No menu items!

ராமதாஸை  சந்தித்து நலம் விசாரித்த  ஸ்டாலின்

ராமதாஸை  சந்தித்து நலம் விசாரித்த  ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்கள் நன்றாக உள்ளன. பயப்படும்படி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகளை எடுக்க வேண்டும் என சொல்லியுள்ளனர். அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தேன்” என்றார்

இதையடுத்து, நண்பகல் 1 மணி அளவில் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பாமக நிறுவனர் ராமதாஸ், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு கண்காணித்து வருகிறார். அவருக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் இரு தினங்களில் அவர் வீட்டுக்குச் செல்வார்” என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்புக்குரிய மருத்துவர் ராமதாஸை சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன். அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உடல்நிலை குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “வைகோ உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்ததுமே நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இன்று மருத்துவமனைக்குச் சென்று, அவரது குடும்பத்தாரிடமும், மருத்துவரிடமும் அவரது சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தேன்” என தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...