நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறவேண்டும் என்று வேண்டி நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி செட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சா கருப்பு, “எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம். நடைபெற இருக்கின்ற எம்.பி. தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி குடும்பத்துடன் அக்னிச்சட்டி பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளேன்.
எதிர்க்கட்சிகள் பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிப்பது காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள் ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஐயா தலைமையிலான அ.தி.மு.க.,வினர் என்றைக்கும் ஒற்றைப் பரம்பரைதான். தனித்து நின்று ஜெயித்துதான் பழக்கம். கூட்டணி அமைத்து நின்று பழக்கம் இல்லை. என்றைக்கும் எடப்பாடி எடப்பாடிதான். அவர் ஒரு விவசாயி அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும். அதனால் பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும் தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும். ஜெய்பவர்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள் எடப்பாடி ஐயாவை போல” என்றார்.
வாரணாசியில் மோடியை எதிர்த்து நிற்கும் திருநங்கை
வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி என்ற திருநங்கை போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பு அவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 46 வயதாகும் ஹேமாங்கி சகி, உலகம் முழுக்க பயணம் செய்து இந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் ஆவார்.
தேர்தலில் போட்டியிடுவது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹேமாங்கி சகி, “ நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்காக நாட்டில் ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை.
எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பது இல்லை. இந்த சூழலில் திருநங்கைகளுக்கு ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன்அகில இந்திய இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை இதர கட்சிகளும் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
பாஜக ஜெயிச்சா அமைதி போயிடும் – எச்சரிக்கும் நிர்மலாவின் கணவர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
அவரது வீடியோ ஒன்று காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதில் பரகால பிரபாகர் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்னை போல நாடெங்கும் நடக்கும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்களை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார்.
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.