‘அது என்ன இரட்டை இலை, மோடியை விட பிரபலமோ?’ என்று பிஜேபி நட்டா நம் ஊர் தலைவர்களிடம் கண்கள் விரிய கேட்டிருக்கிறார். பன்னீரையும் எடப்பாடியையும்விட இரட்டை இலையை அதிமுகவுக்குப் பெற்றுத் தர அண்ணாமலையார் படாதபாடு பட்டார். கட்சி ரெண்டு பட்டாலும் இரட்டை இலையை ஒரு கோஷ்டி பெற்றே தீரவேண்டும் என்பது பிஜேபி முடிவு! பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடியாரை பிறகு பார்த்துக்கொள்ளும் திட்டம் உண்டாம்.
இரட்டை இலையை அதிமுகவுக்கு பெற்று தந்தது திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக நின்ற மாயத்தேவர்தான்! திமுக பிளவுபட்ட உடன் கலைஞருக்கு சோதனையாக திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது! யாருக்குமே அறிமுகமில்லாத வழக்கறிஞர் மாயத்தேவர் பெயரை எம்ஜிஆர் அறிவித்தபோது, மாயத்தேவர் அதிமுக அலுவலகத்துக்கு எதிரே இருந்த பெட்டிக்கடையில், ‘டீ’ குடித்துக் கொண்டிருந்தார்! பாதி டீ குடித்த நிலையில் உள்ளே ஓடினார்!
கட்சி பிளவுபட்டபோது, போராட்டம் நடத்திய அதிமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அந்த நிலையில் வழக்கறிஞரான மாயத்தேவர், நீதிமன்றத்தில் வாதாடி அவர்களை வெளியே கொண்டு வந்தார்! அதனால் எம்ஜிஆருக்கு அவர் மீது ஈடுபாடு ஏற்பட்டது!
திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் சுயேச்சைதான்! 16 சின்னங்கள் அவருக்கு காட்டப்பட்டன. 7ஆவது சின்னமான இந்த இரட்டை இலையை தேர்ந்தெடுத்து விட்டு எம்ஜிஆருக்கு தெரிவித்தார்!
எம்ஜிஆர் காரணம் கேட்டார். “வேறு நல்ல சின்னங்கள் இருக்கிறதே! இது ‘வீக்’ ஆக இருக்கிறதே”! என்றார் எம்ஜிஆர்.
“சார், சர்ச்சில் வெற்றி சின்னமாக இரண்டு விரலை காட்டினார். இரட்டை இலைக்கு அடையாளமாக நீங்கள் அதே வெற்றி சின்னத்தை காட்டலாம்” என்று மாயத்தேவர் சொல்ல, ‘ஓகே’ என்றார் புன்சிரிப்புடன் எம்ஜிஆர்.
நிருபர்களிடம் மாயத்தேவர் இன்னொரு காரணம் கூறினார். “காலையில் கோயில் பிரசாதங்கள் வந்தன. துளசி, வில்வம் என்று புனித இலைகள்…! அதில் வில்வம் மூன்று இலைகளுக்கு பதிலாக இரட்டை இலையுடன் இருந்தது. சி்ன்னங்களை பார்த்தபோது ‘அது’ ஞாபகம் வந்தது” என்றார் மாயத்தேவர்.
தேர்தல் சின்னங்களில் இரட்டை இலையும் உதயசூரியனும் சுவர்களில் வரைய ரொம்பவும் ஈஸியாக இருந்தன.
அன்றைய நிதியமைச்சர் சி.எஸ்., “இது உதயசூரியனா? மலைவாயில் விழும் மறையும் சூரியன்” என்று கேலி செய்து பார்த்தார். உதயசூரியன் சின்னம் யாருடைய ஐடியா!
1950களில் கலைஞரின் ‘உதயசூரியன்’ என்ற பிரசார நாடகம் நடந்தது. அதிலிருந்துதான் சின்னம் உதித்தது! 1957 தேர்தலில் சுயேச்சை அந்தஸ்து என்பதால் சி்ன்னம் கிடைக்கவில்லை. அப்போது சின்னம் சேவல். வன்னியர் தலைவர் ஏ.கோவிந்தசாமி 1952இல் உதயசூரியனில் நின்று ஜெயித்தார். அவர் பின்னர் திமுகவில் சேர்ந்தார். அண்ணாவின் விருப்பப்படி உதயசூரியன் சின்னத்தை கோவிந்தசாமி திமுகவுக்கு வழங்கினார் என்கின்றனர்.
1957இல் கலைஞர் குளித்தலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்தார். கலைஞர்தான் சுவரில் உதயசூரியன் சின்னத்தை எழுத வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதற்காக ஒரு ஓவியரை தஞ்சாவூரில் இருந்து அழைத்து சென்றார்.
காங்கிரஸ்காரர்கள் தங்கள் சின்னத்தை வரையப் படாதபாடு பட்டார்கள். நுகத்தடியுடன் இரட்டை காளை. ஒரு காளை மாட்டுச் சின்னம் வரைவதற்குள் ஆயிரம் உதயசூரியன்கள் உதித்து விட்டன. அசல் காளைகள் பூட்டிய வண்டிகளை அழைத்து காங்கிரஸ் ஊர்வலம் நடத்தியது பாவம்.
காங்கிரஸ் பிளவுபட்டபோதும் இரு கோஷ்டிக்கும் கிடைத்த சின்னம் – பாவம்தான். வடநாட்டுப் பெண் ராட்டை சுற்றுவது காமராஜருக்கு. பசுவும் கன்றும் இந்திராவுக்கு. காமராஜர் வெறும் ராட்டை மட்டும் இருக்குமாறு கேட்டார். அது பிறகு கிடைத்தது.
இந்திரா காங்கிரசுக்கு கை சின்னம் கிடைத்தது பற்றி ஒரு ‘கதை உண்டு’… பதவி இழந்த இந்திரா அம்மையார் காஞ்சிபுரத்தில் கிணற்றடியில் அன்றைய சங்கராச்சாரியாரான மகா பெரியவரைச் சந்தித்தார். ஜி.கே. மூப்பனார் ஏற்பாடு. இந்திரா விடை பெற்றபோது மகா பெரியவர் கை தூக்கி ஆசிர்வதித்தார். “ஆகா இந்த கையை சின்னமாக்கலாம்” என்று இந்திராவுக்கு உதயமாயிற்றாம். நம்பலாம்!
பிஜேபி, ஜனசங்கமாக இருந்தபோது கை விளக்கு சின்னம். பிறகு பெயரும் மாறி தாமரையும் சின்னமாகிவிட்டது. அத்வானி மட்டும் விளக்கே இருக்கட்டும் என்று சொல்லிப் பார்த்தார்.
முதல் தேர்தல் சமயத்தில் படிக்காதவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே சின்னங்கள் தேவைப்பட்டது. இன்னமும் சின்னங்கள் தேவைப்படுகின்றன. உண்மையில் வேட்பாளரை விட சின்னங்களின் சக்தி பெரிதாக இருக்கிறது. உதயசூரியனை திமுக விடவே விடாது.
இரட்டை இலையை அதிமுகவும் கைவிடாது. அவர்கள் கைவிட பிஜேபியும் விடாது.