கொஞ்ச நஞ்சமல்ல…2976 ஆபாச பாலியல் வன்முறை வீடியோக்கள். அத்தனை வீடியோக்களுக்கும் காரணம் பிரஜ்வால் ரேவண்ணா.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன். முன்னாள் கர்நாடக அமைச்சர் ரேவண்ணாவின் மகன். நாடாளுமன்ற உறுப்பினர். இப்படி அனைத்து அதிகார அடைமொழிகளையும் வைத்திருக்கும் பிரஜ்வால் ரேவண்ணா செய்த ஆபாச அருவருக்கத்தக்க அட்டூழியங்கள் இப்போது வெளிவந்திருக்கிறது. தான் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்ததும் இந்தியாவை விட்டு தப்பியோடிவிட்டார். ஜெர்மனியில் இருக்கிறார் என்று ஒரு செய்தி சொல்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இவர் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது?
இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி வைத்திருக்கிறது. இந்தக் கூட்டணியின் வேட்பாளாராக ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். ஹாசன் தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி நடந்த 2 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு நடந்தது. அந்த வாக்குப் பதிவு நடப்பதற்கு முந்தின நாள் இரவிலிருந்து ரேவண்ணாவின் ஆபாச வீடீயோக்கள் அந்தத் தொகுதி மக்களின் வாட்சப் குழுக்களில் பரவத் தொடங்கின.
இந்த வீடியோக்களில் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாய் இருக்கிறார். அவர்களை மிரட்டுகிறார், ஆபாசமாய் பேசுகிறார், பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்று தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
அவரிடம் உதவிக் கேட்டு வந்த பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், கட்சி சார்ந்த பெண்கள், என பலதரப்பட்ட பெண்கள் இந்த வீடியோக்களில் இருக்கிறார்களாம். பெண்களிடம் தான் செய்யும் சேட்டைகள் அத்தனையையும் அவர் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். அவற்றை தனது லேப்டாப்பிலும் பெண் ட்ரைவிலும் வைத்திருக்கிறார்.
அந்த வீடியோக்கள் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன.
இதுவரை யாரும் ரேவண்ணா மீது புகார் கொடுக்காத நிலையில் இப்போது அவர் வீட்டு பணிப்பெண் ஒருவர் ரேவண்ணா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், ’ரேவண்ணாவின் மனைவி வீட்டில் இல்லாத போது ரேவண்ணாவும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பிரஜ்வல் ரேவண்ணா ஸ்டோர் ரூமுக்குதான் முதலில் வரவழைப்பார். அங்கு தொடக் கூடாத இடங்களில் தொடுவார். பின்னர் புடவையின் பின்னை அவரே அகற்றி புடவையை கழற்றி பலாத்காரம் செய்தார். என் மகளுடனும் ஆபாசமாக வீடியோ காலில் பேசத் தொடங்கினார். பயந்து போன என் மகள் பிரஜ்வலின் மொபைல் எண்ணை பிளாக் செய்துவிட்டார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ரேவண்ணா மட்டுமல்ல அவரது அப்பாவும் இதே அசிங்க காரியங்களை செய்திருக்கிறார் என்பது புகாரிலிருந்து தெரிய வருகிறது.
ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளிவந்திருப்பது தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் கடுமையான நெருக்கடியை கொடுத்திருக்கிறது. கர்நாடகத்தில் ஒரு கட்டத் தேர்தல்தான் நடந்து முடிந்திருக்கிறது. மே 7 ஆம் தேதி அடுத்த 14 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது.
ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. கடந்த ஒரு வருடமாகவே தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக கர்நாடக பா.ஜ.க. நிர்வாகி தேவராஜ் கவுடா 2023 டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘தேவகவுடா கட்சியுடன் கூட்டணி வைப்பது நல்லதில்லை. அவர் பேரன் ரேவண்ணா மீது இது போன்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் நமக்கு பலவீனமாக போய்விடும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கட்சித் தலைமை இவருடய கடிதத்தை பொருட்படுத்தவில்லை.
தன் அந்தரங்க விடியோக்களை செய்தி நிறுவனங்களோ இணையதளங்களிலோ வெளியிடக்கூடாது என்பதற்கான நீதிமன்ற தடை உத்தரவை கடந்த ஆண்டே பிரஜ்வால் ரேவண்ணா பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோக்கள் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, கர்நாடக மாநில மகளிர் ஆணையம், வியாழக்கிழமை, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஜே.டி(எஸ்) தலைவர்கள் மீது மட்டும் இல்லை. (கர்நாடக பா.ஜ.க தலைவர்) பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் பலர் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும். மகளிர் ஆணையம் தங்கள் பெயரைக் கெடுக்க முயற்சிப்பதாக அவர்கள் கூறிய செய்திகளைப் படித்தேன். இப்படிப் பேசி குமாரசாமி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்துகிறாரா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பிரஜ்வல் ரேவண்னாவின் சித்தப்பாவுமான குமாரசாமி இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், “நானாக இருந்தாலும் சரி.. எனது தந்தை தேவகவுடாவாக இருந்தாலும் சரி.. பெண்களை மரியாதையாகவே நடத்தியுள்ளோம். யாராவது பாதிக்கப்பட்டு வந்திருந்தால்.. அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவே முயற்சி செய்து இருக்கிறோம்.ஹாசன் விவகாரத்தில் விசாரணையின் உண்மைகள் வெளிவரட்டும். யாராக இருந்தாலும் சரி… தவறு செய்து இருந்தால் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடம் இல்லை. எனவே, விசாரணையில் உண்மை வெளிவரட்டும். அதன்பிறகு நான் கருத்து சொல்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.