தமிழ்நாட்டில் இப்போது 22 பல்கலைக்கழகங்கள்! சுய ஆட்சியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பல!
முன்பு இங்கே இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்கள்தான்! சென்னை பல்கலைக்கழகமும் அண்ணாமலை பல்கலைக்கழகமும்!
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள் நிறுவியதுதான் அண்ணாமலை பல்கலைக்கழகம்.
பொதுவாக நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த தனவந்தர்கள் கோயில்களைத்தான் கட்டி தமிழகம் கண்டிருக்கிறது. ராஜா சர் அவர்களும், வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களும் கல்விக் கோயில்களைக் கட்டினார்கள்!
சென்னைப் பல்கலைக்கழகம் நீண்ட காலம் ‘முதலியார் யுனிவர்சிட்டி’ என்றுதான் உலகெங்கும் அறியப்பட்டது! 25 ஆண்டுகள் அதன் துணைவேந்தராக ஆட்சி செய்தார் டாக்டர் லட்சுமணசாமி முதலியார். இங்கே பட்டம் பெற்று மேற்படிப்புக்கு வெளிநாடு சென்றால் ‘ஓ முதலியார் யுனிவர்சிட்டியில் படித்தவரா’ என்று இருகரம் நீட்டி வரவேற்ற அளவுக்கு கல்வித் தரம் உயர்ந்து காணப்பட்டது!
லட்சுமணசாமி முதலியார் – இராமசாமி முதலியார் இருவரும் ஆற்காடு இரட்டையர்கள் என்று புகழ்பெற்றவர்கள். லட்சுமணசாமி முதலியார் மகப்பேறு சிகிச்சையில் பெரும் வெற்றி கண்டவர். ராமசாமி முதலியார் ஹைதராபாத் திவானாக இருந்து வியக்க வைத்தவர்.
சுதந்திரம் அடைந்த நேரத்தில் காஷ்மீரில் படையெடுத்து தோல்வி கண்டு பாகிஸ்தான் பிரச்னை கிளப்பிய நேரத்தில், ஐ.நா. சபையில் இந்திய தரப்பு வாதங்களை முன்வைக்க பண்டித நேருவால் அழைக்கப்பட்டவர் ராமசாமி முதலியார். அவர் ஐ.நா. சபையில் நிகழ்த்திய ஆங்கில உரை ஒரு அரசியல் அற்புதம்!
சென்னை பல்கலைக்கழகத்தின் கண்ணியத்தை உயர்த்தி பிடித்த, ஏ.எல். முதலியார் – தமிழக மேல் சபையில் எதிர்கட்சி தலைவர்! ஒரு துணைவேந்தர் இன்று அரசை எதிர்ப்பது சாத்தியமா?!
தமிழக கல்வி அமைச்சராக சி.சுப்பிரமணியம். ‘தமிழால் முடியும்’ என்ற புத்தகம் எழுதியவர். கல்வித் துறையிலும் தமிழ் ஆட்சி செய்ய விரும்பியவர். வளர்ந்து வரும் திமுக. செல்வாக்கை முறியடிக்கும் மறைமுக நோக்கம் அதில் உண்டு!
கல்லூரிகளில் தமிழை போதனா மொழியாக்கும் அவரது திட்டத்துக்கு மேலவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் லட்சுமணசாமி முதலியார்.
தமிழ் போதனா மொழியாவதும், தபால் வழி கல்வி முறையையும், மாலை நேரக் கல்லூரிகளையும் ஏற்க மறுத்து, ‘கல்வித் தரம் குறையும்.. பட்டங்கள் பெறுவதில் ஊழல் தலைதூக்கும், ஆங்கில அறிவுக்கு முற்றுப்புள்ளி விழுந்தால், உலகில் கல்வித் துறையில் ஏற்படும் மாறுதல்களை இழக்க நேரிடும்’ என்று அடுக்கினார் அவர்.
சி.எஸ். – லட்சுமணசாமி முதலியார் இருவருக்கும் வாதப் பிரதிவாதங்கள் சூடாக நடந்தன. ஒரு கட்டத்தில் சி.எஸ். சொன்ன கருத்து அந்த மேதமை மிக்க துணைவேந்தரை மனம் புண்படச் செய்தது!
மறுநாள் செய்தி பத்திரிகைகள் சி.எஸ்.ஸை கடுமையாகக் கண்டித்தன.
அன்று பிற்பகல் நடந்த மேலவை கூட்டத்தில் துணைவேந்தரிடம் தொண்டை கம்ம – கரகரத்த குரலில் மன்னிப்பு கேட்டார் சி.எஸ். ‘நான் உங்கள் மகன் மாதிரி. புண்படுத்தி பேசியதற்கு மன்னியுங்கள்’ என்றார்!
ஆனால் பின்னர் தமிழக அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. ‘துணைவேந்தர்கள் இரு முறைக்கு மேல் பதவி வகிக்க’ புது சட்டம் தடை விதித்தது.
அப்போது டாக்டர் லட்சுமணசாமி முதலியார் 22 ஆண்டுகளாக அப்பதவி வகித்து வந்தார்.
முதலமைச்சர் காமராஜ் கல்வி அமைச்சர் சி.எஸ்.ஸை தன் அறைக்கு அழைத்தார்!
“இந்த சட்டம் இப்போது கொண்டு வரவேண்டாம்! முதலியார் அவர்கள் 22 வருடங்களாக துணைவேந்தர். இன்னும் ஒரு முறை துணைவேந்தராக ஆனால் – 25 வருடங்கள் முடிப்பார். வெள்ளி விழா கொண்டாடிய வேந்தர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கட்டும். அந்த மேதைக்கு அந்த சிறப்பு தேவை அல்லவா?” என்றார்.
அந்த சட்டம் அப்போது கொண்டுவரப்படவில்லை.
டாக்டர் லட்சுமணசாமி முதலியார் வெள்ளிவிழா வேந்தராக பெருமை பெற்றார். தமிழகம் அவரை கொண்டாடியது!