No menu items!

வணக்கத்துக்குரிய மேயர்…!

வணக்கத்துக்குரிய மேயர்…!

மேயர் வணக்கத்துக்குரியவரா, மாண்புமிகுவா, அல்லது அடைமொழி தேவையில்லாதவாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

ஒன்று நிச்சயம் அவர்கள் பதவிக் காலத்தில் செய்யப் போகும் செய்ய செயல்களே வணக்கத்துக்குரியவர்களா இல்லையா என்பதை தீர்மானிக்கப் போகிறது.

தாங்கள் ஆளும் வர்க்கம் என்பதற்காக வெள்ளைக்காரர்கள், ஹிஸ் எக்ஸலன்ஸி, மை லார்ட், ஹானரபிள், ஒர்ஷிப்ஃபுல் – இப்படி எல்லாம் தங்கள் பதவிக்கு முன்பு போட்டுக் கொண்டு ‘எங்களை மதியுங்கள்’ என்று நம்மை கட்டாயப்படுத்தினார்கள்.

சுதந்திரம் பெற்று ஆட்சியில் ஏறிய காங்கிரஸ் தலைவர்கள் இந்த பட்டங்களை தூக்கி எறிந்தார்கள். பழைய அடிக்கல் எங்காவது இருந்தால் தேடிப் பாருங்கள். ‘முதலமைச்சர் கு.காமராஜ்’ என்றும் ‘கவர்னர் ஸ்ரீ ஸ்ரீ பிரகாசா’ என்றும் இருக்கும்! கட்டியம் கூறும் பட்டங்கள் இருக்காது!

மாண்புமிகு, மேதகு என்பதெல்லாம் ஆட்சிக்கு வந்தவர்கள் பிறகு சூட்டிக் கொண்டார்கள். கடவுளை ‘அருள்மிகு’ என்று சற்று வித்தியாசப்படுத்தினார்கள்!

’மதிப்புக்குரிய’ மேயர்கள் கதை பரிதாபமானது. மஸ்டர் ரோல் ஊழலில் அவர்களும் சிக்கினார்கள்.
ஒரு மேயரை தி.மு.க. தலைவர்களே ‘என்ன சாமி..! ரிப்பன் பில்டிங்கை சக்கரம் கட்டி இழுத்துண்டு போயிட்டியாமே?’ என்று கேலி செய்வது உண்டு!

ஒரு மேயர் லிப்ட்டுடன் மாடி வீடு கட்டிக் கொண்டார்! ஒரு மேயர் வெளிநாட்டு தூதர்கள் விடைபெற்றால், விருந்து கொடுப்பார்! அவர் விட்டுச் செல்லும் விலை உயர்ந்த ஃப்ரிட்ஜ், டைனிங் டேபிள், ஏ.சி. எல்லாவற்றையும் பரிசாகப் பெறுவார்!

முதன் முதலாக மேயராக (அப்போதெல்லாம் சாதி அடிப்படையில் சுழற்சியாக மேயர் பதவி வரும்) ஒரு வசதியற்ற பிரமுகர் வந்தபோது, குடும்பத்துடன் எம்.ஜி.ஆரை சந்தித்து ஆசி பெற்றார். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விருந்து கொடுத்து, பண முடிப்பும் அளித்து, “ஏதாவது உதவி வேண்டும் என்றால் என்னிடம் வாருங்கள். ஊழல் செய்யக் கூடாது! அண்ணா பெயரை கெடுத்துவிடாதீர்கள்!” என்றார். எம்.ஜி.ஆர். அட்வைஸ் காற்றில் பறந்ததையே பின்னர் பார்த்தோம்.

அது இருக்கட்டும்! இன்றைய மாநகராட்சி மேயர் கவுன்சிலர்கள் எப்படி? பதவியேற்ற அடுத்த நாளே காரில் பறக்கிறார்கள்!

கலைஞர் ஒருமுறை சென்னை கவுன்சிலர்கள் கூட்டத்தை அறிவாலயத்தில் கூட்டியிருந்தார். அங்கே வந்த கலைஞர் வரிசையாக நின்ற கார்களைப் பார்த்து திகைத்தே போனார்!

“ஏதோ தொழில் முனைவோர்கள் கூட்டம் நடப்பது போல வெளியே கார்களாகவே இருக்கிறதே! ஒரு சைக்கிளைக் கூட காணோமே?” என்றார்! அதுமட்டுமல்ல, சைக்கிளில் போய் மக்களை சந்தியுங்கள் என்றார்!
தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்த ஒரு கவுன்சிலர், மூப்பனாரிடம் கார் சாவியைக் கொடுத்து, தன் புது காருக்கு பூஜை போட அழைத்தார்! “ரிசல்ட் வந்த மறுநாளே காரா?” கொஞ்சம் நாள் கழித்தாவது பயன்படுத்து” என்றார் மூப்பனார் கோபமாக!

மேயர், கவுன்சிலர்கள் நகரை சிங்காரமாக ஆக்குவதற்கு முன் தங்களை சிங்காரித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது!

மேயருக்கு ஒரு பட்டம் முன்னால் போட வேண்டும் என்றால், “மதிப்புக்குரிய நகர முதல் மக்கள் தொண்டர்” என்று கூறி அழைக்கலாம்.

அவர்கள் கடமை என்ன என்பதை நினைவூட்ட உதவும்!

கவுன்சிலர்கள், நகராட்சி உறுப்பினர்கள் என்பதற்கு பதில் – ‘மக்களுக்கு துணை நிற்போர்’ எனலாம்!
பட்டங்கள் போட்டு வாக்களித்த மக்களை விட தாங்கள் ‘உசத்தி’ என்று நினைக்க வைத்துவிடக் கூடாது!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...