இப்போது லிவிவ் நகரம் முழுக்க எல்லோருமே அவரவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆபத்து என்றால் சைரன் சவுண்ட் கொடுப்போம். உடனே நீங்கள் ஃபேஸ்மெண்ட் போய் தங்கிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்கள்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கிவிட்டன. கடல், வான், தரை என மூன்று வழிகளிலும் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவம் பல திசைகளில் இருந்தும் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், ராணுவ தளங்களை தாக்கி அழிப்பதே இலக்கு என ரஷ்யாவும் அறிவித்துள்ளது அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்க சென்ற தமிழக மாணவர்கள் நிலை குறித்து அவர்கள் பெற்றோர்கள் பதட்டமடைந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் படிக்கும் தமிழக மாணவிகளுடன் பேசினோம். மேற்கு உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான லிவீவ்வில் மருத்துவம் படிக்கும் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த மாணவி கிருஷ்ணவேணி, ”உக்ரைனில் இப்போது பிரச்சினை குறைவான இடங்களில் ஒன்று லிவிவ். அந்தவகையில் இங்கே இப்போது வரை நாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம். ஆனால், ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் எப்போதும் இந்த நிலை மாறலாம்.
இப்போது லிவிவ் நகரம் முழுக்க எல்லோருமே அவரவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆபத்து என்றால் சைரன் சவுண்ட் கொடுப்போம். உடனே நீங்கள் ஃபேஸ்மெண்ட் போய் தங்கிக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்கள்.
உக்ரைனில் இருந்து போலந்து சென்று, அங்கிருந்து தமிழ்நாடு திரும்ப திட்டமிட்டுள்ளோம். இதற்கான வழிகள் எங்களுக்கு தெரியாமல் இருந்தது,. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உக்ரைனில் இருந்து நாங்கள் பாதுகாப்பாக வெளியேற அரசு உதவும் என்று கூறியுள்ளது எங்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது” என்றார்.
சென்னையைச் சேர்ந்த மற்றொரு மருத்துவ மாணவியான நட்சத்திரா ரமணன், “ரொம்ப நம்பிக்கையுடன் நாங்கள் இங்கே படிக்க வந்தோம். ஓராண்டு கூட முடியவில்லை. அதற்குள் இப்படியாகிவிட்டது. இதனால் எங்கள் படிப்பு, எதிர்காலம் பற்றிதான் எங்கள் பெற்றோர் கவலையடைந்துள்ளார்கள். உக்ரைனில் இப்போதுள்ள இந்த போர்ச்சூழல் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று நம்புகிறோம்” என்றார்.
அதேநேரம், உக்ரைன் தலைநகரில் உள்ள இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்றும், டாக்ஸி பேருந்துகள் எதுவும் இல்லாததன் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் பெயர் வெளியிட விரும்பாத சில தமிழக மாணவர்கள் தெரிவித்தனர். அரசு அறிவித்துள்ள வாட்ஸ் அப் எண்களில் தொடர்புகொண்டால் அதிகாரிகள் யாரும் எடுப்பதில்லை என்றும் சில மாணவர்கள் வருந்துகிறார்கள்.