ஆலியா பட்.
வயது 31. இன்றைக்கு பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி. ஒரு படத்தில் நடிக்க இவர் வாங்கும் சம்பளம் 20 கோடி.
அப்பாவித்தனமான முகம். ரசிக்க தூண்டும் புன்னகை. துறுதுறுவென இருக்கும் இவரது குணாதிசயம். இந்த மூன்று அம்சங்களும் இவரை விளம்பர உலகில் பல முன்னணி ப்ராண்ட்களின் டார்லிங் ஆக மாற்றி இருக்கிறது.
இன்று ஆலியா, கேட்பரி, ஃப்லிப்ஸ், மேக் மை ட்ரிப், கார்னெட்டோ, குச்ச்சி என பல ப்ராண்ட்களின் அழகிய முக அடையாளம். இதனால் விளம்பரத் தூதுவராக இவர் மீதிருக்கும் மதிப்பு சுமார் 834 கோடிகள். ’என்னது 800 கோடிகளா..’ என பாலிவுட் களத்தில் இருக்கும் மற்ற நடிகைகளை வெளிப்படையாகவே பொறாமைப்பட வைத்திருக்கிறது.
ஆலியாவுக்கு இப்படியொரு பக்காவான பயோ-டேடா இருக்கிறது. ஆனாலும் ஆலியா சினிமாவுக்குள் நுழைந்த போது, அவரை கிண்டல் அடித்தவர்கள் ஏராளம். ஏதாவது ஒரு கேள்வி கேட்டால், அதைப் புரிந்து கொள்ளாமல் இவர் கொடுத்த பதில்கள் அனைத்தும் வைரல்.
ஆலியாவை ஒன்றும் தெரியாத குட்டி பாப்பா என்கிற ரீதியில்தான் நெட்டிசன்கள் கிண்டலடிப்பது வழக்கம். ’அழகிருந்தால் அறிவிருக்காது. அறிவிருந்தால் அழகு இருக்காது’, இந்த பழமொழிக்கு ஆலியாதான் சரியான உதாரணம் என்பது நெட்டிசன்களின் கமெண்ட்டாக இருந்தது வந்தது.
ஆனால் ஆலியாவிடம் அழகும் இருக்கிறது. அதைவிட அறிவும் அதிகம் இருக்கிறது என்று புரிய வைத்துவிட்டார்.
எப்படி?
ஆலியா பட் நடித்தார். காதலித்தார். திருமணம் செய்து கொண்டார். குழந்தையும் பெற்று கொண்டார்.
உடனே நெட்டிசன்கள் ஆலியாவைப் பார்த்து, ‘நாங்க சொன்னோம்ல. ஏதோ நடிச்சாங்க. நாலஞ்சு படம் ஓடுச்சு. இப்போ குழந்தை குடும்பம்னு செட்டிலாகிட்டாங்க. ஆலியா இதுக்கு லாயக்கு’ என்று இணையத்தில் கிண்டலடித்தனர்.
இதையெல்லாம் ஆலியா கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.
ஆலியா பட், கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு சில பிரச்சினைகள் இருந்தது. கர்ப்பமாக இருந்தாலும் அவர் ஒரு நடிகை. பல ப்ராண்ட்களின் விளம்பரத்தூதுவர். தொடர்ந்து நடித்து கொண்டும் இருந்தார்.
இதனால், ’ஆலியா கர்ப்பக்காலத்திலும் கூட அழகாக இருக்கிறார். அவரைப் பார்த்தாலே உற்சாகம் தொற்றிக்கொள்கிறது என மற்றவர்கள் நினைக்கவேண்டும்’ என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
தன்னைப் போலவே குழந்தையும் க்யூட்டாக இருக்கவேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால் குழந்தைக்கு ஏற்ற, ட்ரெண்ட்டியான, செளகரியமான உடைகள் இல்லாதது அவருக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது.
’குழந்தைகளுக்கு ஏற்ற உடைகள் இல்லையே. அதை ஏன் நாம் கொடுக்கக்கூடாது?’ ஒரு கணம் அவருக்குள் ஒரு எண்ணம் எழுந்தது.
அதை உடனே செயல்படுத்த விரும்பினார்.
அந்த நொடியில் உருவானது ‘Ed-a-Mamma’ ப்ராண்ட்.
’குழந்தை எந்தளவிற்கு முக்கியமோ, அதேபோல் அவர்கள் எதிர்காலத்தில் சந்தோஷமாக வாழ இந்த பூமியும் முக்கியம்’ என்ற கோணத்தில், தொலைநோக்குப் பார்வையோடு தனது ப்ராண்டை உருவாக்கினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகளை ‘Ed-a-Mamma’ ப்ராண்ட் அறிமுகப்படுத்தியது. இயற்கை முறையிலான துணி வகைகள், ப்ளாஸ்டிக் இல்லாத பட்டன்களை கொடுப்பதில் ஆலியா உறுதியாக இருந்தார். குழந்தைகளுக்கு அவர்களது கதைகளை சொல்லி வளர்ப்பதும் கூட பலன் அளிக்கும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ‘Ed-a-Mamma’ ப்ராண்ட் தொடங்கிய ஓராண்டுக்குள் வருவாய் பத்து மடங்கு ஆகியிருக்கிறது. இப்பொழுது ‘Ed-a-Mamma’ ப்ராண்ட்டின் வளர்ச்சி 300% என பிரமிக்க வைக்கிறது.
இது எப்படி சாத்தியமானது?
ஆலியா பட் கையிலெடுத்தது D2C business model. அதாவது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே தங்களது தயாரிப்புகளை விநியோகம் செய்வது. தங்களுடைய உற்பத்தி மையத்தில் தயாராகும் தயாரிப்புகளை அவர்களே விற்பனை செய்வது.
2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான உடைகளை தனது ப்ராண்டில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் வெறும் 150 ஸ்டைல்களில்தான் உடைகளை அறிமுகப்படுத்தினார். இப்பொழுது அந்த எண்ணிக்கை 800 ஆக மாறியிருக்கிறது. கர்ப்ப காலத்தில் அணிவதற்கு ஏற்ற உடைகள், பிரசவமான பின்பு பாலூட்ட செளகரியமாக இருக்கும் ஆடைகள் என இரு பிரிவுகளையும் அறிமுகப்படுத்தினார்.
பிரபல உடையலங்கார வர்த்தக இணையதளமான ‘மிந்த்ரா’வில் குழந்தைகளுக்கான பிரிவில் முதல் மூன்று ப்ராண்ட்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஆலியாவின் ப்ராண்ட். அறிமுகமான மூன்றே மாதங்களில் இது சாத்தியமானது.
இப்போது உடைகளைத் தாண்டி அடுத்தக்கட்டத்திற்கு நகர ஆலியா பட் விரும்புகிறார். குழந்தைகளுக்கான கதைகளை புத்தகங்களாக வெளியிடுவது. ஒரு குட்டிப் பெண்ணின் சாகசங்களை ரசிக்கும் படி கதைகளாக கொடுப்பதுதான் நோக்கம். அடுத்து அனிமேஷன் சிரீஸ் என திட்டங்கள் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஆலியா பட்டின் மறுமுகம்
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘கங்குபாய் கதியாவாடி’ படத்தில் அவரது நடிப்பை பாராட்டியவர்களில் பலருக்கு ஆலியாவின் மறுபக்கம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நெபோடிசம் மூலம் நடிகையானவர். பாலிவுட் கிங் மேக்கர் கரன் ஜோஹரின் ஃபேவரிட். இப்படியெல்லாம் கிண்டலடித்தவர்களுக்கும் ஆலியாவின் இந்த முகம் பரீட்ச்சயமாகி இருக்காது.
ஆலியா பட், தனது சம்பாத்தியத்தில் இருந்தது NYKAA, Phool.co மற்றும் StyleCracker ஆகிய ப்ராண்ட்களில் முதலீடு செய்திருக்கிறார்.
இந்நிறுவனங்களில் ஆலியா பட் முதலீடு செய்ய சில காரணங்கள் இருக்கின்றன. NYKAA நிறுவனம் ஒரு பெண்ணால் தொடங்கப்பட்டது. இந்தியர்களுக்கான தேவைகளையும், அவர்களது எதிர்பார்புகளையும் பூர்த்தி செய்வது. அடுத்து இந்தியாவில் இருந்தது உலகிற்கு சிறந்தவற்றைக் கொடுப்பது. இந்தகாரணங்களை ஆலியா பட் கையிலெடுத்து இருப்பது அவரை ஒரு சாதாரண நடிகையாகவே பார்க்கும் அணுகுமுறையை, பார்வையை முற்றிலும் மாற்றி இருக்கிறது.