No menu items!

இந்தியாவை குறி வைக்கும் ஹாலிவுட் – பிரச்சினைகள் என்ன?

இந்தியாவை குறி வைக்கும் ஹாலிவுட் – பிரச்சினைகள் என்ன?

2019-ம் ஆண்டில் 183 பில்லியன்.
2020-ம் ஆண்டில் 139 பில்லியன்.
2021-ம் ஆண்டில் 61 பில்லியன்.
2022-ம் ஆண்டில் 182 பில்லியன்.

படிக்கும் போதே மயக்கம் வரவழைக்கும் இந்த பில்லியன் கணக்கு மைக்ரோசாஃப்ட் உரிமையாளர் பில் கேட்ஸின் வருவாயோ, நம்மூர் அனில் அம்பானி, அதானியின் ஆண்டு வருமானமோ இல்லை.

பில்லியன்களில் குறிப்பிடப்பட்டிருப்பது அந்தந்த ஆண்டுகளில் இந்திய சினிமா துறையின் மதிப்பு. இதிலிருந்தே இந்தியாவில் சினிமாவிற்கு அனைத்து தரப்பு மக்களிடம் இருக்கும் வரவேற்பை எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.

இந்தியாவில் சினிமா என்பது மிக தாமதமாக வந்தடைந்த கலை வடிவமாக இருந்தாலும், இதற்கு இங்குள்ள பழைய கலைகளை விட மவுசு அதிகம். காரணம் பிறப்பு முதல் இறப்பு வரை நம் சமூகத்தோடு ஒன்றிப்போயிருக்கும் பாடல்கள், இசை, புராணங்கள், கதாகாலட்சேபம், தெருக்கூத்து என அம்சங்களை காலத்திற்கு ஏற்றவகையில் நவீனமயமாக, பிரம்மாண்டமாக சினிமா பிரதிபலிப்பதுதான்.

இன்று சினிமாவும், அதை மக்கள் மத்தியில் அவர்களது இல்லங்களுக்குள் இருந்தபடியே பார்த்து ரசிக்க வைக்க உதவும் ஒடிடி தளங்களும் வெகுஜன பொழுதுபோக்கு அம்சங்களாகி இருக்கின்றன.

2007-ம் ஆண்டு முதலிருந்தே உலகில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை தயாரிக்கும் நாடுகளின் டாப் 10 பட்டியலில் இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதேபோல், அதிகளவில் சினிமா டிக்கெட்கள் விற்பனையாகும் மிகப்பெரும் சினிமா சந்தையாகவும் இந்தியா உருவெடுத்து வந்திருக்கிறது. மேலும் இந்தியாவில் தங்களது தயாரிப்புகளுக்கும், நிறுவன வளர்ச்சிக்கும் விளம்பரங்கள் கொடுக்க விரும்புபவர்கள், இந்தியாவில் சினிமாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள், இதனால்தான் சமீப காலமாக சினிமாவில் விளம்பரம் செய்யும் யுக்திகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

2019-ம் நிதியாண்டில், இந்தியா முழுவதிலும் சினிமா விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாய் சுமார் 11 பில்லியன் என ஆச்சர்யப்பட வைக்கிறது. இதனால் இந்திய சினிமாவில் கல்லா கட்ட பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்குள்ள படைப்பாளிகளை விட ஹாலிவுட் மற்றும் மேற்கத்திய சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய சினிமாவின் வருவாயில் ஏறக்குறைய 40% பாலிவுட்டில் இருந்து கிடைக்கிறது. மீதமுள்ள வருவாய் பங்களிப்பை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட இதர பிராந்திய மொழி படங்களும், அந்தந்த மொழிகளில் டப் செய்யப்படும் ஹாலிவுட் படங்களும் அளித்துவருகின்றன.

பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சிக்கண்டு வந்த இந்திய சினிமா துறையின் மதிப்பு இடையில் கோவிட் காலக்கட்டத்தில் மட்டும் எதிர்பாராத சரிவைக் கண்டது. ஆனால் கோவிட்டின் தாக்கம் குறைய ஆரம்பித்ததுமே, சட்டென்று வளர்ச்சிக் காண ஆரம்பித்திருக்கிறது. கோவிட் காலத்துடன் ஒப்பிடும் போது, இது அசுரத்தனமான 196% வளர்ச்சியாகும்

பாக்ஸ் ஆபிஸில் பெரும் சந்தையாக இந்தியா இருப்பதுதான் தற்போது ஹாலிவுட் சினிமா வட்டாரத்தை இந்திய சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட், அட்டகாசமான மேக்கிங், அசத்தலான நட்சத்திரங்கள் பட்டாளம் என களமிறங்கும் ஹாலிவுட் படங்கள், இந்தியாவில் பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருவது தற்போது அதிகரித்து இருக்கிறது. உண்மையில் இந்தப்படங்கள் இங்கு கமர்ஷியல் வேல்யூ அதிகமுள்ள, பாக்ஸ் ஆபிஸில் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் நட்சத்திரங்களின் படங்களைவிட வசூலை அதிகம் அள்ளுகின்றன. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இதனால் இந்திய சினிமா சந்தைக்குள் தங்களது வியாபாரத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்கள் யுக்திரீதியாக திட்டமிட்டு வருகின்றன. ஹாலிவுட் படமாக இருந்தாலும் திரைக்கதையில் முக்கியமான நிகழ்வு இந்தியாவில் நடப்பது போன்று காட்டுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதற்கு உதாரணம், டாம் க்ரூஸின் மிகப்பிரபலமான ‘மிஷன் இம்பாசிபிள்’ தொடரின் 4-வது படமான ‘கோஸ்ட் ப்ரோட்டொகால்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடித்திருப்பார். மேலும் முக்கியமான காட்சிகள் இந்தியாவில் பிரபலமான சென்னையைச் சேர்ந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் நடப்பது போன்று காட்டியிருப்பார்கள். அதே போல் ஜாக்கிசான் நடித்த ‘குங்பூ யோகா’ படத்தில் புதையலைத் தேடும் இடம் இந்தியாவாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் ஹாட் ப்யூட்டி திஷா பதானி நடித்திருப்பார். இதற்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதன் அடுத்தக்கட்டமாக, இங்கு பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களை தங்களது ஆங்கிலப் படங்களில் நடிக்க வைப்பது. அதாவது ஹாலிவுட் ஹீரோக்கள், ஹீரோயின்களுடன் நம்மூர் கமர்ஷியல் ஹீரோவையும் கேமியொவாக நடிக்க வைப்பது.

ஹாலிவுட் சீரியல்களிலும் நம்மூர் ஹீரோயின்களை களமிறக்கி விட்டது பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள். ’குவாண்டிகோ’ மற்றும் ’பே வாட்ச்’ சீரியல்களில் ப்ரியங்கா சோப்ரா, ’த அமேசிங் ஸ்பைடர் மேன்’ படத்தில் டாக்டர் ரஞ்சித்தாக இர்ஃபான் கான், ஆக்‌ஷன் ஹீரோவான வின் டீசலுக்கு ஜோடியாக ‘XXX: Return of Xander Cage’ படத்தில் திபீகா படுகோன், ’நைட் ஆஃப் கப்ஸ்’ படத்தில் கிறிஸ்டியன் பேஸ் மற்றும் நடாலி போர்ட்மேன் உடன் ப்ரீடா பிண்டோ என பாலிவுட் பிரபலங்களை ஹாலிவுட்டுக்கு அழைத்துப் போனதன் பின்னணியில் வியாபார தந்திரங்கள் இருந்தன.

உதாரணத்திற்கு தற்போது வெளியாகி இருக்கும் ‘த க்ரே மேன்’ படத்தில் ’சூப் பாய்ஸ்’ புகழ் தனுஷ் நடித்திருப்பது. இப்படத்தில் தனுஷ் வருவது சில நிமிடங்கள் மட்டும்தான், என்றாலும் இப்படத்திற்கு இந்தியாவில் கிடைத்த விளம்பரம் மற்றும் சோஷியல் மீடியா ட்ரெண்ட்டிங் எல்லாமே அதன் வியாபாரத்திற்கும், ரிலீஸூக்கும் கிடைத்திருக்கும் ப்ளஸ்.

இந்திய நட்சத்திரங்களை ஹாலிவுட் படங்களில் ஒரு கேமியோவாக நடிக்க வைப்பது ஒரு பக்கம், அடுத்து அமெரிக்காவில் படம் வெளியாகும் அதே நாளில் அல்லது அதற்கு ஒரு நாள் முன்னதாகவே ஒடிடி-யில் பார்க்கும் வாய்ப்புகளை இந்திய சந்தையில் உருவாக்கும் பணிகளும் ஹாலிவுட் நிறுவனங்களால் பக்காவாக திட்டமிடப்பட்டு வருகின்றன. படத்தின் ப்ரமோஷனுக்காக இங்கே படங்கள் ப்ரத்யேகமாக திரையிடப்படுகின்றன. பல்வேறு மெட்ரோ நகரங்களில் இருந்து பத்திரிகையாளர்கள் மும்பைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சோஷியல் மீடியா இன்ப்ளூயன்ஸ்ர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இங்கு எடுக்கப்படும் ஒரு கமர்ஷியல் படத்திற்கு என்னென்ன ப்ரமோஷன்கள் எல்லாம் மேற்கொள்ளப்படுமோ அவற்றையெல்லாம், தற்போது ஹாலிவுட் படங்களுக்கும் செய்யும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. இதனால் தற்போது இந்தியப் படங்களுக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் ஹாலிவுட் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கம்பீரமான கலெக்‌ஷன்களை பெற்று வருகின்றன.

இந்நேரத்தில் நாம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது. இந்திய சினிமாவுக்குள் படத்தயாரிப்புகளில் கார்பொரேட் நிறுவனங்கள் களமிறங்கியதும், நிகழ்ந்த நிகழ்வுகளினால் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டாயின. குறிப்பாக சிறிய பட்ஜெட்டிலான படத்தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன.

இந்திய கார்பொரேட் நிறுவனங்கள் நுழைந்த போதே இந்நிலை என்றால், ஹாலிவுட் ஜாம்பவான்கள் நுழைந்தால் என்னவாகுமோ என்ற கவலை இங்குள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்திய சினிமாவை கலாச்சார ரீதியாக, கமர்ஷியல் ரீதியாக மாற்றியமைக்கும் மற்றுமொரு காலனி ஆதிக்கத்தை எதிர்க்கொள்ளும் சூழலில் வெகுஜன ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதே இதற்குள் புதைந்து இருக்கும் காஸ்ட்லியான, பெரும் பட்ஜெட்டிலான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...