ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இம்முறை புதிதாக களம் இறங்கும் அணி குஜராத் டைட்டன்ஸ். அந்த வகையில் பார்த்தால் ஐபிஎல்லின் இளங்கன்று. சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் இந்த அணியை வாங்கியுள்ளது. இதன் தலைமைப் பயிற்சியாளராக ஆசிஷ் நெஹ்ராவும், சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சியாளராக ஆசிஷ் கபூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் அணியை வாங்கிய கையோடு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில், ரஷித் கான் ஆகிய மூன்று வீரர்களை ஏலத்துக்கு முன்பே குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில், லாகி ஃபெர்கசன் (ரூ.10 கோடி), ராகுல் திவாட்டியா (ரூ.9 கோடி), முகமது ஷமி (ரூ6.25 கோடி), டேவிட் மில்லர் (ரூ.3 கோடி), ஜேசன் ராய் (ரூ.2 கோடி) ஆகியோரை வாங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே அனுபவம் வாய்ந்த பல அணிகள் இருக்க, இளம் கன்றைப் போல இந்த தொடருக்குள் துள்ளிப் பாய்கிறது குஜராத் டைட்டன்ஸ்.
பலம்:
டி20 கிரிக்கெட்டுக்கு தேவை பவர் ஹிட்டிங் என்றால், அதில் ஹிட் அடிக்கும் அணியாக இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். இந்தியாவின் அதிரடி பினிஷராகக் கருதப்படும் ஹர்திக் பாண்டியாவைக் கேப்டனாக வைத்ததில் இருந்தே இதைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர் குஜராத் டைட்டன்ஸ் உரிமையாளர்கள். ஜேசன் ராய், சுப்மான் கில் ஆகிய 2 ஹிட்டர்கள் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாய் இருக்க, அடுத்தடுத்து டேவிட் மில்லர், ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர், ராகுல் டிவாட்டியா என்று அதிரடி வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
ஒருபக்கம் பேட்டிங்கில் அதிரடி காட்டும் குஜராத் டைட்டன்ஸ் அணி, மறுபக்கம் ரஷித் கான் இருப்பதால் சுழற்பந்து வீச்சிலும் வலுவான அணியாக உள்ளது.
பலவீனம்:
அதிரடி வீரர்கள் பலர் இருந்தபோதிலும், இன்னிங்ஸ் முழுவதும் அணியின் பேட்டிங்கை ஒருங்கிணைத்துச் செல்லும் நிதானம் கொண்ட வீரர்கள் யாரும் இல்லாதது குஜராத் அணிக்கு பெரும் பலவீனமாக உள்ளது. அதேபோல் ஃபெர்கசன், முகமது ஷமி, ரஷித் கான் ஆகியோரைத் தவிர வேறு சிறந்த பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாததும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலவீனமாக கருதப்படுகிறது.