வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா ஆகியோருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலி என்ற செய்திகள் வந்திருக்கின்றன.
நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் போன்ற சில பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
வடிவேலு நிகழ்ச்சிக்கு வராததால் அவருடைய வீட்டுக்கே சென்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. வடிவேலுவும் எம்.ஜி.ஆர் நடித்த நான் ஏன் பிறந்தேன் படத்தில் வரும் ’ கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்’ என்ற வரிகளைப் பாடி டாக்டர் பட்டத்தை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்.
இப்போது இந்த டாக்டர் பட்டம் போல் என்றும் அதை வழங்கியது போலியான அமைப்பு என்றும் செய்திகள் வந்திருக்கிறது.
என்ன நடந்தது?
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்புதான் இந்த டாக்டர் பட்டங்களை வழங்கியிருக்கிறது.
இது என்ன அமைப்பு? இந்த அமைப்பு என்ன செய்கிறது? என்ற விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் இந்த சந்தேகங்கள் யாருக்கும் வரவில்லை.
காரணம், நிகழ்ச்சியை நடத்தியவர்களின் சாமர்த்தியம்.
போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட இடம் அண்ணா பல்கலைக் கழக அரங்கம். டாக்டர் பட்டங்களை வழங்கியவர் ஓய்வுப் பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம்.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களும் யாருக்கும் சந்தேகம் வந்து விடாதபடி பல்கலைக் கழக விழா என்பது போல் அச்சிடப்பட்டிருந்தன.
அதனால் எந்த சந்தேகமும் எழாமல் பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட பட்டத்தையும் சந்தோஷமாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வடிவேலு நிகழ்ச்சிக்கு வராததால் அவரது வீட்டுக்கே சென்று டாக்டர் பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள். வடிவேலுவிடம் அமைப்பைப் பற்றி கூறிவிட்டு அவருக்கு பதக்கத்தையும் பட்டத்தையும் அளித்திருக்கிறார்கள். அவரும் மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர். பாடலைப் பாடி டாக்டர் பட்டத்தை வாங்கிக் கொண்டார். அந்தக் காட்சிகள் விடீயோவாக எடுக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் பரப்பப்பட்டன.
இப்போது அனைத்தும் போலி. பிரபலங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
டாக்டர் பட்டத்துக்கும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் தொடர்பில்லை என்று வெளிப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தில் ஓய்வுப் பெற்ற நீதிபதியும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். தான் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டது குறித்து அவர் வருத்தங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால் அண்ணா பல்கலைக் கழகம் எப்படி தங்கள் அரங்கத்தில் டாக்டரேட் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது என்பதுதான்.
இந்தக் கேள்விக்கு அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் இன்று பதிலளித்திருக்கிறார்.
”நடிகர் வடிவேலு உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த நிகழ்ச்சியை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்தில் டீனிடம் தனியார் அமைப்பை சேர்ந்த ஹரீஷ் என்பவர் அனுமதி கேட்டிருந்தார். இந்த அமைப்பு பிரபலமானது இல்லை என்பதால் முதலில் டீன் அனுமதி வழங்க மறுத்தார். ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் அளித்ததாக கூறி ஒரு கடிதத்தை டீனிடம் கொடுத்து அனுமதி வாங்கிவிட்டார்கள்.
முன்னாள் நீதிபதி கடிதம் அளித்ததால் நிகழ்ச்சி நடத்திக்கொள்ள நாங்கள் அனுமதி அளித்தோம். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அந்தக் கடிதமே போலி என்று.
எங்களிடம் இப்படி பேசிவிட்டு வள்ளிநாயகத்திடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என சொல்லி அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். அழைப்பிதழிலும் விழா நடைபெறும் இடம் என்ற இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரை மிகவும் பெரிய அளவில் போட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து காவல் துறையிடம் புகார் கொடுப்போம்” என்று துணைவேந்தர் வேல்ராஜ் கூறியிருக்கிறார்.
நிகழ்ச்சி அமைப்பாளர்களும் இப்போது தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டார்கள். அவர்களை செய்தியாளர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.