’ஜூனியர் நயன்தாரா’ என்று அழைக்கும் அளவிற்கு காதல், மோதல், சர்ச்சை, கிசுகிசுகளுடன் அதிரிபுதிரி ஆட்டம் ஆடி வருகிறார் அமலா பால்.
முதலில் காதல் திருமணம், அடுத்து முன்னணி நடிகருடன் நெருக்கமான நட்புப் பாராட்டியதால் விவாகரத்து, பின்னர் ஆண் நண்பருடன் உடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை, இப்போது மன உளைச்சலைக் கொடுத்த அதே ஆண் நண்பர் மீது புகார் என பரபரக்க வைத்தபடி இருக்கிறார் அமலா பால்.
சில நாட்களுக்கும் முன்பு அதாவது ஆகஸ்ட் 26-ம் தேதி விறுவிறுவென விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரநாதாவின் அலுவலகத்திற்கு சென்ற அமலா பால், ’தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள். கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். நிம்மதியை இழந்ததோடு பணத்தையும் இழந்துவிட்டேன். என்னை அந்த ஆளிடம் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று போய் நின்றார்.
நடந்தது என்ன?
டைம் மெஷினை ரீவைண்ட் செய்வது போல் கொஞ்சம் பின்னோக்கி போனால்தான் அமலா பால் பஞ்சாயத்து என்னவென்று புரியும்.
’சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்போது இவர் அமலா பால் இல்லை. அனஹா என்றால்தான் தெரியும். பின்னாளில் சொந்தப் பெயரிலேயே படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார்.
தென்னிந்தியாவிற்கே உரிய சரும நிறம் என்றாலும், அவரது குறுகுறு பார்வையும், துறுதுறு கேரக்டரும்தான், முன்னணி கதாநாயகியாக ஆர்.ஏ.சி-யில் காத்திருந்த இவரை தட்கல் கோட்டா கிடைத்தது போல் சட்டென்று முன் வரிசையில் அமர வைத்து அழகுப் பார்த்தது.
விஜயுடன் ‘தலைவா’ படத்தில் ஜோடியாக கைக்கோர்த்த அமலா பால், படம் வெளியான கொஞ்ச நாட்களில் அப்படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜயுடன் நிஜ வாழ்க்கையில் கைக்கோர்த்தார்.
2014-ல் திருமணம். 2017-ல் விவாகரத்து.
‘நாங்கள் இருவரும் சொல்ல முடியாத தனிப்பட்ட காரணங்களால் பிரிகிறோம்’ என்று ஏ.எல். விஜயும் அமலா பாலும் நாசூக்காக சொன்னாலும், மாமனார் ஏ.எல். அழகப்பன் முணுமுணுத்ததைக் கேட்டு கோலிவுட் கிசுகிசு கார்னரை தயார் செய்து வைந்திருந்தது.
திருமணத்திற்கு பிறகு அமலா பால் நடிக்க மாட்டேன் என்றார். குடும்ப வாழ்க்கையில்தான் நிம்மதி என்றும் சொன்னார். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் மேக்கப் போட க்ரீன் ரூமிற்கு போயே தீருவேன் என்று மல்லுக்கட்டினார். அதற்கு காரணம் நடிகர் தனுஷ். இதனால் என் மகனின் வாழ்க்கை வீணாகி விட்டது என்று அமலா பாலின் மாமனார் தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் வருத்தப்பட்டிருக்கிறார்.
‘அம்மா கணக்கு’ படத்தில் நடிக்க தனுஷ் கூப்பிட்டதால், அமலா பால் போட்டிருந்த குடும்ப கணக்கு ஒட்டுமொத்தமாக மாறியிருந்தது.
ஆனால் அமலா பால், ‘தனுஷூக்கும் என்னுடைய விவாகரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் என்னுடைய நலம் விரும்பி’ என்று ஸ்டேட்மெண்ட் கூட விட்டிருந்தார்.
ஆனால் ’அம்மா கணக்கு’ படத்திற்கு பிறகு ’வேறு’ பல கணக்குகளில் தனுஷ் பிஸியானார்.
ஆனால் அமலா பால் போட்ட கணக்கு சரியாக வரவில்லை. எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. சம்பள விஷயத்திலும் கொஞ்சம் கெடுபிடி காட்டினார். அதனால் ஆசையோடு கமிட் செய்ய வந்தவர்களும் கூட, ஆளை விட்டால் போதுமென எஸ்கேப் ஆனார்கள்.
அப்படியே அமலா பாலின் நிம்மதியும் அவரிடமிருந்து ‘எஸ்கேப்’ ஆனது. வழக்கம் போல் மன அழுத்தம், தனிமை கூட்டு சேர்ந்து கொண்டது.
இந்த சூழலில் கைக்கொடுக்க யாராவது இருந்தாக வேண்டுமென்பது கமர்ஷியல் சினிமா ஃபார்மூலா மட்டுமல்ல. யதார்த்தமும் கூட.
இங்கே எண்ட்ரீ ஆனார் பவ்நிந்தர் சிங் தத். அமலா பாலுக்கும், பவ்நிந்தருக்கும் பொதுவான ஒரு நண்பர் கொடுத்த பார்ட்டியில் காக்டெயிலும், மாக்டெயிலும் மிக்ஸ் ஆனால் எப்படியிருக்கோ அப்படி அமைந்தது அவர்களது முதல் சந்திப்பு.
ஒகே….யார் இந்த பவ்நிந்தர் சிங் தத்?
டெல்லி வாலிபர். வயது 37. பாடகர். யோகா எக்ஸ்பர்ட். ’கவாஸ் யோகா’ என்ற பெயரில் புதுச்சேரியில் யோகா மையத்தை நடத்தி வந்தார். ஓஷோவின் தீவிர ரசிகர். காதலர்கள் மற்றும் தம்பதிகளுக்கு உற்சாகமூட்டும் ’கப்புள் ரிட்ரீட்’ முகாம்களை அவ்வப்போது நடத்துவது இவருடைய ஸ்பெஷாலிட்டி. இவரது சால்ட் ஸ்விம்மிங்பூல் ட்ரீட்மெண்ட்டுக்கு அப்பகுதியில் மவுசு அதிகம்.
மறுபக்கம் இன்சைட்ஈக்விட்டிஸ்.காம் நிறுவனத்தின் இணை-நிறுவனர். இது இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஃபைனான்ஷியல் டெக்னாலஜி ரிசர்ச் & டெவலப்மெண்ட் நிறுவனம். உள்நாட்டு நிதி முதலீட்டுக்கான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுப்பதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
டெல்லியில் ஹோட்டல் பிஸினெஸ்ஸூம் பவ்நிந்தருக்கு இருக்கிறது என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.
ஒரு பக்கம் பிஸினெஸ். மறுபக்கம் யோகா..ஒஷோ…ரிட்ரீட்.. என பவ்நிந்தரின் பயோடேட்டா பக்காவாக இருந்தது.
தனிமை, மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இதைவிட வேறென்ன உற்சாகமாக இருக்க முடியும்.
சென்னை, கொச்சி என வலம் வந்த அமலா பால், புதுச்சேரிக்கு தனது ஜாகையை மாற்றினார். ருத்திராட்சம் மாலையை கூட அவ்வப்போது அணிய ஆரம்பித்தார். ’வாண்டர்லஸ்ட்’ பட்டியலில் சேர்ந்தவர் போல நினைத்த நேரம் ஆசைப்பட்ட இடங்களில் ரவுண்ட்ஸ் அடித்தார்.
அமலாவின் நிழலாக இரவிலும் கூட நெருங்கியபடி தொடர்ந்தார் பவ்நிந்தர். பழகிய கொஞ்ச நாட்களிலேயே இந்த தலைமுறையினரிடம் அதிகம் முணுமுணுக்கப்படும் சில்லாக்ஸிங், அவுட்டிங், டேட்டிங் சமாச்சாரங்களில் அமலா பாலும், பவ்நிந்தர் சிங்கும் ரொம்பவே பிஸியாக இருந்ததை இவர்கள் இருவரின் இன்ஸ்டாக்ராம் அக்கெளண்ட்கள் அப்பட்டமாக காட்டிக் கொண்டிருந்தன.
நெருங்கி பழகிய காலத்தில் இருவரும் இணைந்து சினிமாவில் தடம் பதிக்க திட்டமிட்டு இருந்ததாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள். இதற்காகவே ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் அவர்கள் தொடங்க திட்டமிட்டனர். அதன் விளைவு ‘பூவி’ ப்ரொடக்ஷன்ஸ் என்கிறார்கள்.
இதற்காக 2018-ல் ஆரோவில்லுக்கு அருகே உள்ள பெரிய முதலியார் சாவடியில் ஒரு சினிமா ப்ரொடக்ஷன் கம்பெனியை இருவரும் சேர்ந்து தொடங்கியதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிப்படுகிறது.
இந்தளவுக்கு மிக நெருக்கமான ரிலேஷன்ஷிப் இருந்ததை ஒரு கட்டத்தில் அமலா பால் மற்றும் நவ்நிந்தர் சிங் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டதாகவும் அவர்களது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.
ஆனால் இப்பொழுது நிலைமை தலைக்கீழ். பவ்நிந்தர் சிங் தத் உள்ளே. அமலா பால் தனது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களுக்காக வெளியே.
ஆரம்பித்தது எங்கே….
2020-ல் பவ்நிந்தர் சிங் தத் தனது சோஷியல் மீடியா அக்கெளண்ட்டில் இருந்து சரசரவென சில புகைப்படங்களை அப்லோட் செய்தார். அத்தனையும் வைரல். ராஜஸ்தான் பாரம்பரிய தோற்றத்தில், நவ்நிந்தரும், அமலாவும் ப்ரெஞ்ச் பாரம்பரிய முத்தத்துடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அவர்களது திருமணத்தின் போது எடுத்தது என ஒட்டுமொத்த மீடியாவும் அதைப் பற்றி வெளியிட்டன.
ஆனால்…
வைரல் செய்தி ஆன போதும் கூட பதட்டமடையாத அமலா பால், ‘இந்த புகைப்படங்கள் 2018-ம் ஆண்டில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டவை. மற்றபடி எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை.’ என்றார். சென்னை ஹைகோர்ட்டில் நவ்நிந்தருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு ஒன்றையும் அமலா பால் தொடர்ந்தார்.
வேறு வழியில்லாமல் நவ்நிந்தர் சிங் தத் அந்தப் படங்களை சொல்லாமல் கொள்ளாமல் தனது அக்கெளண்ட்டிலிருந்து நீக்கிவிட்டார்.
அப்பொழுதுதான் நவ்நிந்தருக்கும் அமலா பாலுக்கும் இடையில் பிரச்சினை இருப்பது அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்தது.
ஆனால் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போதே கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் இருவருக்குமிடையே உரசல் எழுந்ததாக நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
என்ன காரணம்
சினிமா கம்பெனி தொடங்கியிருந்த போதே அதன் ஒட்டுமொத்த பாஸ் என்பது போல நவ்நிந்தர் நடந்து கொண்டார். அமலா பால் சம்பாதித்து, முதலீடு செய்த பணத்திற்கும் அவரே உரிமையாளர் என்பது போல ஏகபோக உரிமையைக் கொண்டாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இதில் அமலா பால் குடும்பத்தினருக்கும் குறிப்பாக அவரது தம்பிக்கு இதில் உடன்பாடு இல்லை.
நவ்நிந்தருக்கு தோழிகள் அதிகம் என்கிறார்கள்.
ஆன்மிகம் யோகா என்ற பெயரில் பர்சனலாக பழகும் பவ்நிந்தரின் அணுகுமுறையில் அமலா குடும்பத்தினருக்கு விருப்பமில்லை.
இதனால் நவ்நிந்தருடனான உறவை முறித்து கொள்ள அமலா பால் குடும்பம் அவரை வலியுறுத்தி வந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் அமலா பால் இதற்கு உடன்பட தற்போது நவ்நிந்தர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்பட 12 பேர் மீது 384, 420 உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அமலா பால் இப்போது..
சமீப காலமாகவே தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்காத அமலா பால் தனது ‘கடாவர்’ படத்தின் ஒடிடி ரிலீஸின் போது, ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊடகங்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தியதும் நவ்நிந்தரின் பிரச்சினை பிறகுதான்.
‘2020 ஆண்டிலேயே எனது சினிமா பயணத்தை முடித்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என் அம்மாவிடமும் சொன்னேன். வாழ்க்கையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே எனக்கு மறந்து போயிருந்தது. 17 வயது ஆகும் போது உழைக்க ஆரம்பித்தேன். எனக்கென்று ஒரு நொடி கூட நான் யோசித்து பார்த்தது இல்லை. உடலும் மனமும் விரும்பினால் கூட ஒரு நொடி கூட ஒய்வு எடுத்தது இல்லை. ஆனால் இவ்வளவு மெனக்கெட்ட என்னை ஒருத்தர் கூட மனம்விட்டு பாராட்டியது இல்லை.



