தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பான விவாதத்திற்கு உள்ளாகி இருப்பது அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் அஜித் 62 படத்தின் இயக்குநர் யார் என்பதுதான்.
’துணிவு’ படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போதே அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.
இந்நிலையில் அஜித் 62-ஐ விக்னேஷ் சிவன் இயக்கவில்லை. அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கம். இப்படி பல கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் அடிப்படுகின்றன.
ஆனால் உண்மை என்ன? அஜித் 62 படத்தின் இயக்குநர் யார்? விக்னேஷ் சிவன் அஜித் படத்தை இயக்குகிறாரா இல்லையா என்பது பற்றி கோலிவுட்டில் விசாரித்த போது புதுத்தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அஜித்திற்கு விக்னேஷ் சிவன் இரண்டு கதைகளைச் சொல்லியிருக்கிறார். இதில் ஒன்று மென்மையான உணர்வுப்பூர்வமான ஸ்கிரிப்ட்.. இரண்டாவது பக்கா ஆக்ஷன் ஸ்கிரிப்ட். அந்த இரண்டு கதைகளுமே அஜித்திற்கு பிடித்திருந்ததால், அடுத்தப் படத்தில் இணைந்து பணியாற்ற விக்னேஷ் சிவனிடம் அஜித் ஓகே சொல்லிவிட்டார்.
அஜித் பாஸிட்டிவ்வான சிக்னல் கொடுத்த உடனே பரபரவென ஸ்கிரிப்ட் வேலைகளை இறங்கிவிட்டார் விக்னேஷ் சிவன்.
அஜித் 62 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் ஒரு பக்கம் ஜரூராக போய்கொண்டிருக்கையில், ‘துணிவு’ வெளியானது.
அஜித் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஒபனிங்கை ’துணிவு’ பெற்றிருப்பதால், இப்பொழுது அவரது அடுத்தப்படம் பற்றிய எதிர்பார்பு சினிமா பிஸினெஸ் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.
இதனால் ’துணிவை’விட இன்னும் பக்காவான ஆக்ஷன் படத்தைக் கொடுக்கவேண்டிய கட்டாயமும், நெருக்கடியும் விக்னேஷ் சிவனுக்கு உருவாகி இருக்கிறது.
விக்னேஷ் சிவன் சொல்லிய கதையில், க்ளைமாக்ஸ்தான் செம மாஸ் என்கிறார்கள். அந்த க்ளைமாக்ஸை நுணுக்கமாக ஸ்கிரிப்டில் கொண்டுவரவும், அதை ஷூட் செய்யவும் நாட்கள் அதிகம் பிடிக்கும். இப்படியொரு சூழ்நிலையில், தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவேண்டுமென வேக வேகமாக ஷூட் செய்தால், அந்த கதைக்கான முக்கியத்துவத்தை கொடுக்காதது போல் ஆகிவிடும்.
அதனால் க்ளைமாக்ஸ் காட்சிகளை பக்காவாக தயார் செய்துவிட்டு, முழுவீச்சில் ஷூட்டிங்கில் இறங்கலாம் என தயாரிப்பு நிறுவனம் தரப்பு யோசிக்கிறதாம்.
ஆனால் பொங்கலுக்கு அஜித் விஜய் இருவரும் நேரடியாக பாக்ஸ் ஆபீஸில் மோதியது அவர்கள் இருவருக்குமான மார்க்கெட்டை எகிற வைத்திருக்கிறது.
முன்பு ரஜினிக்கும் கமலுக்கும் இடையே இருந்த போட்டிதான் அவர்களை பல உச்சங்களைத் தொட வைத்தது. சோஷியல் மீடியா இல்லாத காலத்தில் ரஜினிக்கும் கமலுக்கு இருந்த போட்டியை விட இப்பொழுது இவர்களுக்கிடையே பெரும் போட்டி உருவாகி இருக்கிறது. அதேபோல் போட்டிப் போட்டு கொண்டு வசூலிலும் புது சாதனைகளைத் தொட காரணம் இருவரது படமும் ஒரே நேரத்தில் வெளியானதுதான்.
தீபாவளிக்கு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதியாகிவிட்டதால், அஜித் நடிக்கும் படத்தையும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
இதனால் அஜித் 62 படத்தை வேறு இயக்குநர் இயக்க, அஜித் 63 விக்னேஷ் சிவன் இயக்கட்டும் என தற்போது நிலவரப்படி முடிவாகி இருக்கிறதாம்.
தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அஜித் 62-வை இயக்க ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கில்லாடியான மகிழ்திருமேனியை அணுகியிருக்கிறார்கள். அவர் சொல்லிய கதையும் நன்றாக இருப்பதால் அஜித் 62-வை மகிழ்திருமேனி இயக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.