No menu items!

ஐபிஎல் ஏலம்: தோனி போட்ட கணக்கு

ஐபிஎல் ஏலம்: தோனி போட்ட கணக்கு

மிகப்பெரிய நட்சத்திர வீரர்களுக்கு மற்ற வீரர்களுடன் இணைந்து ஆடுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், சராசரி வீரர்கள் எளிதில் மற்ற வீரர்களுடன் மனமொன்றி ஆடுவார்கள் என்பது தோனியின் கணக்கு.

“சென்னை கோட்டை சென்டிமென்ட் கோட்டை” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது சிஎஸ்கே. ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகளெல்லாம் புதிய வீரர்களை மாய்ந்து மாய்ந்து எடுக்க, சென்னை மட்டும் முதலில் தன் பழைய வீரர்களுக்கு பச்சைக்கொடி காட்டியது. தீபக் சாஹர், பிராவோ, அம்பட்டி ராயுடு, ராபின் உத்தப்பா என்று கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து அவர்களை தக்கவைத்தது. அதன் பிறகு மிஞ்சிய பணத்தைத்தான் புதிய உறுப்பினர்களுக்காக செலவழித்தது.

கடந்த ஆண்டில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, “சிஎஸ்கே அணியில் பலருக்கும் வயதாகிவிட்டது. இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை வடிவமைக்கும் விதத்தில் இளம் வீரர்கள் பலரை அடுத்த ஆண்டில் சேர்ப்போம்” என்றார். சொன்னதை நிரூபிக்கும் வகையில் 25 வயதுக்கு உட்பட்ட 9 புதிய வீரர்களை சென்னை அணி வாங்கியுள்ளது. இப்படி ஒரு பக்கம் அனுபவமுள்ள சீனியர் ஆட்டக்காரர்கள், மறுபக்கம் இளம் வீரர்கள் என சரிவிகித கலவையாக சென்னை சூப்பர் கிங்ஸ் உருவெடுத்துள்ளது.

எல்லாம் சரி… கோப்பையை வெல்ல இந்த அணி ஓகேவா என்ற கேள்வி சிஎஸ்கே ரசிகர்களிடம் உள்ளது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் வலுவான வீரர்களை வாங்க, சென்னை மீண்டும் உத்தப்பா, ராயுடு, பிராவோ வகையறாக்களிலும், அனுபவம் இல்லாத இளம் வீரர்களுக்கும் பணத்தை செலவு செய்துள்ளது இந்த கேள்வியை அதிகரித்துள்ளது.

ஆனால், “தோனியின் அனுமதி இல்லாமல் இந்த வீரர்களை தேர்வு செய்திருக்க முடியாது. இந்த வீரர்களை தேர்வு செய்ததற்கு தோனி நிச்சயம் ஒரு காரணத்தை வைத்திருப்பார். தொடக்க ஆட்டக்காரரான டு பிளஸ்ஸியை இழந்ததால், அவருக்கு பதிலாக கான்வாயை சென்னை அணி வாங்கியுள்ளது. அதுபோல் பிராவோவுக்கு வயதாவதால், தேவைப்படும்போது அவருக்கு மாற்றாக பயன்படுத்த தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியஸ் வாங்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்குருக்கு பதிலாக ஷிவம் துபே வாங்கப்பட்டுள்ளார்” என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

பெரிய நட்சத்திரங்கள் வேண்டாம்:

“பெரிய நட்சத்திரங்கள் மீது நம்பிக்கை வைக்காமல், டீமாக ஆடக்கூடிய ஆற்றல் வாய்ந்த வீரர்களை வாங்குவது தோனியின் ஸ்டைல். குறிப்பாக கடந்த காலங்களில் டிவில்லியர்ஸ், கெயில், மேக்ஸ்வெல், பொலார்ட், ரஸ்ஸல், யுவராஜ் சிங் என மிகப்பெரிய நட்சத்திரங்களை மற்ற அணிகள் வாங்கின. ஆனால், சென்னை அணியோ அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத டுபிளஸ்ஸி, ராயுடு, மொயின் அலி போன்ற அணியோடு இணைந்து ஆடும் சாதாரண வீரர்களை வாங்கியது.

மிகப்பெரிய நட்சத்திர வீரர்களுக்கு மற்ற வீரர்களுடன் இணைந்து ஆடுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால், சராசரி வீரர்கள் எளிதில் மற்ற வீரர்களுடன் மனமொன்றி ஆடுவார்கள் என்பது தோனியின் கணக்கு. அந்த கணக்கு இந்த முறையும் தப்பாது. சென்னை அணி நட்சத்திர வீரர்களைக் கொண்ட அணியல்ல. நட்சத்திர வீரர்களை உருவாக்கும் அணி. அதனால் இந்த முறையும் கோப்பையை வெல்லக்கூடிய அணியாகத்தான் இது இருக்கும்” என்கிறார்கள் வல்லுநர்கள்.

இளம் நட்சத்திரம் ஹங்கர்கேகர்

இந்த ஏலத்தில் 2 விஷயங்கள் அதிகம் கவனிக்க வைக்கின்றன. முதல் விஷயம் இளம் வீரரான ஹங்கர்கேகரின் தேர்வு. நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனாயாசமாக சிக்சர்களை விளாசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் ஹங்கர்கேகர். சிக்சர்களை அடிப்பது மட்டுமின்றி, அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகவும் அவர் இருந்துள்ளார். 1.50 கோடி ரூபாய் கொடுத்து இந்த இளம் வீரரை தட்டித் தூக்கியுள்ளது சிஎஸ்கே.

ரெய்னாவை வாங்காதது ஏன்?

அடுத்ததாக கவனிக்க வேண்டுய விஷயம் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது. கடந்த ஐபிஎல் தொடரில் சரியாக ஆடாததாலும், ஐபிஎல் போட்டிக்கு பிறகு அதிக ஆட்டங்களில் ஆடாததாலும் ரெய்னாவை இந்த முறை சென்னை அணி ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இது தனது கடைசி ஐபிஎல் என்பதால், ஜடேஜாவுக்கு சில போட்டிகளில் கேப்டன் பொறுப்பை வழங்கிப் பார்க்க தோனி திட்டமிட்டுள்ளார். சீனியர் வீரரான ரெய்னாவை அணியில் வைத்து இப்படி செய்வதில் சில சிக்கல் இருக்கும் என்பதால், அவரை ஏலம் எடுக்காமல் சென்னை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...