமல் சொன்ன பட்ஜெட் மிக அதிகம் என யுடிவி நிர்வாகிகள் தயக்கம் காட்டியிருக்கிறாரகள்.

பட்ஜெட்டை குறைத்தால் நாம் பண்ணலாம் என யுடிவி கமலிடம் தகவல் தெரிவித்தது. இதனால் கமல் அதே கதையை லிங்குசாமியிடம் கூறியிருக்கிறார். கமலிடம் கொடுத்த முன்பணத்திற்காகவது படமெடுத்துவிட வேண்டுமென நினைத்த லிங்குசாமி வேறு வழியில்லாமல் உத்தமவில்லனுக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார்.  இந்தப் பட த்திற்கான நிதியுதவியை யுடிவி-யிடமிருந்து பெற்று கொள்ளலாம் என்ற நம்பிக்கையில்தான் லிங்குசாமி ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவருக்கு கமல் முன்பே இதே கதையை யுடிவி-யிடம் சொல்லி, அவர்கள் பட்ஜெட்டை காரணம் காட்டி எடுக்காமல் விட்டது எதுவும் தெரியாது. தாங்கள் வேண்டாமென்று சொன்ன கதையை இப்போது லிங்குசாமி எடுக்கிறார் என்பதற்காக நிதியுதவி செய்தால், அது கமலை அவமதிப்பது போலாகிவிடும் என யுடிவி இந்த படத்தில் இணைந்து தயாரிக்க முன்வரவில்லை.

இதனால்தான் லிங்குசாமி, இராஸ் இண்டர்நேஷனல் நிறுவத்துடன் இணைந்து இப்படத்தை எடுக்க திட்டமிட்டார்.

அப்போது கூட எதிர்பாராத பிரச்சினை ஒன்று கிளம்பியது.  கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸுக்கு எதிராக தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ரெட் கார்ட் தடை விதித்து இருந்தது.

இதைக் கேள்விப்பட்ட இராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம், கொடுத்த கடனுக்கான வட்டியையும் சேர்த்து வாங்கிவிட்டு, இப்பட தயாரிப்பில் இருந்து விலகியது.

இந்த இரண்டு சம்பவங்களால் லிங்குசாமி தனித்துவிடப்பட்டார். திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம் மட்டுமே கடன் வாங்கி படமெடுத்து வெளியிட்டது

இப்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் மீது புகாரை அளித்திருக்கிறது திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம். கமல் என்ன செய்ய போகிறார்? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன செய்யப் போகிறது என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.

கமல் தனது டார்ச்சை திருப்பதி ப்ரதர்ஸ் பக்கம் திருப்பி ஒளி கொடுப்பாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...