நயன்தாராவின் 75ஆவது படமான ‘அன்னப்பூரணி’ பிராமணர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ராமர் மாமிசம் சாப்பிட்டார் என்பதாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனமே சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. படத்தில் சொல்வதுபோல் ராமர் மாமிசம் சாப்பிட்டாரா? வால்மீகி ராமாயணம் என்ன சொல்கிறது?
அன்னபூரணி படத்தில் என்ன பிரச்சினை?
லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் 75ஆவது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனே கடந்த 1ஆம் தேதி வெளியானது ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ். ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், சுரேஷ் சக்ரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, பூர்ணிமா, சச்சு, ரேணுகா ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
சமையல் தொழிலில் சாதிக்க நினைக்கும், ஸ்ரீரங்கம் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதைதான் இந்த படம். ‘கார்ப்பரேட் செஃப்’ ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டில் இருந்து வரும் நயன்தாரா கடைசியில் தன் கனவை அடைந்தாரா என்பதே திரைக்கதை.
இதில், ‘கார்ப்பரேட் செஃப்’ ஆக வேண்டும் என்ற தன் கனவை சாத்தியப்படுத்துவதில், அசைவம் சமைக்க வேண்டும் என்னும் நிலை, அர்ச்சகர் மகளான அன்னபூரணிக்கு தடையாகிறது. அப்போது, அவரை ஊக்குவிக்கும் வகையில் பேசும் ஜெய், “ராமர் கூட அசைவ உணவைச் சாப்பிட்டிருக்கிறார். ராமர், லட்சுமணர், சீதை மூவரும் காட்டில் இருந்த போது விலங்குகளை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்டவர்கள். இது அயோத்தியக் கண்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்” என்று கூறுவார். ஜெய் ஒரு இஸ்லாமியராக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் சர்ச்சைக்கு முதல் காரணம்.
மேலும், அர்ச்சகர் மகளான அன்னபூரணி நமாஸ் செய்வது, மாமிசம் உணவுகளை சமைப்பது, சிக்கன் பிரியாணி செய்வதற்காக புர்கா அணிவது போன்ற காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் படம் திரையரங்கில் வெளியானபோது இந்த எதிர்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், வட இந்தியாவைச் சேர்ந்த ‘விஷ்வ இந்து பரிஷத்’ உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மும்பையைச் சேர்ந்தவரும் சிவசேனா முன்னாள் தலைவருமான ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பைக் காவல் துறையில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
ராமர் இறைச்சி சாப்பிட்டாரா இல்லையா?
ஆன்மிக சொற்பொழிவாளரும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருமான துஷ்யந்த் ஸ்ரீதர், “ராமர் மாமிசம் சாப்பிட்டுள்ளார். இதிகாச புராண காலகட்டத்தில் பிராமணர்களும் மாமிசம் சாப்பிட்டார்கள். வசிஷ்டர் முயல்கறி சாப்பிட்டுள்ளார். பிறகு அது குறைந்துவிட்டது. வேதம் கற்றுக் கொடுப்பவர்கள், வேதம் கற்றுக் கொள்பவர்கள் உடல் லேசாக இருக்க வேண்டும். சீரான செரிமானம் ஆகக் கூடிய எளிதான உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் இனிமேல் வரும் பிராமணர்கள் இனி மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று வடக்கிலிருந்து தெற்கு வரும் அகஸ்தியர் கூறியதாக புராணத்தில் உள்ளது. இதற்கு பிறகு பிராமணர்கள் மாமிசம் சாப்பிடவில்லை. இது சங்கரர், ராமானுஜர் காலத்தில் இன்னும் அதிகமாக மாறிவிட்டது” என்று கூறுகிறார்.
நெட்பிளிக்ஸ் ஏன் படத்தை நீக்கியது?
படத்தில் குறிப்பிடப்படுவது போல் ராமர் மாமிசம் சாப்பிட்டாரா இல்லையா, வால்மீகி ராமாயணம் என்ன சொல்கிறது என்ற சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, இதனிடையே சர்ச்சை காரணமாக, ‘அன்னபூரணி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஜீ’ படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கியது.
மேலும், ‘விஷ்வ இந்து பரிஷத்’ அமைப்பிற்கு மன்னிப்புக் கோரி கடிதம் ஒன்றையும் எழுதியது. அதில், “உங்களின் புகார்களைக் கருத்தில் கொண்டு ‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்திலிருந்து ‘அன்னபூரணி’ படத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். சமந்தப்பட்டக் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கிய பிறகு படம் மீண்டும் ஒளிபரப்பாகும்.
படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில், இந்து மத உணர்வுகளையும் பிராமண சமூகத்தின் உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் இப்படத்தை எடுக்கவில்லை. அப்படி எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. எந்த வகையிலேனும் உங்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருந்தால் எங்களின் மன்னிப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
படத்தை நீக்கியது சரியா?
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரைப்பட விமர்சகரும் எழுத்தாளருமான தீபா ஜானகிராமன், ‘அன்னபூரணி’ படம் வெளிவந்த அன்றே பார்த்தேன். நான் பார்த்த வரையில் ‘நாங்க யாரையும் எதுவும் சொல்லல’ என்கிற ரீதியில் பார்த்து பதமாக பல லாஜிக்குகளை வைத்து தான் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். சொல்லப்போனால், இப்படியான பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்கிற இயக்குநரின் தயக்கம் பல காட்சிகளில் தெரிந்தது.
ராமரும் லட்சுமணனும் அசைவம் சாப்பிட்டார்கள் என்ற காட்சியும் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளி சேவகரின் மகள் அசைவம் சாப்பிடுகிறார் என்பதைக் காட்டியதும் தான் பிரச்சனை என்பதாகத் தெரிகிறது. அதேநேரம், இராமாயணத்தில் இராமர் அசைவம் சாப்பிட்டார் என்று உள்ளது என்றால், இராமாயணமே புண்படுத்தும் காவியம் தானே என்கிற கேள்வி எழுகிறது.
செஃப்களாக எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இன்று பணி செய்யும் காலத்தில் இப்படி படத்தை நீக்கச் சொல்வது என்பதெல்லாம் ஒருவரின் வேலையை தாழ்மைப்படுத்தும் செயல். எதற்கு எதிராகப் படத்தினைத் தர நினைத்தார்களோ அதையே ஆயுதமாக்கி நீக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது இனிவரும் காலங்களில் இது தொடரும் என்பது தான் வேதனையான உண்மை” என்கிறார்.