இந்திய பிரதமரக பொறுப்பேற்ற பிறகு, ஒரு நிகழ்ச்சியில் தனது பெயர் பொறித்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உடையை அவர் அணிந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
“ஒருமுறை அணிந்த ஆடைகளை மறுமுறை அணியும் வழக்கம் மோடிக்கு இல்லை. உங்களுக்கு அதில் சந்தேகம் இருந்தால் கூகிளில் மோடியின் புகைப்படங்களைப் பாருங்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியின் புகைப்படங்களிலும் ஒவ்வொரு ஆடையை அவர் அணிந்திருப்பது தெரியும்” என்று 2016-ம் ஆண்டில் கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோடியை விமர்சித்தார் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்.
மோடியை விமர்சிப்பதற்காக அவர் அப்படி பேசியிருந்தாலும், அதில் உண்மையும் கலந்திருக்கிறது. மற்றவர்களைக் கவரும் விதத்தில் உடை அணிவதில் மோடிக்கு விருப்பம் அதிகம். நம் நாட்டின் அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சொன்னதும் அவர்களின் உடைகள் நினைவுக்கு வரும். உதாரணமாக நேரு என்றதும் அவரது கோட், இந்திரா காந்தி என்றதும் எளிமையான சேலை, கலைஞர் என்றதும் மஞ்சள் துண்டு, பெரியார் என்றதும் லுங்கி, எம்ஜிஆர் என்றதும் வெண்ணிற தொப்பி நினைவுக்கு வரும். ஆனால் நரேந்திர மோடியை எந்தவொரு தனிப்பட்ட உடையோடும் ஞாபகப்படுத்த முடியாது.
ஒரு நாளில் 4 நிகழ்ச்சிகள் இருந்தால், அந்த 4 நிகழ்ச்சிகளுக்கும், அதன் தன்மைக்கேற்ப உடை அணிந்து செல்வது மோடியின் வழக்கம். பிசினஸ்மேன்களை சந்திக்க ஒரு உடை. விவசாயிகள் கூட்டமென்றால் மற்றொன்று, மாநாடு என்றால் முற்றிலும் வேறு உடை என்று இடத்துக்கு ஏற்ப உடை அணிவது மோடியின் வழக்கம். அதிலும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய நிகழ்ச்சிகளில் மோடியின் உடை மிடுக்கு இன்னும் கூடும். அந்தந்த நேரத்தில் எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ, அந்த மாநில உடைகளில் மிடுக்காக தோன்றி மக்களைக் கவர்வார் மோடி.
இந்திய பிரதமரக பொறுப்பேற்ற பிறகு, ஒரு நிகழ்ச்சியில் தனது பெயர் பொறித்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உடையை அவர் அணிந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த உடை பல கோடி ரூபாய்க்கு ஏலம்போனது. இந்தச் சூழலில் தனது உடைகளுக்காக மோடி ஆண்டுதோறும் எத்தனை லட்சம் ரூபாயை செலவு செய்கிறார் என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ரோஹித் சபர்வால் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், “உடை என்பது பிரதமரின் தனிப்பட்ட விஷயம். அதனால் இந்த தகவலைக் கூற முடியாது. மேலும் தனது உடைக்கான அனைத்து செலவுகளையும் பிரதமரே பார்த்துக்கொள்கிறார்” என்று குறிப்பிட்டது.
“வறுமையான சூழலில் வளர்ந்ததாலோ என்னவோ, சிறு வயது முதலே உடைகள் மீது மோடிக்கு பிரியம் அதிகம். எந்த சூழலிலும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் உடை அணிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உடைக்காக தனது சொந்த பணத்தைத்தானே அவர் பயன்படுத்துகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது” என்கிறார்கள் பாஜகவினர்.
சரியோ தவறோ, இதுவரை இருந்த பிரதமர்களைப் போலல்லாது மேற்கத்திய தலைவர்களைப் போல அவர் மிடுக்கக உடை அணிந்து வலம்வரும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. உலக நாடுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதியாக பிரதமர் இருக்கிறார். அவரது உடைகள் மூலமாவது இந்தியா மிடுக்காக தெரியட்டும்