துபாயில் நடைபெற்று வரும் வேர்ல்டு எக்ஸ்போ சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் புறப்பட்டு செல்கிறார். தமிழ்நாடு அரங்கை நாளை அவர் திறந்துவைக்க உள்ளார்.
முன்னதாக நாளை காலை 10 மணிக்கு சர்வதேச பொருளாதார மந்திரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
கல்விக் கட்டணத்துக்காக மாணவர்களை வற்புறுத்தக் கூடாது:
இந்த பருவத்தின் கல்விக் கட்டணைத்தைச் செலுத்தாத மாணவர்களை வகுப்பறையிலிருந்து வெளியே நிற்க வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைத்து பள்ளிகளும், இதை உறுதி செய்யும் வகையில் உறுதி சான்றிதழ் வழங்கவும் தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கவுதமி வங்கிக் கணக்கு – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
நடிகை கவுதமி மூலதன ஆதாய வரியில் 25 சதவீதத்தை செலுத்தும் பட்சத்தில், அவரது ஆறு வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கும்படி வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11 கோடியே 17 லட்சம் என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், எனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுபட்டுள்ளதால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஹிஜாப் விவகாரம் – மறுதேர்வுக்கு மறுப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கர்நாடக அரசு தடை விதித்திருந்த நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த 400 இஸ்லாமிய மாணவிகள், தேர்வுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது சீருடையில் மட்டுமே பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தேர்வுகளை புறக்கணித்த மாணவிகளுக்காக மறுதேர்வு நடத்த இயலாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியுள்ளார்.