மிஷ்கினின் சினிமா மட்டுமல்ல மிஷ்கினும் வித்தியாசமானவர். மனதில் பட்டதை மறைக்காமல் பேசக்கூடியவர். இந்த பேட்டியே அதற்கு சாட்சி.
மிஷ்கின் படங்களில் எப்போதும் ஒரு டார்க்கான உலகத்தையும் கதைகளையுமே பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் என்ன?
‘டார்க் டேல்ஸ்’தான் எனது படங்கள். மனித மனதிற்குள் இருக்கும் அவலங்களை, வாழ்வின் கருப்பு பக்கங்களைத் தான் எனது படங்கள் பிரதிபலிக்கின்றன. ஒரு மனிதன் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவது அல்லது வெளிச்சம் எங்கிருந்து வருகிறது ஆகிய விஷயங்களைப் பற்றி தான் என் படங்கள் பேசும். இது போல் கதைகளை வைக்க வேண்டும் என்று கான்ஷியஸாக நான் செய்வதில்லை. ஆனால், அவை அவ்வாறே அமைகிறது.
உங்கள் படங்களில் மன்னிப்பு என்பது கதையின் முக்கியமான களமாக அமைவதன் காரணம் நீங்கள் படிக்கும் புத்தகங்களா அல்லது உங்களைப் பொறுத்தவரை அனைத்து குற்றங்களுமே மன்னிக்க முடிந்தவை தானா?
மன்னிப்பு என்பதை நம் தினசரி வாழ்வில் நாம் கண்டிப்பாக பெற வேண்டிய, வழங்க வேண்டிய ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். என் தாய் – தந்தை முதல், பெண் தோழிகள், ஆண் நண்பர்கள் என அனைவருமே என்னை மன்னித்திருக்கிறார்கள், மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். அனைத்து குற்றங்களும் மன்னிக்க முடிந்தவையா இல்லையா என்ற கருத்து பல பேருக்கு மாறுபடும். ஒரு கலைஞனாக என்னைப் பொருத்தவரை எல்லாவற்றையும் மன்னிக்க முடிந்தவையாகத்தான் நான் கருதுகிறேன்.
உங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள், வழக்கமான தமிழ் சினிமா சண்டைக் காட்சிகளில் இருந்து வித்தியாசமாக உள்ளதே, ஏன்?
ஒரு ஹீரோவிற்கு இரு கைகள் தான் இருக்கும். அவனை 10 பேர் ஒரே நேரத்தில் அடிப்பது சாத்தியம்; ஆனால், அவற்றை இவன் இரு கைகளால் தடுப்பது என்பது அசாத்தியம். இதனால்தான் நான் என் கதைகளில் ஒவ்வொருவராக வந்து தாக்குவது போன்ற காட்சிகளை அமைக்கிறேன்.
மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் அனுபவம் எப்படி இருந்தது?
நான் இயக்கும் படங்களின் படப்பிடிப்பில் ஒரு இயக்குநராக எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். ஆனால், மற்றவர்களின் படங்களுக்கு நடிகனாக மட்டும் செல்லும் போது, எனக்கு ஷாட் ரெடி என்றால்தான் வேலை. எனவே, அது மிகவும் போர் அடிக்கும்.
உங்க அடுத்த படம் ‘பிசாசு 2’; அதைத் திரையில் எப்போது பார்ப்போம்?
ஷூட்டிங் முடிந்துவிட்டது. நன்றாக வந்திருக்கிறது. ஆண்ட்ரியாவும் பூர்ணாவும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். நிறைய ‘ஏ’ சீன்ஸ் உள்ளது. தயவு செய்து குழந்தைகளை கூட்டீட்டு வந்துவிடாதீங்க. இது பெரியவர்களுக்கான படம்.
‘பிசாசு 2’வில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அந்த அனுபவங்கள் எப்படி இருந்தன?
நான் ஷூட்டிங்கில் இருந்தேன். விஜய் சேதுபதி, திடீரென அழைத்து, நான் இரண்டு நாட்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டார். ஒரே ஒரு கதாபாத்திரம் இருந்தது. அதை இவருக்காக மெருகேற்றி நடிக்கச் செய்தோம். விஜய் சேதுபதி எனக்கு மிகப் நெருங்கிய நண்பர். நாங்கள் இணைந்து அமர்ந்தால் சினிமாவை பற்றி பேசவே மாட்டோம், மற்ற கதைகளைப் பற்றித்தான் பேசுவோம்.
படங்கள் : ஆர்.கோபால்