போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குநர் அமீரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். கைதான ஜாபர் சாதிக், ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற படத்தை அவர் தயாரித்து வந்தார். மேலும் ஜாபர் சாதிக்குடன் இயக்குநர் அமீருக்கு நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுவதால் இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி – NCB) போலீஸார் முன் கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமீருக்கு சம்மன் வழங்கப்பட்டது. அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆஜரானார்கள். அங்கு இயக்குநர் அமீரிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது அமீருடன் அவரது வழக்கறிஞரும் இருந்தார். விசாரணையில், ஜாபர் சாதிக்குக்கும், அமீருக்கும் தொழில் ரீதியாக உள்ள தொடர்பு உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணை முடிந்த பிறகு, தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும் எனச் சொல்லி அமீரை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். சென்னைக்கு வந்த அமீர், இந்த விசாரணை பற்றிய விளக்கத்தை விரையில் தருவதாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்த சூழலில் இன்று காலை முதல் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.
விசாரணையுடன் தன்னை விட்டுவிடுவார்கள் என்று அமீர் எண்ணியிருந்த நிலையில் இப்போது அவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையிடுவது அவருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
மேலும், ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீடு, அப்துல் பாசித் புகாரி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்கள் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.