இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு அடுத்த சவாலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்தப் போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி ஆடவுள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சிக்காக இந்திய அணி இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டது.
சேஸிங்கில் கெட்டியாக உள்ள இந்திய அணியைப் பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் போட்டிகளில் வெற்றி சதவீதம் குறைவாகவே உள்ளது. இதை சரிசெய்வதற்காகவும், முக்கிய போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தால் சமாளிப்பது எப்படி என்று கற்பதற்காகவும் இன்று டாஸ் வென்றும் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
பொதுவாக பலவீனமான அணிகளுக்கு எதிராக வலிமையான அணிகள் முதலில் பேட் செய்தால் மலையளவு ரன்களைக் குவிக்கும். ஆனால் அதனால் இப்போட்டியில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நெதர்லாந்து அணியின் துடிப்பான பீல்டிங்கால் அது நடக்கவில்லை. இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் போட்டியில் 82 ரன்களைக் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி கடைசிவரை அவுட் ஆகாமல் 62 ரன்களைக் குவிக்க, அவருக்கு துணையாக ரோஹித் சர்மாவும் (53 ரன்கள்), சூர்யகுமார் யாதவும் (51 ரன்கள்) அரைசதங்களை எடுத்தனர்.
டி20 போட்டிகளைப் பொறுத்தவரை வெற்றிக்கு 180 ரன்களை எடுக்கவேண்டும் என்பது அத்தனை கஷ்டமான டார்கெட் இல்லைதான். ஆனால் கத்துக்குட்டியான நெதர்லாந்து அணிக்கு இது மிகப்பெரிய இலக்காக இருந்தது. 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. இப்படி சம வலுவுள்ள அணிகள் ஆடாததால், சுவாரஸ்யமில்லாத ஆட்டமாக போட்டி இருந்தது.
இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய ஒரே விஷயம், நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான விக்ரம்ஜித் சிங் ஒரு இந்தியர் என்பதுதான். விக்ரம்ஜித் சிங்கின் தாத்தா குஷி சீமா ஒரு பஞ்சாபி. ஜலந்தரை அடுத்த சீமா குர்த் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 1980-களில் பஞ்சாப்பில் தீவிரவாதம் அதிகரித்த சமயத்தில் தனது குடும்பத்துடன் நெதர்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார் குஷி சீமா. அங்கு வாகனம் ஓட்டி பிழைப்பை தொடங்கிய அவர், பிற்காலத்தில் டிராவல்ஸ் வைத்து நடத்தும் அளவுக்கு முன்னேறியுள்ளார். பின்னர் தொழிலை மகன் ஹர்பிரீத்திடம் ஒப்படைத்துவிட்டு பஞ்சாப்புக்கே திரும்பியுள்ளார் குஷி சீமா.
நெதர்லாந்தில் சம்பாதித்தாலும், மகனுக்கு பஞ்சாப்பில் மணம் முடித்துள்ளார் குஷி சீமா. பின்னர் ஹர்பிரீத் நெதர்லாந்தில் இருந்தாலும், அவரது மனைவி பஞ்சாப்பில்தான் இருந்துள்ளார். இந்த சமயத்தில் பஞ்சாப்பில் பிறந்த விக்ரம்ஜித் சிங், 8 வயதில் நெதர்லாந்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள கிளப்களில் ஹர்பிரீத் கிரிக்கெட் ஆடி வருவதால், அங்கு பயிற்சி பெறும் வாய்ப்பு விக்ரம்ஜித்துக்கு கிடைத்துள்ளது. அவர் நன்றாக ஆட, மீண்டும் இந்தியாவுக்கே அனுப்பி கிரிக்கெட் பயிற்சி கொடுத்துள்ளார் ஹர்பிரீத் சிங். அந்த பயிற்சிதான் இன்று அவரை நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆட வைத்துள்ளது.