No menu items!

வாவ் ஃபங்ஷன்: உற்சாகமாய் நடந்த திராவிட திருமணம்

வாவ் ஃபங்ஷன்: உற்சாகமாய் நடந்த திராவிட திருமணம்

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பெரிய வீட்டுக் கல்யாணம், தென்சென்னை திமுக எம்பியும் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் – ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சந்திரசேகர் இணையர் இளைய மகள் டாக்டர் நித்திலா திருமணம்தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் சில துளிகள் இங்கே…

மணமகள் வீட்டார் மட்டுமல்ல மணமகன் வீட்டாரும் திமுக குடும்பம்தான். மணமகன் டாக்டர் கீர்த்தன், திமுக தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் ஆர். மகேந்திரன் புதல்வன். இதனால், ‘சீர்திருத்தத் திருமணங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது திராவிட திருமணம்’ என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மணமகள் தாய் மாமன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு என்பதால் திமுக அமைச்சர்கள், எம்.பி.கள், எம்.எல்.ஏ.கள், மாவட்ட செயலாளர்கள் என ஆளும் கட்சியினர் அனைவரும் அட்டெண்ட் ஆகியிருந்தார்கள். இன்னொரு பக்கம் அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர், மதிமுக, விசிக, அமமுக என அனைத்து கட்சி தலைவர்களும்கூட கட்சி பேதமின்றி வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். திரை நட்சத்திரங்கள், உயரதிகாரிகள், கலை – இலக்கிய ஆளுமைகளும் சங்கமித்திருந்தனர். இதனால், முதல்நாள் வரவேற்பு, இரண்டாம் நாள் காலை திருமணம், மாலை வரவேற்பு என இரண்டு தினங்களும் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திர கன்வென்சன் செண்டர் மாநாடு போல் விழாக்கோலத்தில் இருந்தது.

முதல்நாள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மு.க. அழகிரி, மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி, மருமகன், பேரன் என குடும்பத்துடன்  வந்திருந்தார். அழகிரி குடும்பத்தினரை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், சந்திரசேகர் ஐபிஎஸ், மணப்பெண்ணின் தாய்மாமன் அமைச்சர் தங்கம் தென்னரசு என குடும்பத்தோடு சென்று வரவேற்றார்கள். அழகிரி மேடைக்கு வந்தபோதும் அதே ராஜ மரியாதைதான். அவர் மேடையை விட்டு கீழே வந்து அமர்ந்தபோது அமைச்சர் தங்கம் தென்னரசு அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். அழகிரி காரில் ஏறி புறப்படும்போதும் அதே மாதிரி அனைவரும் நின்று வழி அனுப்பி வைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

திமுகவை சேர்ந்தவர்கள் நிறைய பேர் மண்டபத்தில் மு.க. அழகிரி உடன் செல்பி எடுத்துக்கொண்டார்கள். அவரும் முகம் சுளிக்காமல் எல்லோருக்கும் போஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

திரைப்பட இயக்குநர் பாலாவும் அவரது முன்னாள் மனைவி முத்து மலரும் தனித்தனியாக வந்திருந்தனர். விவாகரத்துக்குப் பின்னர் தன் மகளை முதன்முதலாக கண்ட பாலா குழந்தையை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவருடைய இளைய மகன் ப. ஜெயபிரதீப் உடன் வந்திருந்தார். ப. சிதம்பரம், சீமான், திருமாவளவன், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், நத்தம் விஸ்வநாதன், வைகைச் செல்வன் ஆகியோர் வருகை தந்திருந்த மற்ற கட்சி பிரமுகர்களில் முக்கியமானவர்கள்.

‘என்றும் மார்க்கண்டேயன்’ சிவகுமார் தன்னுடைய மகளுடன் வந்திருந்தார். நடிகர் பார்த்திபன் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகர்களுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் போஸ் கொடுத்து கலகலப்பூட்டினார்.

நடிகர்களுக்கு இணையாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலுடனும் இளைஞர்கள் செல்பி எடுக்க விரும்பியது சிறப்பு.

நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரி. ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ பாடலை இரண்டு முறை பாடி அப்ளாஸ் வாங்கினார். அவ்வளவு பரபரப்பான திருமண நிகழ்ச்சியிலும் நித்யஸ்ரீ கச்சேரி கேட்க ஒரு கூட்டம் உட்கார்ந்து இருந்தது. அதில் சின்ன குழந்தைகள் இருந்ததும், நித்யஸ்ரீயிடம் ஓடி ஓடிச்சென்று அவர்கள் ஆட்டோகிராப் வாங்கியதும் வியப்பை ஏற்படுத்தியது.

கூட்டம் அதிகமாக இருந்தாலும் குழப்பம் இல்லாமல் பந்தி நடைபெற்றது. பஃபே, வாழை இலை பந்தி  என இரண்டு சிஸ்டமும் இருந்தது. பரிமாறப்பட்ட எல்லா அயிட்டங்களையும் சாப்பிடத்தான் நம் வயிற்றில் இடம் இல்லை.

இரண்டாம் நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடியும்போது இரவு 12 மணி ஆகிவிட்டது. அதுவரைக்கும் திருமணத்துக்கு வந்து திரும்பிய அனைவருக்கும் தவறாமல் தாம்பூலப் பை கொடுக்கப்பட்டது.

படங்கள்: ஆர்.கோபால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...