தமிழ்நாட்டு அரசியலின் மொத்தப் பார்வையும் ஈரோடு பக்கம் திரும்பியிருக்கிறது.
திமுக கூட்டணியில் இடைத் தேர்தலில் யார் போட்டி என்பது சிக்கல் இல்லாமல் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2021 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால் அதற்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே காங்கிரஸ் சார்பாக மறைந்த திருமகன் ஈவேரா குடும்பத்தினர் சார்பாக ஒருவர் களமிறக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஈவிகேஎஸ் குடும்பத்திலிருந்து ஒருவர் களமிறங்கினால் காங்கிரசின் வெற்றி உறுதி செய்யப்படும். இளம் வயதிலேயே திருமகன் ஈவேரா மறைந்தது நிச்சயம் தொகுதி மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கும். அனுதாபம் + கூட்டணி பலம் + ஆளும் கூட்டணி என்று கணக்கிடால் காங்கிரசின் வெற்றி உறுதி என்பது தெரிகிறது.
ஆனால் இந்தத் தேர்தலின் சுவாரசியம் யார் வெற்றி பெறுவார் என்பதில் இல்லை. பிளந்துக் கிடக்கும் அதிமுகவும் அத்தனைக்கும் ஆசைப்படும் பாஜகவும் எப்படி இந்தத் தேர்தலை சந்திக்கப் போகின்றன என்பதில்தான் அரசியல் ஆர்வம் இருக்கிறது.
இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் நாங்கள்தாம் அதிமுக, நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவோம் என்று ‘அதிமுக’வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ள மற்ற செய்திகளும் முக்கியமானவை.
பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆதரவு கேட்டால் ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.
2021 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டது அதிமுக அல்ல, கூட்டணிக் கட்சியான தமாகா. அது போட்டியிட விருப்பமில்லாதபோது மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கிறதா என்று கேட்க வேண்டும். அந்த அடிப்படையில் பாஜகவுக்கு ஆதரவு.
ஒன்றுபட்ட அதிமுகதான் எங்கள் விருப்பம். அதற்காக எடப்பாடி பழனிசாமியுடன் பேசத் தயார்.
இரட்டை இலை சின்னம் முடங்கி போக ஒருபோதும் நான் காரணமாக இருக்க மாட்டேன். ஒருவேளை சின்னத்தை தேர்தல் ஆணையமே முடக்கினால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.
அதிமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்திடமும் பேசுவோம். கூட்டணி கட்சியினரும் எங்களிடம் பேசி தான் வருகின்றனர்.
அதிமுகவில் தற்போதைய நிலவரப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே உள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் ஃபார்ம்களில் நான் கையெழுத்து போடுவேன். உள்ளாட்சி தேர்தலிலேயே நான் ஒருங்கிணைப்பாளராக கையெழுத்து இட்டேன். எடப்பாடி பழனிசாமி தான் கையெழுத்து இடவில்லை.
இவையெல்லாம் செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தவை.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி அணிதான் பலமிக்கது. அங்கு ஓபிஎஸ் அணிக்கு பலம் கிடையாது. எனினும் ஓபிஎஸ் மோதலுக்கு தயாராக இருக்கிறார்.
கூட்டணிக் கட்சிகள் தன்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எடப்பாடி பிரிவினருடன் தான் பேசியது. அவர்களுடன் பேசிதான் அதிமுக போட்டியிடுகிறது என்று தெரிவித்தது. அப்படியென்றால் ஓபிஎஸ் அணியுடன் பேசும் கூட்டணிக் கட்சி எது என்று தெரியவில்லை.
2021 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநிலக் காங்கிரஸ்தான் போட்டியிட்டது. அவர்களையே இந்தத் தேர்தலிலும் போட்டியிட சொல்லி இந்த சர்ச்சைகளை எடப்பாடி பழனிசாமியால் தவிர்த்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதிமுக பிளவுக்கும் இரட்டை இலை சின்ன சிக்கலுக்கும் இந்தத் தேர்தலிலேயே ஒரு முடிவு கட்ட அவர் விரும்புகிறார். இடைத் தேர்தலை சந்திப்பதன் மூலம் பாஜக அழுத்தங்களையும் குறைக்க முடியும்.
இப்போது இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வந்தால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலை தீர்க்கமாக சந்திக்க முடியும் என்று அவர் நினைப்பது அவரது அரசியல் நகர்வுகள் மூலம் தெரிகிறது.
எடப்பாடியின் இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டு பாஜகவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருந்திருக்கும். ஏனென்றால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தல் பணிக்குழுவை நியமித்தது பாஜக. அது மட்டுமில்லாமல் செய்தியாளர்களிடம் அண்ணாமலை சந்தித்தப்போது, எடப்பாடியுடனும் வாசனுடமும் பேசியிருப்பதாகவும் அவர்களின் கருத்துக்களை மேலிடத்துக்கு சொல்லியிருப்பதாகவும் மேலிட முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் பாஜகவின் மேலிட முடிவுக்கு எடப்பாடியும் வாசனும் காத்திராமல் தங்கள் நிலைப்பாடுகளை அறிவித்துவிட்டார்கள்.
இப்போது பந்து பாஜகவிடம் வந்திருக்கிறது. அவர்கள்தான் விளையாட வேண்டும். எடப்பாடியுடன் இணைந்து செயல்படப் போகிறார்களா? அல்லது தனித்து நிற்கப் போகிறார்களா? ஓபிஎஸ் ஆதரவை கோரப்போகிறார்களா? என்ற கேள்விகள் இருக்கின்றன.
தனித்து நின்றால் அவர்களின் உண்மையான பலம் தெரிந்துவிடும். அது அவர்களுக்குப் பலவீனமாக முடிவதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஓபிஎஸ்ஸிண்டம் ஆதரவு கேட்டு ஓபிஎஸ் அணி கூட்டணியில் போட்டியிட்டால் எடப்பாடி எதிராளி ஆகிவிடுவார்.
எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து நிலைப்பாடு எடுத்தால் ஓபிஎஸ் கோபித்துக் கொள்வார்.
இப்படி ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது பாஜக. எடப்பாடி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளித்து பின்னார் ஓபிஎஸ்ஸை சமாளிப்பதுதான் பாஜகவின் நிலைப்பாடாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
இரட்டை இலை யாருக்கு? எடப்பாடி அணிக்கா? ஓபிஎஸ் அணிக்கா? அல்லது முடக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2022 ஜூன் மாதம் நடந்த பொதுக் குழு செல்லுமா செல்லாதா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. எடப்பாடி பொதுச்செயலாளர் என்று சொன்ன பொதுக் குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து ஓபிஎஸ் அணி உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறது. வழக்கின் தீர்ப்பு இந்த மாத இறுதியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது தேர்தல் ஆணையம் ஒரு முடிவெடுக்குமா என்பது சந்தேகமே.
வேட்பாளர் படிவங்களில் ஒருங்கிணைப்பாளார், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துகள் அவசியம். இருவர் கையெழுத்து இருந்தால்தான் அதிமுகவின் வேட்பாளாராக போட்டியிட முடியும்.
இன்று வரை தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று என் பெயர்தான் இருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இரட்டை இலை சின்னம் கிடைக்க அது மட்டும் போது என்பது தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி 2011 சட்டப் பேரவைத் தேர்தலின் போது உருவான தொகுதி. 2011, 2016 ஆகிய இரண்டு பொதுத் தேர்தல்களில் அதிமுகவே வென்றிருக்கிறது. 2021 தேர்தலில் அங்கு 8094 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக அணியின் சார்பில் போட்டியிட்ட தமாகா தோற்றது. அங்கு அதிமுகவே போட்டியிட்டிருந்தால் வெற்றிப் பெற்றிருக்க முடியும் என்று அப்போதே கூறப்பட்டது.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருப்பதால் இந்த முறை தீவிரமாய் முயற்சித்தால் வெற்றிப் பெற்று விட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். வெற்றி பெறாவிட்டாலும் கடந்த முறை தோற்றதை விட குறைவான வாக்குகளில் தோற்றாலும் கூட தங்களுக்கு வெற்றிதான் என்று எடப்பாடி அணி கருதுகிறது. முக்கியமாய் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் வேறு சின்னத்தில் போட்டியிட்டாலும் அது எடப்பாடிக்கு சாதகம்தான். ஓபிஎஸ்ஸால்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது என்று பழியை ஓ.பன்னீர்செல்வம் மீது போடலாம்.
இரட்டை இலை சின்னம் இல்லாமல் போட்டியிட்டு தோற்றால் இரட்டை இலை சின்னம் இல்லாததால் தோற்றோம் என்றும் கூறலாம்.
வாக்குகள் அதிகமாய் வாங்கினால் கூட்டணிக் கட்சியினருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம்.
இப்படி பல கணக்குகள் எடப்பாடி அணியிடம் இருக்கின்றன.
எடப்பாடியின் அரசியல் கணக்குகளின் அடிப்படையிலேயே ஓபிஎஸ் அணியும் பாஜகவும் தங்கள் திட்டங்களை போட வேண்டியிருக்கிறது என்பதுதான் இன்று அதிமுக கூட்டணியின் நிலை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் எடப்பாடி பழனிசாமியின் அரசியலைத் தீர்மானிக்கும் தேர்தலாக மாறப் போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.