No menu items!

நியூஸ் அப்டேட்: காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோர் மறுப்பு

நியூஸ் அப்டேட்: காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோர் மறுப்பு

காங்கிரஸ் கட்சியில் இணைய பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக பல்வேறு  ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் வழங்கியிருந்தார். இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் அக்கட்சியின் தலைவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.  பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணையவும் அக்கட்சியில் அமைக்கப்பட உள்ள அதிகாரம் பொருந்திய செயற்குழுவில் இடம்பெறவும் பிரசாந்த் கிஷோர் மறுத்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும்   பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர்,  “சிறப்பான ஒரு தலைமையும் வெற்றிபெற வேண்டும் என்ற கூட்டு எண்ணமும்தான் கட்சிக்கு இப்போது என்னைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பது என் தாழ்மையான கருத்து” என்று தெரிவித்துள்ளார்.


துணை வேந்தர்கள் நியமனம்தமிழக அரசுக்கு சீமான் ஆதரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வழிவகை செய்திடும் சட்டமுன்வடிவை சட்டசபையில்  இயற்றியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன். உயர்கல்வியில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான சட்டமுன்வடிவைக் கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில், அதனையேற்று செயலாக்கம் செய்திருக்கும் தி.மு.க. அரசின் முடிவு மிகச்சரியான முன்நகர்வாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தமிழகச் சட்டசபையை  துளியும் மதியாது, அதன் மாண்பினையும், மதிப்பினையும் குலைத்திடும் வகையில் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வரும் தமிழக கவர்னரின் எதேச்சதிகாரப் போக்குக்கும், அதிகார அத்துமீறலுக்கும் முடிவுகட்டி, மாநிலத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட வேண்டுமெனும் நிலைப்பாட்டில் நாம் தமிழர் கட்சி உறுதிபூண்டு நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்படும்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.


வரி பாக்கி: இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி அலுவலகம் நோட்டீஸ்

சென்னையில் உள்ள மத்திய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து, மார்ச் 28-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று இசைஞானி இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்பு சட்டத்தின்படி, விசாரணைக்காக ஆஜராக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த துறை ரீதியான நிபுணர் குழு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது. இந்த நிலையில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


நாள்தோறும் 10,000 டாலர் அபராதம்: டொனால்ட் டிரம்ப்க்கு நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்கள் வழங்க நியூயார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு, முதலில் மார்ச் 3-ம் தேதி வரையும், பின்னர் மார்ச் 31-ம் தேதிவரையும் அவகாசம் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், டிரம்ப் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக கண்டனம் தெரிவிக்‍கப்பட்டது. இந்நிலையில், டிரம்புக்‍கு நாள்தோறும் 10,000 டாலர் அபராதம் விதித்து நியூயார்க்‍ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10,000 அமெரிக்க டாலர் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் வாரம் 7 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


பூனைக் குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை தூக்கி வந்த தேயிலை தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டி ஒன்று கிடந்துள்ளது. இதனை பூனைக் குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில் தூக்கி எடுத்து வந்துள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அது பூனைக் குட்டி இல்லை சிறுத்தை குட்டி என கூறியதை அடுத்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு ஏற்கெனவே அது கிடந்த அதே பகுதியில் விட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...