நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் கால்பதித்ததை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றிக்கு காரணமானவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
எஸ்.சோம்நாத் (இஸ்ரோ தலைவர்):
சமஸ்கிருதத்தில் சோம்நாத் என்றால் நிலவின் நாயகன் என்று அர்த்தம். இப்போது நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம் நிஜமாகவே நிலவின் நாயகனாகி இருக்கிறார் சோம்நாத். ஏரோஸ்பேஸ் இஞ்ஜினீயரான இவரது முழுப் பெயர் ஸ்ரீதர் பணிக்கர் சோம்நாத்.
கேரளாவின் சேர்த்தலாவில் உள்ள துறவூரில் பிறந்தவர் சோம்நாத். இவரது அப்பா ஒரு இந்தி வாத்தியார். ஆங்கிலம் படித்தால்தான் சாதிக்க முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சோம்நாத் மலையாள மொழியில்தான் பள்ளிப் படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இவர் அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
அரூரில் உள்ள செயின்ட் அகஸ்டின் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த சோமநாத், எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய பட்டப்படிப்பை முடித்தார். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில், இயக்கவியல் மற்றும் கட்டுப்பாட்டில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார்..
1985-ம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணிக்குச் சேர்ந்த சோம்நாத், தன் திறமையால் அம்மையத்தின் முக்கிய நபராக மாறினார். இந்தியா பிஎஸ்எல்வி ராக்கெட்களை ஏவியபோது அதில் சோம்நாத் முக்கிய பங்காற்றியுள்ளார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த சோம்நாத், கடந்த 2022-ம் ஆண்டு முதல் இஸ்ரோவின் தலைவராக இருக்கிறார். இந்த அமைப்பின் 10-வது தலைவர் சோம்நாத்.
சந்திரயான் 3 திட்டத்தைத் தொடர்ந்து சூரியனில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆதித்யா –எல்1 மற்றும் ககன்யான் திட்டங்களை இவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.
பி.வீரமுத்துவேல் (சந்திரயான் 3 திட்ட இயக்குநர்):
இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு இயக்குனராக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த வீர.முத்துவேல். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர். வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல். தெற்கு ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீரமுத்துவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்தார். சென்னை ஐஐடியில் படித்த வீரமுத்துவேல், 1989-ம் ஆண்டில் இஸ்ரோ அமைப்பில் சேர்ந்தார்.
சந்திரயான் 2 திட்டத்திலேயே பல முக்கிய பணிகளை மேற்கொண்ட இவர், சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு குடும்பத்தைக்கூட மறந்து சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார். அவரது ஈடுபாடுதான் இன்றைக்கு இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது.
கே.கல்பனா (துணை திட்ட இயக்குநர், சந்திரயான் 3)
வீரமுத்துவேலுக்கு அடுத்து சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக முடிந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இத்திட்டத்தின் துணை இயக்குநரான கே.கல்பனா.
பெங்களூருவில் 1980-ம் ஆண்டில் பிறந்த கல்பனா, காரக்பூர் ஐஐடியில் படித்தவர். 2003-ம் ஆண்டில் இஸ்ரோ அமைப்பில் சேர்ந்த கல்பனா, அதன் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். குறிப்பாக மங்கள்யான் மற்றும் சந்திரயான் 2 திட்டங்களில் இவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். சந்திரயான் திட்டத்தின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட கல்பனா, அதன் லாண்டர் சிஸ்ட்த்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.