No menu items!

பீஸ்ட் – சினிமா விமர்சனம்

பீஸ்ட் – சினிமா விமர்சனம்

ஒரு படத்தின் கதையை, அதன் ரிலீஸூக்கு முன்பே ட்ரெய்லரில் சுருக்கமாக சொல்லிவிட்டு, பிறகு ரிலீஸ் செய்திருப்பதன் பின்னணியில் இருக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.

காஷ்மீர் திவீரவாதிகளின் தலைவரை சிறையில் இருந்து விடுவிக்க, சென்னையில் இருக்கும் ஒரு ஷாப்பிங் மாலை தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் தீவிரவாதிகளை, தனியொரு ஆளாக வேட்டையாடி பணயக்கைதிகளை கதாநாயகன் எப்படி மீட்கிறார் என்பதே ’பீஸ்ட்’.

திரைக்கதையின் களம் ஒரு ஷாப்பிங் மால் மட்டுமே. அதற்குள் காட்சிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டுமென முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். ஆனால் திரைக்கதையில் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும் அம்சங்கள் இல்லை.

தீவிரவாதிகள் ஷாப்பிங் மாலுக்குள் வந்துவிடுகிறார்கள். எல்லோரையும் மிரட்டுகிறார்கள். விஜய் தனியாக சென்று தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளுகிறார். கத்தியால் குத்திக் கொல்கிறார். இதற்கு நடுவே அனைத்து பணயக்கைதிகளும் மிலிட்டரி ஹோட்டலில் கொடுக்கும் நான் – வெஜ் மீல்ஸை சாப்பிட உட்கார்ந்திருப்பது போல சம்மணமிட்டு உட்கார்ந்தே இருக்கிறார்கள்.

”ஆஃப்பாயில் இதோ ரெடி. பாயா இன்னும் ஐந்து நிமிடங்களில் தயாராகிவிடும்’ என்று ஆர்டர் எடுத்தவர் சொல்வது போல தீவிரவாதிகள் சுற்றி நிற்கிறார்கள். இந்தளவுக்கு டீஸன்ட்டான தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தியிருப்பது தமிழ்சினிமாவிற்கு புது ரகம். இனி இதுபோன்ற தீவிரவாதிகள் இருந்தால் போதும், அரசுக்கு செலவு மிச்சம். அந்த பட்ஜெட்டை பெட்ரோல், விலைவாசியைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

தீவிரவாதிகளுக்கும், விஜய்க்கும் இடையே மட்டும்தான் சண்டை என்பதால்தான், அவர்களது கவனம் விஜயுடன் இருக்கும் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், சதீஷ் போன்றவர்கள் மீது திரும்பவே இல்லையா.. அல்லது பணயக் கைதிகளை வைத்து எமோஷனலாக மிரட்டும் டிராமா பண்ணவே தோன்றவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

பார்வை கண்ணாடியை வைத்து நைலான் கயிற்றை அறுக்க முடியுமா?

உச்சக்கட்ட பதற்றம் நிறைந்த இரு நாடுகளின் எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தின் போர் விமானத்தை ஜஸ்ட் லைக் தட் போல எடுத்துகொண்டு பாகிஸ்தானுக்கு பறந்து போக முடியுமா? இப்படி எக்கச்சக்கமான கேள்விகள் இருந்தாலும், இது முழுக்க முழுக்க கமர்ஷியல் விஜய் சினிமா என்பதால் பதில்கள் தேட முயற்சிக்க தேவையில்லை.

பீஸ்ட் என்ற டைட்டிலுக்கேற்றபடி படம் முழுக்க அதகளப்படுத்தி இருக்கிறார் விஜய். படத்திற்கு படம் விஜயின் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் மெருகேறிக்கொண்டே வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் விஜயின் அதிரடி ரசிக்க வைக்கிறது. ரொம்பவே மெனகெட்டு நடித்திருக்கிறார்.

’அரபிக்குத்து’ பாடலில் விஜயின் டான்ஸ் மூவ்மெண்ட்கள், நம் கண்களை திரையை விட்டு விலகாமல், கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கின்றன.

பூஜா ஹெக்டேயின் மெல்லிடை ஆட்டம், நடிப்பு விஷயத்தில் விட்டதைப் பிடிக்க பேலன்ஸ் செய்கிறது. விஜய்க்கு அடுத்து தனது டயலாக் டெலிவரியால் கவனம் ஈர்க்கிறார் விடிவி கணேஷ். யோகி பாபுவுக்கு நடிப்பு விஷயத்தில் பெரிதாக யோகம் இல்லை.

படத்தில் ஆங்காங்கே டார்க் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். விஜய்யும், பூஜா ஹெக்டேவும், சதீஷ் முன்பு கட்டிப் பிடிக்கும் காட்சியில் ‘கல்யாணத்துக்கு முன்னாடி என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனா கல்யாணம் பண்ண போறவன் முன்னாடி பண்றது எல்லாம்..’, ‘தினேஷ்.. ரெண்டு பாக்ஸ் எங்கே’ என்று செக்யூரிட்டி கேட்கும் காட்சி, லிஃப்ட்டில் சதீஷ், ‘இப்போ கூட சொல்லு நான் பார்த்துக்குறேன்’ என்று ஹீரோயிஸம் செய்யும் காட்சிகளில் காமெடி ரசிக்க வைக்கிறது.

பாடல்கள் அட்டகாசம். பின்னணி டெம்போ எகிற வைக்கிறது. எடிட்டிங்கில் கொஞ்சம் கை வைத்திருக்கலாம். ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் பெரும் பலம்.

முதல் பாதியில் இருக்கும் கொஞ்ச சுவாரஸ்யமும், இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

காஷ்மீர் தீவிரவாதிகளை வேட்டையாடி களைத்துப் போன கேப்டன் விஜயகாந்த் விட்ட இடைவெளியை பீஸ்ட் விஜயை வைத்து கச்சிதமாக நிரப்பியிருக்கிறார்கள்.

ஆக மொத்தம், பீஸ்ட் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ட்ரீட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...