ஏடிஎம் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் இந்தியர் அல்ல. ஆனால் இந்தியாவில் பிறந்தவர். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இவரது பெயர் ஜான் ஷெப்பர்ட் பாரன். இந்தியாவில் உள்ள ஷில்லாங் நகரில் 1925-ம் ஆண்டில் பிறந்தார். இந்தியாவில் பிறந்தாலும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான ஜான் ஷெப்பர்ட் பாரன், பிற்காலத்தில் தன் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்தபடி 1967-ம் ஆண்டில் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
நாம் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமானால் அதற்கு கார்டைச் சொருகி 4 இலக்கம் கொண்ட பின் நம்பரை அழுத்த வேண்டும். ஆனால் முதலில் 6 இலக்கங்களைக் கொண்ட பின் நம்பரைத்தான் ஜான் ஷெப்பர்ட் பாரன் வடிவமைத்திருந்தார். ராணுவத்தில் பணியாற்றியபோது தனக்கு வழங்கப்பட்ட 6 இலக்க அடையாள எண்ணை இதற்கு அவர் முதலில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதை அவரது மனைவி ரசிக்கவில்லை. எல்லோராலும் எப்போதும் 6 இலக்க எண்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. அதனால் 4 இலக்க எண்ணாக அதை மாற்றலாம் என்று அவரது மனைவி கூறியிருக்கிறார். மனைவியின் சொல்லைத் தட்டி பழக்கமில்லாத ஜான் ஷெப்பர்ட் பாரனும் பின் நம்பரை 4 இலக்க எண்ணாக மாற்றினார். இன்று உலக அளவில் 0000, 1111, 1234 ஆகிய எண்கள் அதிக அளவில் பின் நம்பர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.