No menu items!

17 நாள் பயங்கரம் – தப்பியது எப்படி?

17 நாள் பயங்கரம் – தப்பியது எப்படி?

ஒரு அறைக்குள் ஒரு நாள் அடைத்து வைத்தாலே நமக்கு மூச்சு முட்டும். எப்போது வெளியே வருவோம் என்று தவியாய் தவிப்போம். மனதளவிலும், உடல் அளவிலும் சோர்ந்து போய்விடுவோம். ஆனால் பூமிக்கு அடியில் உள்ள சுரங்கத்தில் 17 நாட்கள் சிக்கிக்கொண்ட நிலையில் நேற்று மீட்கப்பட்டிருக்கிறார்கள் சுரங்கப் பணியாளர்கள்.சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அங்கிருந்து நேரடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த 17 நாட்களும் தாங்கள் எப்படி இருந்தோம் என்பதை விளக்கி இருக்கிறார் மீட்கப்பட்ட சுரங்கப் பணியாளர்களில் ஒருவரான சம்ரா ஒராயோன். “நான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி மாவட்டத்தை சேர்ந்தவன். என்னுடன் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் இந்த சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார்கள். எங்களுக்கு மாதச் சம்பளமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி நாங்கள் சுரங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது, திடீரென்று பெரிய அளவில் சத்தம் கேட்டது. அப்போதே ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதை உணர்ந்தோம். சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தபோது இடிபாடுகளால் சுரங்கத்தின் பாதை மூடப்பட்டிருந்தது. அப்போதே அந்த இடத்தில் நாங்கள் வெளியே வர நீண்ட காலம் ஆகும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் எங்களில் பலருக்கு பசி ஏற்பட்டது. வேறு சிலரை பயம் தொற்றிக்கொண்டது. மொத்தத்தில் எல்லோரும் அமைதியின்றி இருந்தோம். ஆனால் மனம் தளரவில்லை. எப்படியாவது நாம் காப்பாற்றப்படுவோம் என்று நம்பினோம். தண்ணீர் குடித்து பசியை ஆற்றினோம். பிரார்த்தனையில் ஈடுபட்டோம். சுரங்கத்துக்குள் மின்சாரம் இருந்ததால், உள்ளே வெளிச்சமாக இருந்தது. அதனால் எங்களை இருட்டு பயமுறுத்தவில்லை.

ஒரு நாள் முழுக்க எங்களுக்கு தண்ணீரைத் தவிர உணவு ஏதும் கிடைக்கவில்லை. சுமார் 24 மணி நேரத்துக்கு பிறகு மீட்புப்படையினர் எங்களுக்கு பொரியையும், சில விதைகளையும் உணவாக அனுப்பினர். அந்த உணவு எங்கள் பசியை முழுமையாக தீர்க்காவிட்டாலும், நம்மை காப்பாற்ற யாரோ வந்து விட்டார்கள் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. கூடிய சீக்கிரம் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் எங்கள் பொழுதை கழிக்கத் தொடங்கினோம்.

சுரங்கத்தில் சிக்கிய எங்களுக்கு இருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு செல்போன் மட்டுமே. சுரங்கம் மூடியிருந்ததால் அதை வைத்து யாரிடமும் பேச முடியாது. ஆனால் அதை வைத்து லூடோ ஆட முடிந்தது. லூடோ ஆடி பொழுதைக் கழித்தோம். சுரங்கத்துக்குள் மின்சாரம் இருந்ததால் எங்கள் செல்போனை அடிக்கடி சார்ஜ் போட முடிந்தது. மீதமிருந்த நேரத்தில் எங்களுக்குள் பரஸ்பரம் பேசிக்கொண்டோம். நாங்கள் பல மாதங்களாக சுரங்கத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தாலும், பணிச்சுமையால் பரஸ்பரம் அதிகம் பேசிக் கொண்டதில்லை. சுரங்கத்தில் சிக்கிய காலகட்டத்தில் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம்.

சுரங்கத்துக்குள் நிறைய இடங்களில் மலைத் தண்ணீர் இருந்ததால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் முடிந்தது. ஒதுக்குப்புறமான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து காலைக் கடன்களை கழித்தோம். நாங்கள் இப்போது உடல் அளவிலும் மன அளவிலும் நன்றாக இருக்கிறோம். சீக்கிரம் எங்கள் ஊருக்குப் போய் எங்கள் உறவினர்களை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் சம்ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...