ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு டஃப் கொடுக்கும் அணி மும்பை இந்தியன்ஸ். முகேஷ் அம்பானிக்கு சொந்தமான இந்த அணி, ஐபிஎல் கோப்பையை அதிகமாக 5 முறை வென்றுள்ளது. ஐபிஎல்லில் வெல்வது மட்டுமின்றி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் என பல வீரர்களை உருவாக்கி இந்திய கிரிக்கெட் அணியை பலப்படுத்தியதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பங்கு உண்டு.
ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்றபோதிலும், கடந்த ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் போனது, அந்த அணிக்கு இந்தத் தோல்வி மாறாத வடுவை ஏற்படுத்தியது. அதனால் வலுவான புதிய அணியை கட்டமைக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்றது.
இந்த ஏலத்திலேயே அதிக விலை கொடுத்து (ரூ.15.25) இஷான் கிஷனை வாங்கிய மும்பை இந்தியன்ஸ், டிம் டேவிட் (ரூ8.25 கோடி), ஜோஃப்ரா ஆர்ச்சர் (ரூ.8 கோடி) ஆகியோரையும் வாங்கியுள்ளது. அத்துடன் இளம் வீரர்கள் பலரையும் வாங்கி, அணிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்ட உற்சாகத்தில் ஐபிஎல் களத்தில் இறங்குகிறது.
பலம்:
சென்னைக்கு எப்படி தோனியோ, அதுபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அஸ்திவாரமாய் விளங்குகிறார் ரோஹித் சர்மா. மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் முடிசூட்டிக்கொண்ட பிறகு, இதுவரை அந்த அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளதே இதற்கு சான்று. ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கெய்ரன் பொலார்ட் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பது மும்பை அணியின் பலம். பேட்டிங்குக்கு இணையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து பந்துவீச்சு வரிசையும் ஸ்டிராங்காக உள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர், பும்ரா டைமல் மில்ஸ், ஜெய்தேவ் உனட்கட் என நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் அணியில் உள்ளனர்.
பலவீனம்:
பேட்டிங், வேகப்பந்து வீச்சு ஆகியவற்றில் மும்பை அணிக்கு உள்ள பலம் சுழற்பந்து வீச்சில் இல்லை. ஏற்கெனவே அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்த ராகுல் சாஹர், க்ருனால் பாண்டியா ஆகியோர் கழற்றி விடப்பட்ட நிலையில் இளம் வீரர்களான முருகன் அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோரின் தோள்களில் மிகப்பெரிய சுமை அழுந்திக் கிடக்கிறது. அதேபோல் அதிரடி வீரரான ஹர்திக் பாண்டியாவை கழற்றிவிட்டதும் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவரது இடத்தை வேறு வீரர்களைக் கொண்டு நிரப்ப முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மும்பை அணி இம்முறை கோப்பையை வெல்லவேண்டுமானால், முதலில் இந்த பலவீனங்களைக் களைய வேண்டும்.