தமிழ்நாடு வந்து சென்றிருக்கிறார் பிரதமர் மோடி.
கடந்த சில வருடங்களாக பிரதமர் மோடியோ அமித் ஷாவோ தமிழ்நாடு வந்தால் ஒரு சடங்கு நடக்கும். அதிமுக தலைவர்கள் அவர்களை சந்திக்க வரிசைக் கட்டுவார்கள். பிரிந்திருந்தபோதும் சரி இணைந்திருந்த போதும் சரி பாஜகவின் மேலிடத் தலைவர்களை சந்திக்க ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பதறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். இந்த முறையும் அது நடந்திருக்கிறது.
இந்த முறை இரண்டு தலைவர்களும் இன்னும் அதிக பதற்றத்தில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் இருவரும் பக்கத்தில் நின்று பிரதமரை வரவேற்ற காட்சியைக் காணும்போது தெரிகிறது.
தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி அதிமுகதான். மக்கள் அளித்த வாக்குகளின்படி பார்த்தால் அதிமுகவுக்குதான் இரண்டாவது இடம். ஆனால் சமீப சில மாதங்களாக அதிமுக எதிர்க்கட்சியாக என்னென்ன காரியங்களை செய்திருக்கிறது என்று பார்த்தால்…பூஜ்யம்.
எதிர்க்கட்சியாக அதிமுக போராட்டங்கள் நடத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றை அதிமுக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் என்று இரண்டாக பிரிந்து நிற்பது மட்டுமே இதற்கு காரணமல்ல. இருவருமே தனித்தனியே போராட்டங்களை நடத்தியிருக்கலாம். அந்தப் போராட்டங்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்ளவே அவர்களுக்கு உதவியிருக்கும்.
ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
மாறாக, பாஜக பல போராட்டங்களை நடத்தியது. அரசுக்கு எதிராக செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்திக் கொண்டே இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடியா, அண்ணாமலையா என்ற சந்தேகம் முன்பு எழுந்துக் கொண்டிருந்தது. இப்போது எழவில்லை. அந்த இடத்தை அண்ணாமலைக்கு எடப்பாடி கொடுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
இதற்கு காரணம் என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கின்றன. மாநிலத்தில் பரம எதிரியான திமுக ஆட்சியில் இருக்கிறது. மத்தியில் பாஜக எதையும் செய்யும் அதிகாரத்தில் இருக்கிறது…இவையெல்லாம்தான் பாஜகவிடம் பணிந்து நிற்க காரணமா?
அதிமுகவின் தலைவியாக ஜெயலலிதா இருந்தபோது அவர் மீது தீவிரமான வழக்குகள் இருந்தன. தேர்தலில் மிக மோசமாக தோற்றிருக்கிறார். ஆனாலும் அவர் டெல்லி தேசியக் கட்சிகளிடம் கெஞ்சிக் கொண்டு நின்றதில்லை.
ஜெயலலிதா மிகப் பெரிய ஆளுமை. அதனால் அவரால் அப்படி செயல்பட முடிந்தது. ஆனால் எடப்பாடியும் பன்னீரும் ஜெயலலிதாவா என்ற கேள்வி எழுகிறது.
உண்மைதான் எடப்பாடியும் பன்னீரும் ஜெயலலிதா அல்ல.
ஆனால் ஜெயலலிதாவுக்கு இந்த பலத்தை தந்தது என்ன என்பதை பார்க்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு பலம் தந்தது அதிமுகவின் தொண்டர் பலம். ஒன்றரைக் கோடி தொண்டர்கள் என்று அக்கட்சியின் தலைவர்களே குறிப்பிடுகிறார்கள். ஒரு தேர்தலில் தோற்றாலும் மறு தேர்தலில் பிரம்மாண்டமாக வெற்றி பெறக்கூடிய தொண்டர் பலம் அதிமுகவுக்கு உண்டு.
அந்தப் பலம் இப்போது அதிமுகவுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
2021 தேர்தலில் அனைத்து அம்சங்களும் எதிராக இருந்த நிலையில் அதிமுகவால் 66 இடங்களை வெல்ல முடிந்தது. கூட்டணியாக 75 இடங்களைப் பிடித்தார்கள்.
இந்த வெற்றி எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கிடைத்த வெற்றி.
ஆனால் இன்று 66 இடங்களைப் பிடித்த கட்சியைப் போலவா அதிமுக செயல்படுகிறது?
தன்னுடைய இடத்தை பாஜகவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்த கட்சி இன்று விமான நிலைய வாசல்களில் காத்து நிற்பது தமிழ் நாட்டு அரசியலின் சோகம்.
தங்கள் தலைவர்கள் மாற்றுக் கட்சித் தலைவரை வரவேற்க விமான நிலையத்தில் காத்து இருக்கிறார்கள். அவரை சந்திக்க நேரம் கேட்டு வாசலில் நிற்கிறார்கள் போன்ற பிம்பங்கள் அதிமுக தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் மனம் வெறுக்க செய்யும்.
இன்று இருக்கும் பலத்தை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டால் நாளை, விமான நிலையத்தின் வாசலுக்குகூட செல்ல முடியாது என்பதை அதிமுகவின் இரண்டு தலைவர்களும் உணர வேண்டும்.