அனைத்து கட்சிகளும் முட்டி மோதும் பஞ்சாப் தேர்தலில் ஜொலிக்கும் சில நட்சத்திர தலைவர்களைத் தெரிந்துகொள்வோம்.
காங்கிரஸின் கை ஓங்கியிருக்கும் மாநிலங்களில் ஒன்று பஞ்சாப். இம்முறை அதை மாற்றியே ஆகவேண்டும் என்ற முயற்சியில் பாஜகவும், இரண்டு கட்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் தாங்கள் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று ஆம் ஆத்மியும் படு வேகத்தில் செல்கின்றன. அதே நேரத்தில் ஆட்சியை தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறது காங்கிரஸ். இப்படி அனைத்து கட்சிகளும் முட்டி மோதும் இந்த தேர்தலில் ஜொலிக்கும் சில நட்சத்திர தலைவர்களைத் தெரிந்துகொள்வோம்.
சரண்ஜித் சிங் சன்னி
காங்கிரஸ்
இந்த தேர்தலில் பஞ்சாப் காங்கிரஸின் முகமாக இருப்பவர் சரண்ஜித் சிங் சன்னி. பஞ்சாப்பின் முதல்வரான முதல் தலித் என்பதால் சன்னியை வைத்து தலித்துகளின் வாக்கை கொள்முதல் செய்யலாம் என்று கணக்குப் போடுகிறது காங்கிரஸ்.
ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவரான சன்னி, தனது ஆஸ்தான ஜோதிடர் சொன்னதை மீறி எதையும் செய்யமாட்டார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். ஜோதிடரின் பேச்சைக் கேட்டு தன் வீட்டு வளாகத்துக்குள் பரிகாரத்துக்காக இவர் யானையைக் கொண்டுவந்து கட்டிய சம்பவமும் நடந்துள்ளது.
மிக எளிமையான, எளிதில் அணுகக்கூடிய மனிதர் என்பது இவரது பிளஸ் பாயிண்ட். அதே நேரத்தில் 2018-ம் ஆண்டி பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாஅச எஸ் எம் எஸ் அனுப்பியதாக இவர் மீது வந்த ‘மீ டூ’ புகாரை தூசி தட்டி எடுத்துள்ளன எதிர்க்கட்சிகள்.
நவஜோத் சிங் சித்து
காங்கிரஸ்
பஞ்சாப் அரசியலில் புரியாத புதிர் நவஜோத் சிங் சித்து. கிரிக்கெட் வீரராக இருந்த காலகட்டத்திலும் சரி, அரசியலில் நுழைந்த பிறகும் சரி, இவர் எந்த கணத்தில் என்ன நினைக்கிறார் என்பதைக் கணிப்பது கடினமாகவே இருந்துள்ளது.
ஆரம்பத்தில் பாஜகவில் சேர்ந்த சித்து, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகினார். ஆம் ஆத்மி கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுகள் நடந்துகொண்டு இருக்கும்போதே காங்கிரஸில் நுழைந்தார். அங்கு சேர்ந்ததிலிருந்து முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த சித்து, ஒரு கட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸின் தலைவரானார். பின்னர் இவர் கொடுத்த குடைச்சல்களால் அமரீந்தர் சிங் வெளியேற, சரண்ஜித் சிங் சென்னியிடம் முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இது பிடிக்காத சித்து காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், ராகுலும் பிரியங்காவும் செய்த சமாதானத்தால், விலகல் முடிவைக் கைவிட்டு காங்கிரஸ் தலைவராகத் தொடர்கிறார்.
நக்கல், நையாண்டி நிறைந்த வாய்ஜாலத்தால், மக்களைக் கட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்தவரான சித்துதான் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கி என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நண்பராக இவரை அடையாளப்படுத்தி பாஜக பிரச்சாரம் செய்வது காங்கிரஸுக்கு நெருக்கடியைத் தரக்கூடும்.
கேப்டன் அம்ரீந்தர் சிங்
பஞ்சாப் லோக் காங்கிரஸ்
கடந்த ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் அதி முக்கிய தலைவராக இருந்தவர் கேப்டன் அம்ரீந்தர் சிங். சித்து கொடுத்த தொல்லைகளால் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து விலகிய அம்ரீந்தர் சிங், அதே வேகத்தில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். கூடவே பாஜகவுடன் கூட்டணியும் சேர்ந்திருக்கிறார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் அதிருப்தியாளர்களை வைத்து ஆட்சியைப் பிடித்ததுபோல், பஞ்சாபில் அம்ரீந்தர் சிங்கை வைத்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்புகிறது பாஜக. பாட்டியாலா ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரான கேப்டன் அம்ரீந்தர் சிங், முன்னாள் ராணுவ வீரர். பள்ளித் தோழர் ஒருவரால் ராஜிவ் காந்திக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரீந்தர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து விலகி அகாலி தளத்தில் இணைந்த அம்ரீந்தர், பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். தற்போது மீண்டும் தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தன்னுடன் இருப்பதாகக் கூறும் அம்ரீந்தர் சிங், இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருப்பார்.
சுக்பீர் சிங் பாதல்
அகாலி தளம்
கடந்த தேர்தல் வரை பாரதிய ஜனதா கட்சியின் கூட்டாளியாக இருந்த அகாலி தளம் கட்சி, மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் அகாலிதளம், 100 ஆண்டுகளுக்கு மேலான கட்சி என்ற பாரம்பரியத்தைக் கொண்டது. இதன் தலைவரான சுக்பீர் சிங் பாதல், இம்முறை தங்களால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது அப்பா பிரகாஷ் சிங் பாதல் பல ஆண்டு காலத்துக்கு பஞ்சாப்பின் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகவந்த் மான்
ஆம் ஆத்மி
தொலைப்பேசி வாயிலாக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.பஞ்சாப்பின் சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன்களில் ஒருவரான பகவந்த் மான், தொலைக்காட்சிகளில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சங்க்ரூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்று 2 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகைச்சுவை மன்னனான இவர், இந்தத் தேர்தலில் வெற்றிப் புன்னகை செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.