சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று மட்டும் 100 குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களாகவே சென்னையில் ஃப்ளூ காய்ச்சலும் இருமலும் அதிகரித்து வருகிறது. மிக முக்கியமாய் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குழந்தைகள்.
“சென்னையில் குழந்தைகள் மருத்துவமனைகளில் இப்போது கூட்டம் அதிகரித்திருக்கிறது. படுக்கைகளுக்கு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஐசியுக்களும் நிரம்பியுள்ளன. இன்னும் சில வாரங்கள் இது நீடிக்கும்” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா காலத்தில் இந்த ஃப்ளூ காய்ச்சல் அதிகமில்லை. கொரோனாவே முக்கிய பாதிப்பாக இருந்தது. இப்போது சென்னையை ஃப்ளூ காய்ச்சல் பிடித்துள்ளது.
அதிக ஜூரம், விடாத இருமல், தீவிர ஜலதோஷம் – இவைதான் இந்தக் காய்ச்சலின் அறிகுறிகள். மூன்று அல்லது நான்கு நாட்கள் இது நீடிக்கும் இந்த காய்ச்சல் பிறகு குறைகிறது. காய்ச்சல் நின்றாலும் உடல் களைப்பும் சோர்வும் அதிகமாக இருக்கலாம். இந்த களைப்பு ஓரிரு வாரங்கள் நீடிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே போல் இருமல் நிற்கவும் சில தினங்கள் கூடுதலாக ஆகும் என்கிறார்கள்.
இந்தக் காய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆர்எஸ்வி (Respiratory Syncytial Virus) என்ற வைரஸ். இருமும்போதும் தும்மும்போதும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுகிறது. முடிந்தவரை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து தள்ளி நிற்பது நலம்.
இதற்கு வழக்கமாக கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள், பாராசிடமல் மாத்திரைகள், இருமல் சிரப் போன்றவையே கொடுக்கப்படுகின்றன. ஆனால் எத்தனை மாத்திரைகள் சாப்பிட்டாலும் மூன்று அல்லது நான்கு நாள் காய்ச்சல் இருந்துதான் செல்லும்.