தனுஷ், ராஜ் கிரணை வைத்து பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கினார். போட்ட முதலுக்கு மோசமில்லாமல் படம் ஓடியது.
இப்போது மீண்டும் டைரக்ஷனில் இறங்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு இப்போது ‘D 50’ என்று ஒரு தற்காலிக பெயரை வைத்திருக்கிறார்கள்.
தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்க இருக்கிறது.
ஆனாலும் தனுஷூக்கு ஏதோ குறைவது போல் உணர, பட்டென்று அமலா பாலையும் கமிட் செய்ய சொல்லியிருக்கிறாராம்.
‘விஜபி’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். தனுஷ் தயாரித்த ’அம்மா கணக்கு’ படத்திலும் அமலா பால்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்போதுதான் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று கிசுகிசு கிளம்பியது.
பிரச்சினைகள் உருவானது. அதற்கேற்றால் போல் தனுஷூம் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழப் போவதில்லை என்றார். அதையே ரஜினியும் மகளும் கூறினார்.
இந்த சூழ்நிலையில் மீண்டும் அமலா பாலை தனது படத்தில் நடிக்க தனுஷ் அழைத்திருப்பது கோடம்பாக்க வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது.
சூர்யாவுக்குப் போட்டியாக விக்ரம்!
சூர்யா, சிறுத்தை சிவா இணையும் ‘கங்குவா’ படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுத்து வருகிறார்கள். சூர்யா நடித்த படங்களிலேயே இதுதான் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படம்.
சூர்யா இதுநாள் வரை பண்ணியிராத வகையில், 10 மொழிகளில் கங்குவாவை திரையிட இருக்கிறார்கள். அதேபோல் இப்படத்தை 3டி-யிலும் எடுத்து வருகிறார்கள்.
இதனால் ‘தங்கலான்’ வட்டாரமும் சுறுசுறுப்பாகி இருக்கிறது. சூர்யா படம்தான் 3டி-யா… நாங்களும் 3டி-யில் எடுப்போம் என களத்தில் இறங்கியிருக்கிறது தங்கலான் படக்குழு.
சென்னையில் ‘தங்கலான்’ ஷூட்டிங்கை முடித்த பா. ரஞ்சித், இப்போது ஷூட் செய்ய மதுரைப் பக்கம் கிளம்பிவிட்டார்.
கங்குவாவைப் போலவே 3டி-யில் எடுப்பதோடு, விஷூவல் எஃபெக்ட்ஸிலும் பரபரக்க வைக்கும் திட்டத்தோடு தங்கலானை எடுத்து வருகிறார்களாம்.
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வேலைகள் ஜூலை மாதம் தொடங்க இருக்கிறதாம்.
கங்குவா வரும் போது தங்கலானும் களத்தில் மல்லுக்கட்ட வேண்டுமென்பதே தற்போதைய திட்டமாம்.
ரஜினியும் இல்ல.. கமலும் இல்ல.. – லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் எங்கு சென்றாலும் கூடவே பத்து பதினைந்து பவுன்சர்கள் திமிறிக்கொண்டு, அவரை சுற்றி வளைத்து கொண்டு வருவதை பார்க்கலாம்.
த்ரிஷா, நயன்தாராவுக்கு கூட இல்லாத அளவிற்கு இப்படி பவுன்சர்களோடு லோகேஷ் கனகராஜ் வருவதிலிருந்தே அவருக்கு இருக்கும் மவுசு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதனால்தான் லோகேஷ் கனகராஜை மடக்கிப் போடும் வேலைகளில் கமல் ஏற்கனவே இறங்கிவிட்டார். ரஜினி ஒரு தூண்டிலைப் போட்டு வைத்திருக்கிறார் என்பதே கோடம்பாக்க வட்டார பேச்சு.
இதற்கிடையில் கார்த்தி வேறு காத்திருக்கிறார் என்பது வேறு.
ஆனால் லோகேஷ் கனகராஜ், இந்த மூன்று பேருக்கும் நெல்லை இருட்டுக்கடை அல்வாவை கூரியரில் அனுப்பிவிட்டு, ஆந்திரா கோங்குரா சட்னியை ருசிக்க ஹைதராபாத் கிளம்பிவிடுவார் போலிருக்கிறது.
லேட்டஸ்ட் சமாச்சாரம் என்னவென்றால், லோகேஷ் கனகராஜூம், பாகுபலி புகழ் பிரபாஸூம் இணைய இருக்கிறார்கள் என்பதே.
விஜயுடன் இணைந்து எடுத்துவரும் ‘லியோ’ ஷூட்டிங் முடிந்ததும், பிரபாஸ் படத்திற்கான கதை, திரைக்கதை என எழுத்து வேலைகளில் லோகேஷ் கனகராஜ் இறங்கப் போகிறாராம்.
பிரபாஸ் இப்போது 300 கோடி பட்ஜெட்டுக்கு குறைந்த படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். லோகேஷூக்கும் இன்னும் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணினால், சீக்கிரமே பாலிவுட்டில் தடம் பதிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. இதனால் இந்த இருவரும் இணையும் போது, பட்ஜெட் தானாகவே எகிறி விடும்.
இதைதான் லோகேஷ் கனகராஜூவும் எதிர்பார்க்கிறாராம்.