விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
லியோவுக்கு அடுத்தது யார் விஜய் படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பலவிதமான பேச்சுக்கள் அடிப்பட்டன.
‘வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி மீண்டும் இயக்க, தில் ராஜூ அப்படத்தை தயாரிக்க இருக்கிறார். அட்லீ தற்போது ஷாரூக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து இயக்கி வரும் ’ஜவான்’ படத்திற்குப் பிறகு மீண்டும் விஜயை வைத்து படம் இயக்கப் போகிறார். ஏ.ஆர். முருகதாஸூம் விஜயுடன் இணைய முயற்சித்து வருகிறார். இப்படி பல்வேறு தலைகள் உருட்டப்பட்டன.
ஆனால் இப்போது விஜய்68 படத்தை, சமீபத்தில் ‘கஸ்டடி’ என்னும் ஃப்ளாப் படத்தைக் கொடுத்த வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. இறுதியில் ஏஜிஎஸ் நிறுவனம் அது உண்மைதான் என்று அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டு இருக்கிறது.
சமீபகாலமாகவே விஜய் படங்களுக்கு இசையமைத்து வருபவர்கள் ஜி.வி. பிரகாஷ் அடுத்து அனிருத் ரவிச்சந்திரன் இவர்கள் இருவரும்தான். அதனால் வெங்கட் பிரபு இயக்கப் போகும் படத்திற்கும் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர்தான் இசையமைக்கும் வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விஜயுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்த ’புதியகீதை’ படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் வெங்கட் பிரபு படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளராக இருக்கும் யுவனுக்கு விஜய்68-ல் வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறப்பட்டது.
வெங்கட் பிரபு சொன்ன ஒன் லைன் விஜய்க்குப் பிடித்து போகவே, அவர் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் போய் கதையைச் சொல்லுங்கள் என்று கைக்காட்டியிருக்கிறார். அங்கு சென்ற வெங்கட் பிரபு, அவர்களிடமும் ஒன் லைனை சொல்லியிருக்கிறார். விஜய் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று நீண்ட நாட்களாகவே காத்திருந்த ஏஜிஎஸ், விஜய் நேரடியாக அனுப்பியதால் வெங்கட் பிரபுவை உடனடியாக கமிட் செய்துவிட்டது.
வழக்கம் போல் வெங்கட் பிரபு, யுவன்ஷங்கர்ராஜாதான் இசை என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் யோசித்த ஏஜிஎஸ் தரப்பு, விஜயிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடலாம் என்று யோசித்திருக்கிறது.
கதை ஒகே. திரைக்கதை வேலைகளை ஆரம்பியுங்கள். மற்றப்படி படத்தில் யார் யார் பணியாற்றவேண்டுமென்பதை வெங்கட் பிரபுவே முடிவு செய்து கொள்ளட்டும். அவருக்கு செட் ஆகிற டெக்னீஷியன்களையே கமிட் செய்து கொள்ளுங்கள் என்று விஜய் ஒரே வரியில் அந்தப் பிரச்சினையை முடித்து வைத்துவிட்டாராம்.