இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.01க்கும், டீசல் லிட்டருக்கு ரு. 96.21க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் இன்று 75 காசுகள் விலையுயர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.91-க்கும், டீசல் ரூ.92.95-க்கும் விற்கப்படுகிறது.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – முதல்வர் ஸ்டாலின்
இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி, சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் இல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது” என்றார்.
விருதுநகரில் பட்டியலின இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார். இந்த சம்பவத்தில் திமுக பிரமுகர் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. அவர் திமுகவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி தேர்வு
மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமைக் கழக செயலாளர் பொறுப்புக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால் துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஏப்ரல் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு
மார்ச் 24 2020 முதல் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் அந்தக் கட்டுப்பாடுகள் மார்ச் மாதம் இறுதியுடன் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முகக் கவசம் அணிவதையும் கைகள் கழுவுவதையும் தொடர வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.