கொரோனாவுக்காக போடப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியானது, பக்க விளைவாக இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த 2019இல் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அதில் இருந்து உலகம் மீண்டு வர நான்கு ஆண்டுகள் ஆனது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர கொரோனா தடுப்பூசிகள் முக்கிய காரணமாக இருந்தது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அன்றே திரைப்பட நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல் கொரோனாவுக்கு பின்னரும் இன்று வரை மாரடைப்பு மரணங்கள் ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. குறிப்பாக இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா தடுப்பூசிகளும் ஒரு காரணம் என சில மருத்துவர்களே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரிட்டனில் ஏப்ரல் 2021 அன்று அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். மேலும், அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியானது, இறப்புகளையும் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதாகக் கூறியும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியானது, கோவிஷீல்ட், வாக்ஸ்செவ்ரியா என்ற பெயர்களில் உலகளவில் விற்கப்பட்டது. இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டன. கோவிஷீல்டு தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்று, தடுப்பூசிகளை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேலே குறிப்பிட்ட வழக்கில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில், அரிதான நிகழ்வுகளில் கோவிஷீல்டு பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், “கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவுக்கும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கும் வழிவகுக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) என்றும் அழைக்கப்படுகிறது.
இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிலாந்தில் Oxford-AstraZeneca தடுப்பூசியானது, தற்போது பயன்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், சில தனிநபர் ஆய்வுகளில், இந்த தடுப்பூசி தொற்றுநோயைக் கையாள்வதில் பயனுள்ளதாக இருந்தது எனவும் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தடுப்பூசிக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டு வருகின்றன எனவும் சர்வதேச செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரத்தம் உறைதல் ஏற்பட்டால், ரத்த ஓட்டமானது பாதிக்கும் சூழல் உருவாகும், பிளேட் செல் குறைந்தால், இரத்த வெளியேற்றத்தின்போது கட்டுப்படுத்தும் தன்மையானது குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.