சமீபகாலமாகவே விஜய் மார்கெட் தாறுமாறாக எகிறிக்கொண்டிருக்கிறது. இதனால் பாக்ஸ் ஆபீஸில் இவரது படங்கள் சுமாராக இருந்தாலும் கூட வசூலை அள்ளிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் வேறு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அவருக்கு நெருங்கிய நண்பர்கள்.
இதனால் விஜயின் மனதில் இடம் பிடிக்க அவரது கூடாரத்திலேயே கடும்போட்டி நிலவுகிறது. விஜய்க்கு நெருக்கமாக இருப்பதில் அவரது மேனேஜர் ஜெகதீஷூக்கும், ’லியோ’ படத்தயாரிப்பாளர் லலித் குமாருக்கும் இடையில் யார் நம்பர் ஒன் என்பதில் ஒரு ரேஸ் முதலில் இருந்தது. ஆனால் இப்போது விஜயின் அரசியல் தூதுவதராக முக்கியத்துவம் பெற்று வரும் புஸ்ஸி ஆனந்துக்கும், ஜெகதீஷூக்கும் இடையில் இப்போது மறைமுக யுத்தம் நடைபெற்று வருகிறதாம்.
இந்த முக்கோண யுத்தத்தில் அவரவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை வைத்து விஜயின் பார்வையை தங்கள் பக்கம் வைத்திருக்க முயற்சித்து வருகிறார்களாம்.
அந்த வகையில், சினிமாவை வியாபாரரீதியாக யோசிக்கும் லலித் குமார், ’லியோ’ படத்தை வேறு தளத்தில் கொண்டு சென்றால், விஜயின் கவனத்தை தன் பக்கமே வைத்து கொள்ளலாம் என யோசிக்கிறாராம்.
இதற்கு அவர் யோசித்திருக்கும் திட்டம்தான் ஹைலைட். சமீபகாலமாக தெலுங்கு சினிமாவிற்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து, அதே பார்மூலாவை ‘லியோ’ படத்திற்கு முயற்சிப்பதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறாராம்.
தற்போதுள்ள தெலுங்கு சினிமாவில் சில வருடங்கள் வரை கொடிகட்டிப் பறந்த மகேஷ் பாபுவை ‘ப்ரின்ஸ்’ என்று தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். மகேஷ் பாபுவுக்கு என்று ஒரு மவுசு இருந்தது. ஆனால் ’பாகுபலியின்’ வருகைக்குப் பிறகு இன்று அதே மகேஷ் பாபுவை விட பெரும் மார்க்கெட்டை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் பிரபாஸ்.
இன்று பிராஸூக்கு பான் – இந்தியா ஹீரோ என்ற பெயரும், பெரும் பிஸினெஸ்ஸூம் இருக்கிறது. இது மகேஷ் பாபுவுக்கு இருப்பதைவிட பல மடங்கு அதிகமாகி இருக்கிறது.
அதேபோல், ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இவர்கள் இருவரும் ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் க்ளோபல் ஹீரோக்கள் ஆகிவிட்டார்கள். இந்தியாவைத் தாண்டி இவர்கள் இன்று பிரபலமான தெலுங்கு ஹீரோவாகிவிட்டார்கள்.
இப்படி தென்னிந்தியாவிலிருந்து தெலுங்கு ஹீரோக்கள் இந்திய அளவிலும், உலகளவிலும் முக்கியத்துவம் பெற்றாலும், அதே அளவிற்கு தமிழ் ஹீரோக்களால் பெயர் வாங்க முடியவில்லை.
இந்த ஒரே விஷயத்தைதான் இப்போது விஜய் விஷயத்தில் கையிலெடுத்து இருக்கிறார் லலித் குமார்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் ‘லியோ’ படம் தன் வசம் இருப்பதால், அதை வைத்து இப்போது லலித் குமார் புது திட்டமொன்றை செயல்படுத்த இருக்கிறாராம்.
அதாவது தெலுங்கு சினிமாவை உலகறிய செய்தது போல், லியோ மூலம் விஜயை க்ளோபல் ஹீரோவாக முன்னிறுத்தும் ஐடியாவை கையிலெடுத்து இருக்கிறார் லலித் குமார்.
அதாவது, ‘லியோ’ படம் தமிழில் மட்டுமின்றி இந்தியாவின் பிற முக்கிய பிராந்திய மொழிகளில் வெளியிடுவதோடு, வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு வருகிறாராம்.
ஜெர்மன் மொழியில் ‘லியோ’வை வெளியிடுவதோடு, இப்படத்தின் ஒடிடி உரிமையை வாங்கி இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் மூலம் இப்படத்தை மற்ற அந்நிய மொழிகளிலும் வெளியிட இருக்கிறார்கள். இதனால், ’லியோ’ ஒடிடி தளத்தில் உலகளவில் ரிலீஸாகும் வாய்ப்பை உருவாக்கிவிடலாம்.
விஜயை ஒரு க்ளோபல் ஹீரோவாக முன்னிறுத்திவிட்டால், அதுவே தனக்கு தேவையான முக்கியத்துவத்தை கொடுத்துவிடும் என லலித் குமார் கணக்குப் போடுகிறாராம்.